ஞாயிறு, 25 ஜனவரி, 2009

தி டாவின்சி கோட்

தி டாவின்சி கோட்' படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை சென்னை ஐகோர்ட்டு நேற்று ரத்து செய்தது. இந்த படத்தை திரையிட ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்க எழுத்தாளர் `டான் பிரவுன்' எழுதிய `தி டாவின்சி கோட்' என்ற புத்தகத்தை தழுவி `தி டாவின்சி கோட்' திரைப்படம் தயாரிக்கப்பட்டது. 65 நாடுகளில் இந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி இந்த படத்தை தமிழ்நாட்டிலும் திரையிட அரசு அனுமதிக்கவில்லை.

இந்த படத்தை திரையிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என்று `சோனி பிக்சர்ஸ், அனுரோசினி பிலிம்ஸ்' ஆகிய பட விநியோக நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

விசாரணை

இந்த வழக்கை முதலில் நீதிபதி எம்.சொக்கலிங்கம் விசாரித்தார். பட நிறுவனங்கள் சார்பில் சீனியர் வக்கீல் சோமையாஜியும், தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனும், சிறப்பு அரசு வக்கீல் பி.வில்சனும் ஆஜரானார்கள்.

மத்திய சினிமா தணிக்கை குழு அனுமதி அளித்த பிறகு படத்தை தடை செய்ய மாநில அரசுக்கு உரிமை கிடையாது என்று வக்கீல் சோமையாஜி வற்புறுத்தி வாதாடினார்.

சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டது என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வற்புறுத்தி வாதாடினார்.

இதன்பின்னர் இந்த வழக்கை நீதிபதி பிரபாஸ்ரீதேவன் விசாரித்தார். இந்த படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை ரத்து செய்து நேற்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:-

கருத்து சுதந்திரம்

`தி டாவின்சி கோட்' புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் உண்மையானவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பழங்கால பொருட்கள், ஆவணங்கள், குணசித்திரங்கள் அனைத்தும் உண்மை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தை தழுவி `தி டாவின்சி கோட்' திரைப்படம் தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த சினிமாவில் வரும் நிகழ்ச்சிகள், கருத்துக்கள் அனைத்தும் வெறும் கற்பனை என்று கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்தவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இந்த படத்தை போட்டு காண்பிக்க விரும்புவதாகவும், இதற்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், படவிநியோகஸ்தர் முதல்-அமைச்சருக்கு மனு கொடுத்துள்ளார்.

ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், ஆராயாமல் இப்படத்துக்கு தடை விதித்துள்ளார். இதுபோன்ற உத்தரவுகள் கருத்து சுதந்திரத்திற்கு அபாயத்தை விளைவிக்கும். கலை படைப்புகளை மூச்சு திணற வைக்கும்.

அபாயத்தை ஏற்படுத்தாது

ஒரு குறிப்பிட்ட சமூக தலைவர்கள் தாங்களாகவே தணிக்கை குழு போன்று நினைத்து செயல்படுவதை அனுமதிக்க முடியாது.

மத்திய சினிமா தணிக்கை குழு என்பது சட்டப்பூர்வமான அதிகாரம் கொண்ட அமைப்பாகும். அந்த அதிகாரம் குறித்து எந்த கேள்வியும் இக்கோர்ட்டில் எழுப்பப்படவில்லை.

மேலும் இந்த சினிமா படைப்பானது பொதுநலனுக்கு எந்த விதத்திலும் அபாயகரமாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது.

கருத்து சுதந்திரமும், படைப்பாளிகளின் சுதந்திரமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அல்லது குறிப்பிட்ட அமைப்பினரின் திருப்தியை அளிக்கும் நோக்கில் இருக்க வேண்டுமா? என்று தான் கேள்வி.

சூழ்நிலை இருக்க வேண்டும்

உள்நோக்கம் கொண்ட சிலர் அடிப்படை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையெல்லாம் ஆராயும்போது அரசு உத்தரவுக்கு எதிராக இக்கோர்ட்டு முடிவெடுக்க வேண்டியுள்ளது.

கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பது அரசின் கடமையாகும். இதில் ஏதாவது கட்டுப்பாடு வகுக்க நேர்ந்தால் அதற்கு கட்டாயம் தடை விதிக்க வேண்டும் என்ற சூழ்நிலை இருக்க வேண்டும்.

ஆனால் இந்த படத்தை பொறுத்தவரையில் அது இல்லை. எனவே அரசு உத்தரவு அடிப்படை சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது.

உரிமையை மறுக்க முடியாது

கிறிஸ்தவ மதத்தில் உள்ள உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் எல்லாம் இந்த படத்தை திரையிட்டால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் என்று சந்தேகம் எழுப்பவில்லை.

இதனால் மத்திய சினிமா தணிக்கைகுழு இப்படத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

மத்திய தணிக்கை குழுவால் அடிப்படை உரிமை பாதிக்கப்படுவதாக இருந்தால் உரிமையை பாதுகாக்க நீதிமன்றங்களை நாடுவது வழக்கம்.

ஆனால் அனுமதி தந்தபிறகும், கருத்து சுதந்திர குரல்வளையை நெரிக்கும் வகையில் மாநில அரசு தடை விதித்தால் இதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் உள்ளது.

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியாது என்ற காரணத்தை மாநில அரசு கூறி அடிப்படை உரிமையை பறிக்க முடியாது.

குறிப்பிட்ட அமைப்பினர் அமைதியை சீர்குலைக்கும் என்று கூறினால் அந்த நிலைமையை மாநில அரசு சமாளிக்க வேண்டும்.

ரத்து

இந்த படத்தை அதிகாரிகள் யாரும் பார்த்ததாக தெரியவில்லை. படத்தை பார்க்காமலேயே தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை இக்கோர்ட்டு ரத்து செய்கிறது.

படம் விநியோகஸ்தர்களுக்கு தமிழக அரசு கோர்ட்டு செலவாக ரூ.1,000 வழங்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


நன்றி- தினத்தந்தி

கருத்துகள் இல்லை: