ஞாயிறு, 11 ஜனவரி, 2009

முஸ்லிம் பெண்களின் நிலையும் அவர்கள் கூறும் சாக்ப்போக்கும்?

இஸ்லாமும் பெண்களும் என்று விவாதம் வரும்போது பிற மத சகோதரர்களாலும் , ஏன் பாமர முஸ்லிம்களாலும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு விடயமாக முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 'பலதாரமணம் ' (Polygyny) உள்ளது.

உலகில் மிக அதிகமாக விவாதிக்கப்பட்ட விஷயங்களுள் ஒன்றின் கருப்பொருளாக 'பலதாரமணம் ' (Polygyny) என்பதும் இருக்கிறது.

எந்த அளவுக்கு அது விளங்கிக் கொள்ளப்படாததாக இன்னமும் இருந்து வருகிறதோ அந்த அளவுக்கு அது ஒரு கடினமான சப்ஜெக்ட் அல்ல.

பலதாரமணத்தின் நோக்கத்தையும் , அது செயல்படுத்தப்படுவதின் காரண காரியத்தையும் விளங்கிக் கொள்வது அப்படி ஒன்றும் சிரமமான ஒன்றல்ல.

மேலும் ஒரு விசித்திரமான விஷயம் என்னவென்றால் , எந்த சமூகத்தை நோக்கி பலதாரமண எதிர்ப்பு என்ற ஆயுதம் வீசப்படுகிறதோ அந்த சமூகத்தில் மற்ற சமூகங்களை விட பலதாரமணம் குறைவான சதவீதத்திலேயே இருந்து வருவதுதான்.

மற்ற சமுதாயத்தவரால் 'வைத்து 'க் கொள்ளப்படுகிற பெண்களின் எண்ணிக்கை கணக்கிடப்படாமல் போவதும் , முஸ்லிம்களால் சட்டபூர்வமாக (மிகக் குறைந்த சதவீதத்திலிருந்தபோதும்) மனைவியாக்கிக் கொள்ளப்படுபவள் முறையான கணக்கெடுப்பில் சேர்ந்து விடுவதும்தான் இந்த சமுதாயத்தை இந்த விஷயத்தில் முன்னிறுத்தி விடுகிறது.

தன் முதுகில் இருக்கும் பெரிய வடுவை விட அடுத்தவன் முகத்தில் இருக்கும் சிறிய மச்சம் எளிதில் பார்வைக்கு கிடைப்பது போல்தான் இதுவும்.

முதலில் பலதாரமணத்தின் அடிப்படையையும் , வரலாற்றில் அதன் ஆளுமையையும் புரிந்து கொள்வது நல்லது.

பலமணம் ( Polygamy) என்பது இரு வகைப்படும். ஒரு ஆண் பல மனைவியரைக் கொண்டிருப்பது இதில் முதல் வகை.

அதற்கு ஆங்கிலத்தில் Polygyny என்று பெயர். ஒரு பெண் பல கணவன்களைக் கொண்டிருப்பது இரண்டாவது வகை. இதனை ஆங்கிலத்தில் Polyandry என்று சொல்வார்கள்.

ஐந்து ஆண்களை கணவர்களாகக் கொண்டிருந்த மஹாபாரதக் கதையின் நாயகி பாஞ்சாலியையும் , விவாகரத்து பெறாமலே அடுத்தடுத்து ஆண்களைத் திருமணம் புரிந்து கொள்ளும் மேற்கத்திய கலாச்சார யுவதிகளையும் இரண்டாவது வகைக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

மேற்கண்ட இரு வகைகளில் முதல்வகை மட்டுமே இஸ்லாத்தில் நிபந்தனையோடு ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவது வகையானது பெண்ணுரிமை பேசும் இன்றைய புரட்சிப் பெண்களால் கூட ஏற்றுக் கொள்ள முடியாதது என்பது தெளிவு.

இந்த பலதாரமணம் ( Polygyny) என்பது அரேபியாவில் இஸ்லாம் அறிமுகமான பிறகுதான் இவ்வுலகில் நடைமுறைக்கு வந்தது என்று கூறுவது வரலாற்று அபத்தம்.

இதற்கு மாறாக வரலாற்றில் தொன்று தொட்டு பலதாரமணம் வழக்கிலிருந்து வந்தது என்பதுதான் உண்மை.

ஆப்ரஹாம் மூன்று மனைவிகளையும் , சாலமன் நூற்றுக்கணக்கான மனைவிகளையும் பெற்றிருந்ததை வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

யூத மதத்தில் கூட Gersham ben yehudah என்ற மதகுரு அதற்கு எதிராக ஒரு பிரகடனத்தை வெளியிடும் வரை ஆண்களின் பலதாரமணம் நடைமுறையில் இருந்தே வந்திருக்கிறது.

இந்துக்களின் வேதங்களில் குறிப்பிடப்படும் ராமனின் தந்தை தசரதன் பல மனைவிகளைக் கொண்டிருந்ததாகவும் , இந்துக்களின் கடவுளாக வர்ணிக்கப்படும் கிருஷ்ணணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்ததாகவும் அவர்களின் வேதங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இஸ்லாமத்தில் பெண்களின் நிலை' என்ற தலைப்பின் கீழ் ஆராய்ச்சி செய்த ஒரு இந்திய கமிட்டி , 1975 -ல் சமர்ப்பித்த தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

" 1951 முதல் 1961 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் நடைபெற்ற பலதாரமணங்களில் , முஸ்லிம்களிடையே நடைபெற்றவை 4.31 சதவீதமாகவும், இந்துக்களிடையே நடைபெற்றவை 5.06 சதவீதமாகவும் இருந்தது".

இந்தியாவில் முஸ்லிம்களைத் தவிரவுள்ள யாவருக்கும் பலதாரமணம் தடைசெய்யப்பட்டிருந்த போதிலும்கூட முஸ்லிம்களை விட இந்துக்களே பலதாரமணத்தில் முன்ணணியில் நிற்பதைத்தான் மேற்கண்ட கணக்கெடுப்பு சுட்டுகிறது.

1954-ல் இந்திய நாடாளுமன்றம் 'ஹிந்து திருமணச் சட்டம்' என்ற ஒன்றை நாட்டில் அறிமுகப்படுத்தும்வரை இந்துக்களிடையே பலதாரமணம் இயல்பாகவே நடைபெற்று வந்திருக்கிறது.

இன்றும்கூட, இந்திய சட்டத்தில் மட்டுமே இந்துக்களின் பலதாரமணம் தடை செய்யப்பட்டிருக்கிறதேயொழிய அவர்களின் வேதங்களில் அவையொன்றும் தடுக்கப்படவில்லை.

இஸ்லாம் ஒன்றும் பலதாரமணத்தை கட்டுப்பாடற்ற ஒன்றாக திறந்து விட்டு விடவில்லை. மனிதனின் உணர்வுகளையும் , சமச்சீரற்ற ஆண்-பெண் விகிதாச்சாரத்தையும் , அதனால் ஏற்படக்கூடிய சமூகக் குழப்பங்களையும் கருத்திற் கொண்டே இஸ்லாம் பலதாரமணத்தை வாய்ப்பளித்திருந்தாலும் கூட அதற்குத் தேவையான கட்டுப்பாடுகளையும் விதிக்கத் தவறவில்லை.

உலகப் பொதுமறை அல்-குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது:

" அனாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் -

இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னாங்காகவோ ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்),

அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள்- இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (அத்தியாயம் 03 ; வசனம் 04)

பலதாரமணத்தை ஆகுமாக்கிக் கொள்ள இஸ்லாம் விதிக்கும் முதல் கட்டுப்பாடு மனைவியரிடையே நீங்கள் நீதமாக நடக்க வேண்டும் என்பது. அது உங்களால் இயலவில்லையென்றால் ஒரு மனைவியோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் அறிவுரை கூறுகிறது.

மனிதன் இயற்கையிலேயே ஆசையின் வழி நடக்கும் பலவீனமான மனங்கொண்டவன் என்பதாலேயே மனைவியரிடையே அவனால் முழுவதும் நீதமாக நடக்க முடியாது என்பதையும் அல்-குர் ஆன் சுட்டிக் காட்டுகிறது.

" நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்துதல் சாத்தியமாகாது.

ஆனால் , (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்கவிடப்பட்டவள் போன்று ஆக்கி விடாதீர்கள் ;

நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால் , நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் , மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்". அத்தியாயம் 04; வசனம் 129)

எனவே , பலதாரமணம் ( Polygyny) இஸ்லாத்தில் கட்டாயமாக விதிக்கப்பட்டதோ அல்லது வலியுறுத்தப்பட்டதோ அல்ல; அனுமதியளிக்கப்பட்ட ஒன்று மட்டுமே என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் திருமணம் புரிவதும், பிரம்மச்சாரியாக வாழ்வதும் எப்படி அவனது விருப்பத்தின்பாற்பட்டதோ, அதுபோலவே அவன் ஒரு பெண்ணைத் திருமணம் புரிவதும், நான்கு பெண்களைத் திருமணம் புரிவதும் இஸ்லாத்தின் பார்வையில் தனிமனிதனின் விருப்பத்தின்பாற்பட்டதே.

பலதாரமணத்தை கடுமையாகவும், கண்மூடித்தனமாகவும் விமர்சித்து வரும் இன்றைய சமூகத்தில் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கி ஒழுக்க வீழ்ச்சிக்கு அடித்தளமிட்டிருப்பது எந்த வகை நியாயம் என்பது விளங்கவில்லை.

முதல் வகையில் ஒரு பெண் தனது அனைத்து உரிமைகளையும் தன்னை மணக்கும் கணவனிடமிருந்து பெற்றுக் கொள்வது சட்டபூர்வமாக்கப் படுகிறது.

இரண்டாம் வகையிலோ , அந்தப் பெண் தன்னிடம் 'வந்து' போகிற ஆண்களிடமிருந்து எந்த உரிமையையும் பெற முடியாது.

அத்தோடல்லாமல், அந்தப் பெண் சமூகத்தில் மதிப்பிழந்தும், பல்வேறு நோய்களின் காப்பகமாகவும் ஆகி விடுகிறாள்.
இதில் எது பெண்களுக்கு சுதந்திரத்தையும் , உரிமையையும் பெற்றுத் தருகிறது என்பதை நியாயவான்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

1 கருத்து:

POWERLINES சொன்னது…

பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட எலியா யார்?

இஸ்லாத்தின் மீது எப்படியேனும் குற்றம் சுமத்தி அதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் இஸ்லாத்தின் மீது ஒரு தவறான கண்னோட்டத்தை உருவாக்கிடவேண்டும் என்ற தவறான எண்ணங்களுடன் தற்போது இணையங்களில் வலம் வந்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் குர்ஆனில் வரலாற்றுத் தவறுகளை கண்டுபிடித்துவிட்டதாகவும், அதன்மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் இல்லை என்று நிரூபனம் ஆகிவிட்டதாகவும் ஒரு அபார கண்டுபிடிப்பை (?) கண்டுபிடித்துவிட்டது போல் சமீபத்தில் தங்கள் வலைத்தளங்களில் எழுதியிருந்தனர்.

அதாவது, திருக்குர்ஆனில் 19 ஆம் அத்தியாயத்தில் யஹ்யா (அலைஹிஸ்ஸலாம்) பற்றிக் குறிப்பிடப் பட்டுகின்றது. நெடுங்காலமாகியும் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காத ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்விடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலாக அல்லாஹ் அவர்களுக்கு யஹ்யா என்ற ஒரு குழந்தையைக் குறித்து நற்செய்தி கூறினான். இதைப் பற்றிக் குர்ஆன் கூறும் பொழுது,

'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை' (அல்குர்ஆன்:19:7)

மேற்கண்ட வசனத்தில் (ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மகனுக்கு வழங்கப்பட்ட பெயரான) யஹ்யா என்ற பெயர் முன்பு எவருக்கும் வழங்கப்படவில்லை என்று அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் கூறுகிறான். இந்த யஹ்யா (அலை) அவர்களை பைபிள் யோவான் ஸ்னானன் (John the Baptist) என்று வேறு ஒரு பெயரில் அழைக்கிறது. (குர்ஆனில் குறிப்பிடப்படப்படாத) பைபிளில் மட்டும் சொல்லப்பட்டுள்ள இந்த யோவான் ஸ்னானன் என்ற பெயர் முன்பு பலருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே யஹ்யா என்ற பெயரின் சிறப்பு குறித்து குர்ஆன் கூறுவது ஒரு தவறான வரலாற்று பிழை என்பது நிரூபணம் ஆகிவிட்டது என்பதும் இவர்களின் குற்றச்சாட்டு.

இவர்களின் இந்த சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டிற்கு எமது சகோதரர்களால் மிகத் தெளிவாக பதில் எழுதப்பட்டுள்ளது. பார்க்க :


குர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும்! - சகோ. தேங்கை முனீப்

யஹ்யாவும், யோவானும் ஒரே பெயரா? - சகோ. அபூமுகை


என்றாலும், இந்த இடத்தில் ஒரு முக்கியமான தகவலை பதிவு செய்ய விரும்புகின்றோம். அதாவது, இன்றைய பைபிளில் உள்ள எல்லா கருத்துக்களையும் எல்லா வரலாற்றுத் தகவல்களையும், அப்படியே குர்ஆன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், பல இடங்களில் குர்ஆன் பைபிளுக்கு மாற்றமான தகவல்களைக் சொல்கின்றது எனபதையும் இன்றைய முஸ்லிம்களும் சரி கிறிஸ்தவர்களும் சரி இருவருமே ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு உன்மை.

இதில் முஸ்லீம்கள் குர்ஆனுக்கு மாற்றமான பல தகவல்களைக் கொண்ட பைபிளை முற்றிலுமாக நிராகரிப்பதற்குக் காரணம் அதில் இடம்பெற்றிருக்கக்கூடிய :
• ஒன்றுக்கொன்று நேர் முரணான வசனங்கள்
• அறிவுக்குப் பொருந்தாத கருத்துக்களைக் கொண்ட வசனங்கள்
• ஓரிறைக் கொள்கைக்கு வேட்டுவைக்கும் கருத்துக்கள்
• வரலாற்று தகவல்களுக்கு முரணான வசனங்கள்
• நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்திற்கு நேர் எதிரான கருத்துக்கள்
• எண்ணற்ற நிறைவேறாத முன்னறிவுப்புகள்
• பலராலும் தங்களுக்கு சாதகமாக ஏற்படுத்தப்பட்ட இடைச் சொருகள்கள்
• இன்றைய பைபிளின் பல புத்தகங்களுக்கு யார் ஆசிரியர் அவர்கள் எந்த காலத்தில் எழுதினார்கள் என்ற விவரம் கிடைக்கவில்லை என்று பைபிளில் அறிஞர்களே ஒத்துக்கொள்ளும் உன்மை
என்பன போன்ற பலவீனங்களை அடுக்கிக்கொண்டு போகும் அளவிற்கு அத்தனை விதமான குறைபாடுகளையும் ஒருங்கே கொண்டிருக்கக்கூடியதாக இன்றைய பைபிள் அமைந்துள்ளது என்பதே!

இப்படிப்பட்ட அனைத்து வகையான குறைபாடுகளை உடைய பைபிளில் சொல்லப்பட்டுள்ள பெயரை வைத்து, அதை குர்ஆனோடு சம்பந்தப்படுத்தி, குர்ஆனில் வரலாற்று பிழை உள்ளது என்று இவர்கள் சொல்வது எப்படி சரியாகும்? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

தற்போது இந்த 'யஹ்யா' என்ற பெயர் சம்பந்தமான இவர்கள் சொல்லக்கூடிய குற்றச்சாட்டச்சாட்டைப் பொருத்தவரையில், யஹ்யா (அலை) அவர்களுக்கு பைபிளில் சொல்லப்பட்டுள்ள பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயர்தான் முன்பு பலருக்கு இருந்ததாக கூறுகின்றார்களே யொழிய 'யஹ்யா' என்ற பெயரில் அதற்கு முன் யாரும் வாழ்ந்ததாக அவர்களால் நிரூபிக்க முடியவில்லை, நிரூபிக்கவும் முடியாது. காரணம் இறைவன் அந்த 'யஹ்யா' என்றப் பெயர்கொண்டவரைத்தான் இதற்கு முன் ஏற்படுத்தவில்லை என்கிறான்.

அடுத்து இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இவர்கள் சொல்லக்கூடிய இந்த 'யஹ்யா' சம்பந்தமான குர்ஆன் வசனம், திருக்குர்ஆனில் வேறு ஒரு இடத்தில் உள்ள வசனத்திற்கு முரண்படுகின்றது என்று சொன்னால் அதை நியாயமானது எனலாம். அல்லது, பைபிளில் குறிப்பிடப்படாத குர்ஆனில் மட்டுமே சொல்லப்பட்ட 'யஹ்யா' என்ற சிறப்புப் பெயர் இதற்கு முன் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது என்ற ஒரு வரலாற்று ஆதாரத்தையேனும் எடுத்துக் காட்டினால் அதையேனும் நியாயமானது எனலாம். மாறாக குர்ஆனில் யஹ்யா என்று ஒரு பெயர் குறிப்பிடப்பட்டு அந்த பெயரைக் கொண்ட (இறைத்தூதரான)வர் இதற்கு முன் இருந்ததில்லை என்று தெளிவாக விளக்கப்பட்டிருக்க, அதற்கு மாற்றமாக (பைபிளில் சொல்லப்பட்டுள்ள) வேறு ஒரு பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயரை வைத்து இந்த யோவான் என்றப் பெயர் முன்பே பலருக்கு இருக்கின்றது என்று சொல்வது எப்படி சரியாகும்? அதுவும் முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்த பைபில் குறிப்பிடக்கூடிய பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயரும், குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள யஹ்யா என்றப் பெயரும் முற்றிலும் மாறுபட்ட பொருளுடையதாக இருக்க இரண்டும் எப்படி ஒரே பெயராகும்?

நாம் இப்பொழுதும் சொல்லுகின்றோம், குழப்பங்கள் நிறைந்த பைபிளில் குறிப்பிடப்படும் பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயரை விட்டுவிட்டுங்கள். குர்ஆனில் உள்ள சிறப்புப் பெயர் என்று குறிப்பிடப்படும் 'யஹ்யா' என்றப் பெயரை அவருக்கு முன் வாழ்ந்தவர்கள் யாருக்காவது (குறிப்பாக எந்த இறைத்தூதருக்காவது) இருக்கின்றது நிரூபித்து விட்டு குர்ஆனை பொய்ப்படுத்தி விட்டோம் என்று வாதியுங்கள். அதை விடுத்து ஏதோ ஆய்வு என்றப்பெயரில் சம்பந்தமில்லாமல் குழப்பங்கள் நிறைந்த பைபிளை குர்ஆனுடன் இணைத்து உளறிக்கொண்டிருப்பது அறிவுடமையாகாது.

அடுத்து இவர்கள் எந்த யஹ்யா (அலை) சம்பந்தமான வசனத்திற்காக பைபிளை ஆதாரமாக வைத்து திருக்குர்ஆனில் தவறு இருப்பதாக குற்றம் சாட்டினார்களோ, அதே பைபிளில் அவர்கள் எடுத்துக்காட்டும் யோவான் ஸ்னானன் சம்பந்தமாக உள்ள குழப்பங்களையும் முரண்பாடுகளையும் பாருங்கள் :
எதிர்ப்பார்க்கப்பட்ட எலியாவும்! யோவானும்!

இயேசுவின் வருகை பற்றி முந்தைய வேதங்களில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். புதிய ஏற்பாடும் இதைக் குறிப்பிடுகின்றது. இயேசு வருவதற்கு முன் எலியா என்பவர் வந்தாக வேண்டும் என்கிறது.

அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள். (மத்தேயு - 17:10-13)

நீங்கள் ஏற்றுக் கொள்ள மனமாயிருந்தால் வரப்போகிறவனாகிய எலியா இவன் தான். காதுள்ளவன் கேட்கக் கடவன். (மத்தேயு 11:14)

வாக்களிக்கப்பட்ட கிறிஸ்துவின் வருகைக்கு முன் எலியா என்பவர் வர வேண்டும். அவர் வந்து விட்டார். அவர்தான் யோவான் என்று இயேசுவே சுறியதாக மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுகின்றன. இயேசுவின் காலத்திலேயே யோவான் (அதாவது எலியா) வந்து விட்டதால் இந்த முன்னறிவிப்பு நிறைவேறிவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் புதிய ஏற்பாட்டின் இன்னொரு அதிகாரம் இதை மறுக்கின்றது.

எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான். (யோவான் 1:19-22)

இங்கே உள்ள முரண்பாடுகளையும் குழப்பங்களையும் நன்கு கவனிக்கவேண்டும். அதாவது, தாமே வரப்போகிற கிறிஸ்து என்பதற்கு சான்றாக 'யோவான்தான் எலியா' என்று இயேசு கூறுகின்றார். இயேசுவால் எலியா என்று அடையாளம் காட்டப்பட்ட யோவான் 'நான் எலியா அல்ல' என்று மறுக்கிறார். இரண்டு செய்திகளுமே கர்த்தரால் அருளப்பட்ட(?) புதிய ஏற்பாட்டிலேயே உள்ளன.

இயேசு கூறுவது போல் யோவான் தான் எலியா என்றால் யோவான் ஏன் அதை மறுக்கிறார்? எலியா ஏன் வரவேண்டும் என்றால் எல்லாவற்றையும் எல்லாவற்றையும் சீர்படுத்தி கிறிஸ்து வரும்போது அவரை மக்கள் ஏற்றுக்கொள்ளும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். மேற்கண்ட இயேசுவின் கூற்றிலிருந்தே இதை அறியலாம்.

யோவான்ஸ்னானன் தான் எலியா என்பதற்கு அதை யோவான் மறுக்க எந்த நியாயமுமில்லை. இயேசுவை அன்றைய மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு எலியா வரவில்லை என்பது தான் தடையாக இருந்தது. யோவான் எலியாவாக இருந்திருந்தால் அவர் தம்மை எலியா என்று பிரகடனம் செய்து, இயேசுவை மக்கள் எளிதில் அடையாளம் கண்டு ஏற்றுக்கொள்ள வழியேற்படுத்தியிருக்க வேண்டும் அவரோ தாம் எலியா அல்லர் என்று மறுக்கின்றார்.

யோவான் கூறியது பொய் என்று வைத்துக்கொண்டால் யோவான் பற்றி 'அவர் எனக்கு முதல்வர், என்னிலும் பெரியவரானார்' (யோவான் 1:30) என்றும் 'ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் தோன்றியதில்லை' (மத்தேயு 11:11) என்றும் யேசு எவ்வாறு புகழ்ந்துரைப்பார்? ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களிலேயே சிறந்தவரும் இயேசுவைவிடப் பெரியவருமான யோவான் நிச்சயம் பொய் சொல்லியிருக்க முடியாது என்பதை இயேசுவின் வாக்குமூலத்திலிருந்தே அறிகிறோம்.

யோவான் கூறியது உண்மை என்றால் இயேசு பொய் சொல்லியிருக்கிறார். அவர் கிறிஸ்துவாக இல்லாமலிருந்தும் தன்னைக் கிறிஸ்து என்று நிரூபணம் செய்வதற்காக எலியா வந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்.

கிறிஸ்தவர்களால் யோவானையும் பெய்யரென்றும் கூற முடியாது. இயேசுவையும் பொய்யரென்று கூற முடியாது. அவர்வாறு கூறினால் கிறிஸ்தவமே ஆட்டம் கண்டு விடும். கிஸ்தவர்கள் இவ்வாறு கூறத் துணியாவிட்டாலும் அவர்களின் புதிய ஏற்பாடு இவ்வாறு கூறுவதை அவர்களால் மறுக்க முடியாது.

இந்த முரண்பட்ட இரண்டில் எது உன்மை என்றாலும் பைபிளில் மனிதக் கரங்கள் விளையாடியுள்ளன என்பது உறுதியாகிவிடும்.

எனவே இது போன்ற ஏராளமான முரண்பாடுகளையும் குழப்பங்களையும் தங்கள் பைபிளிலேயே வைத்துக்கொண்டு, அதுவும் நீங்கள் எந்த யோவானின் பெயரை வைத்து குர்ஆனின் நம்பகத்தன்மையை உரசிப்பார்க்க பைபிளை ஆதராமாக எடுத்தீர்களோ அதே பைபிளிலேயே - அதே யோவானின் வரலாற்றிலேயே - இது போன்ற முரண்பாடுகளை வைத்துக்கொண்டு, குர்ஆனில் தவறு இருக்கின்றது என்று எழுதுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. உங்கள் அனைவருக்கும் நேர்வழி காட்ட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.