சனி, 24 ஜனவரி, 2009

பைபிளுக்கு எவ்வளவு நேரம்

மேசைக் கரண்டியளவு தேன் தயாரிப்பதற்கு ஒரு தேனீ 4200 தடவை மலர்களுக்குச் சென்றுவருகிறது. நாளொன்றிற்கு அது ஏறத்தாழ 100 தடவை வெளியே சென்று வருகிறது.

ஒவ்வொரு தடவையிலும் அது சுற்றும் நேரம் 20 நிமிடங்கள்; தேனெடுக்கும் பூக்கள் 400!

அடேயப்பா! எடுத்துக்காட்டுகள் தொகுக்கப்பட்டுள்ள நூலொன்றில் வியப்பிற்குரிய இத்தகவல் மீது எனது கண்கள் விழுந்தபோது, எனது மனது உடனே பைபிளைப் பற்றிச் சிந்திக்கலா யிற்று. பரிசுத்த வேதம் தேனுக்கும் தேன்கூட்டிற்கும் ஒப்பிடப் பட்டுள்ளது (சங் 19:10; 119:103).

ஏறத்தாழ 1500 ஆண்டுகளாக வேதம் எழுதப்பட்டது. பங்குபங்காய் வகைவகையாய்க் கடவுள் பேசினார் (எபி 1:1).

அவர் தமது திருச்சித்தத்தையும் வழிகளையும் "கட்டளை மேல் கட்டளை ... வாக்கியத்திற்குமேல் வாக்கியம்... இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம்" என வெளிப் படுத்தினார் (ஏசா 28:10).

வேறு வார்த்தைகளில் சொன்னால், இரவோடு இரவாக எழுதி மறுநாள் காலையில் வெளியிடப்படும் செய்தித்தாளைப்போல் திருமறை உருவாக்கப்படவில்லை.

தமது புத்தகத்தைக் கடவுள் அவசர அவசரமாய் எழுதவில்லை. ஒருபோதும் திருத்தவோ காலத்திற்கேற்ப மாற்றவோ தேவையில்லாத தன்னிகரற்ற இந்த இலக்கியக் களஞ்சியத்தைத் தயாரிப்பதில் கடவுள் நீடிய பொறுமையுள்ளவராயிருந்தார்.

அனுதின ஆகாரம்

திருமறையில் நமக்குப் பிடிப்பும் அறிவும் குறைவாயிருப்பதற்கு அடிப்படைக் காரணம் நமது பொறுமையின்மையே என்பேன்.

திருமறைத் தியானம் என்று வரும்போது இன்றையத் தலைமுறை முந்தியத் தலைமுறைகளைவிட அதிகம் அவசரப்படுகிறது.

திடீர் சமையல் மற்றும் அவசர உணவு என்பதே பிரபலமாகியிருக்கும் இக்காலத்தின் மனப்பான்மையே நம்மைத் தொற்றியிருக்கிறது.

தங்களது வருமானத்தில் பத்திலொன்றைக் கட்டாயம் கடவுளுக்குக் கொடுத்துவிடவேண்டு மென்று பிரசங்கிமாரும் சபை மேய்ப்பரும் மக்களுக்குப் போதிக்கிறார்கள்.

ஆனால் நமது நேரத்தில் ஏறத்தாழ இருபதிலொன்றாகிய ஒருமணி நேரத்தையாவது திருவசனத் தியானத்தில் செலவழிக்க வேண்டுமென்று பிரசங்கங்கள் கேட்பது அரிது.

மாறாக, தினசரித் தியானங்களைப் பற்றிப் பேசப்படும்போது "நாளொன்றுக்கு ஐந்து நிமிடம்" என்றெல்லாம் கோஷமிடப்படுகிறது.

கானான் நாட்டை நோக்கிய இறைமக்களின் நாற்பதாண்டுப் பாலைவனப் பயணத்தில் கடவுள் அவர்களுக்குத் தினமும் கொடுத்த உணவாகிய "மன்னா" என்பது திருவசனத்திற்கு ஓர் அடையாளம் (யாத் 16:14-36).

விதைபோன்ற இப்பொருள் விமானத்திலிருந்து தூக்கியெறியப்படும் சாப்பாட்டுப் பொட்டலங்கள்போல் வந்துவிழவில்லை.

அது அப்படியே சாப்பிடுவதற்குத் தயாரானதல்ல. மக்கள் வெளியே சென்று அதைச் சேகரித்து, இடித்து, மாவாக்கி, வேகவைத்து ஊத்தப்பம்போல் சுடவேண்டும் (எண் 11:7,8). அதற்கு நேரம் பிடிக்கும்.

கடவுளது வார்த்தையிலிருந்து கடவுள் விரும்பும் பயனை நாம் பெறவேண்டுமானால், தரமான நேரத்தை அதற்காய்க் கட்டாயம் செலவிடவேண்டு மென்று ஒரேடியாக நாம் தீர்மானித்தேயாகவேண்டும். குறுக்குவழியே கிடையாது.

புதையல்கள்

நதியோரங்களிலேயே கூழாங்கற்கள் கிடைத்துவிடும். முத்துக்கள் வேண்டுமானால் ஆழ்கடலுக்குள் செல்லவேண்டும். கடவுள் தமது வார்த்தைகளைப் "புதையல்களுக்கு" ஒப்பிட்டுள்ளார் (நீதி 2:4,5).

மறைக்கப்பட்டது எதுவும் மேசைமேல் அப்படியே கிடக்காது. அதைப் பொறுமையுடனும் எங்கும் தேடவேண்டும். திருமறை ஆராய்ச்சி என்பது ஒரு புதையல் வேட்டை.

"ஆண்டவருடைய புத்தகத்திலே தேடி வாசிக்க" நாம் அழைக்கப் பட்டுள்ளோம் (ஏசா 34:16அ). தேடுவதும் ஆய்வதும் நமது வேலை; நாம் அதைச் செய்தால்தான் தூயாவியானவர் நமக்குதவுவார் (வச 16இ).

திருவசன ஆராய்ச்சியைத் தினசரிப் பயிற்சியாய்க் கொண்டுள்ளோர் பாக்கியவான்கள். இதுதான் பெரேயாவிலுள்ள விசுவாசிகளைச் சிறந்திலங்கச் செய்தது (அப் 17:11).

மற்ற சபைகளுக்கு ஒரு முன் மாதிரியாகப் பவுல் அடிக்கடி சுட்டிக்காட்டிய தெசலோனிக்கேயா கிறிஸ்தவர்களையும்விட பெரேயாவிலுள்ளோர் மேம்பட்டுவிட்டனர்.

பரிசுத்த அகஸ்டின் (கி.பி. 354-430) தனது மகனுக்கு ஒருமுறை இவ்விதம் எழுதினார்: "

நான் சிறுவயதுமுதல் முதிர்வயதுவரை ஒவ்வொரு நாளும், சற்றும் அவசரப்படாமல், முழுமனதோடும் உற்சாகத்தோடும், எனக்கிருக்கும் திறமைகள் அத்தனையும் பயன்படுத்தி, கொஞ்சமும் சோர்ந்துபோகாமல் திருவசனத்தைத் தியானித்துக்கொண்டே இருந்தாலும் திரும்பத் திரும்ப புதையல்களைக் கண்டுபிடித்துக் கொண்டேயிருப்பேன்; அந்த அளவுக்குத் திருமறையில் ஆழம் இருக்கிறது!"

சிறுவயது முதல்...

போதுமான நேரம் திருவசனத்தோடு செலவழிக்கும் பழக்கம் சிறுவயதிலிருந்தே துவங்கவேண்டும்.

இதற்கான முக்கிய பொறுப்பு பெற்றோரிடமே இருக்கிறது. ஆன்மீகத்தில் பவுல் ஓர் இராட்சதன்.

அவனுக்கு அசாதாரண ஆற்றல்களும் திறமைகளுமிருந்தன. அவனது அறிவுநுட்பம் விந்தையானது.

அவனது சாதனைகள் இணையற்றவை. அவனுக்கு அடுத்துத் தலைமைப் பொறுப்பேற்க அவனைப் போன்றொருவரைக் கண்டுபிடிக்கமுடியுமா?

பவுலுக்குத் தீமோத்தேயுவின்மீது ஒரு கண்ணிருந்தது; ஆனாலும், தீமோத்தேயு பயமும் தயக்கமும் நிறைந்த வனாச்சுதே! (1 கொரி 16:10,11; 1 தீமோ 5:23).

ஆனாலும் அவனில் சிறப்பானதொரு கவர்ச்சி இருந்தது.

அது என்னவென்றால், அவன் மனந்திரும்பிக் கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் வயது வருவதற்கு முன்னதாகவே, அவனது குழந்தைப்பருவத்திலேயே, அவனில் பிறந்திருந்த திருவசன வாஞ்சை! (2 தீமோ 3:14,15).

இதற்காய் அவனது மம்மியையும், பாட்டியையும் பாராட்டவேண்டும் (2 தீமோ 1:5).


பெற்றோரும் பிள்ளைகளும்

பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் படித்துவிட்டு வந்த பிறகும் பாடப்புத்தகங்களைத் திறந்துவைத்துக்கொண்டு, படி படி என்று பெற்றோர் எத்தனை மணிநேரம் பிள்ளைகளோடு செலவிடுகின்றனர்!

போட்டி நிறைந்த இவ்வுலகில் இது தேவைதான். ஆனால், பிள்ளைகளை எவ்வளவு நேரம் திருமறையோடு செலவழிக்க வைக்கிறோம்?

இவ்விதப் பார பட்சம் கடவுளுக்கு எவ்வளவு கோபமுண்டாக்குகிறது என நாம் நினைப்பதில்லை. தீர்க்கன் ஓசியா மூலம் அவர் இவ்விதம் சாடினார்:

"நான் என் வேதத்தின் அரிய சத்தியங்களை என் மக்களுக்கு எழுதிக் கொடுத்தேன்; அவர்களோ அதை யாருக்கோ என்று கருதிவிட்டார்கள்" (ஓசி 8:12).

தமது கோபத்தில் அவர் தொடர்ந்து சொன்னது: "நீ உனது கடவுளின் வேதத்தை மறந்துவிட்டாய்; நானும் உனது பிள்ளைகளை மறந்துவிடுவேன்" (ஓசி 4:6ஆ).

நான் மரியாளை வணங்குவதில்லை; ஆனால் அவளை வாழ்த்துகிறேன்! தனது திருமகனை அவரது மீட்பின் பணிக்கு ஆயத்தப்படுத்த அவள் இறைவனோடு எவ்வளவாய் ஒத்துழைத்தாள்!

தேவாலயத்திலிருந்த வேத மேதாவிகள்கூட அதிசயிக்குமளவிற்கு இளைஞன் இயேசுவின் மனதையும் இருதயத்தையும் அவள் திருவசனங்களினால் நிறைத்திருந்தாள் (லூக் 2:46-48அ).

அவரது பன்னிரண்டு வயது முதல் முப்பது வயது வரை அவருக்கு வேதாகம ஆசிரியையாயிருந்தாள்.

ஒரு தச்சன் வீட்டில், நிறைய கல்வி கற்காத நிலையில், அத்தனை வீட்டுப்பொறுப்புகளின் நடுவில், மற்ற பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டு தனது மூத்த மகனுக்கு வேதத்தைக் கற்பிக்க நேரம் செலவழிப்பது என்பது கிராமத்துப் பெண்மணி மரியாளுக்கு அவ்வளவு எளிதாகவா இருந்திருக்கும்?

கிறிஸ்தவ வட்டாரங்களில் மேரி என்ற பெயர் சாதாரணம்; ஆனால் அவளைப் போன்ற தாய்மார்தான் அபூர்வம்.

மனனம் செய்வோம்!

சிறுபிராயத்திலும் வாலிபப்பருவத்திலும் மனனம் செய்வது எளிது. பள்ளிக்கூடத்தில் மனனம் செய்த வாய்ப்பாடு சாகும்வரை நினைவிலிருக்கிறதல்லவா? அது பசுமரத்தாணிபோல்!

ஜான் நியூட்டன் (1725-1807) என்ற ஆங்கிலிக்கன் திருச்சபைப் போதகர் பல பாடல்கள் இயற்றியவர்.

அடிமை வியாபார ஒழிப்பில் முக்கிய பங்கேற்றவர். ஹஅயணiபே ழுசயஉந என்ற உலகப்புகழ்பெற்ற பாடல் அவருடையதுதான்.

அவரது சாட்சியைக் கேளுங்கள்:

"எனது இளம் மனதில் எனது தாயார் அநேக வேதப்பகுதிகள், விசுவாச அறிக்கைகள், பாடல்கள் மற்றும் செய்யுள்களைப் பதித்துவைத்துவிட்டார்கள்.

ஏற்ற காலத்தில் ஆண்டவர் எனது ஆன்மீகக் கண்களைத் திறந்த போது ஏற்கனவே மனனம் செய்திருந்தவையெல்லாம் நினைவுக்கு வந்து பெரும் பயனளித்தன!"

தங்களது பெற்றோரைப் பற்றி எத்தனை பிள்ளைகள் இவ்விதம் சாட்சிகூற முடியும்?

மனம் வளர்ந்து பக்குவப்பட்டுக்கொண்டிருக்கும் காலத்தைத் திருவசன மனனப் பயிற்சிக்காய்ப் பயன் படுத்திக்கொள்ள இளைஞரை அறிவுறுத்துகிறேன்.

நாளொன்றுக்கு ஒரு வசனம்கூட மனனம் செய்ய முடியாத அளவு உங்களுக்கு நேரமின்மை இருக்க முடியாது!

ஆண்டுதோறும் 300 வசனங்களுக்குமேல் மனனம் செய்து மூளையில் சேர்த்துவைப்பது எவ்வளவு பெரிய சொத்து! அப்பொழுது உங்களில் மகிழ்ச்சியும், ஞானமும், விவேகமும் பெருக்கெடுக்கும்.

வாலிபத்தின் பாவக் கவர்ச்சிகளுக்கு விலகி யோடுவதும் சாத்தானைத் தோற்கடிப்பதும் இலகுவாகும் (சங் 119:9,11; 1 யோ 2:14ஆ). னுச. பில்லி கிரகாம் (1918- ) சொல்லுவதைக் கவனியுங்கள்:

"வரவிருந்த பஞ்ச காலத்தில் பயன்படும்படி செழிப்பான ஆண்டுகளில் யோசேப்பு தானியத்தைச் சேர்த்துவைத்ததுபோல, நமக்கு வரக்கூடிய இன்னல் மற்றும் இக்கட்டான வேளைகளில் நம்மைத் தாங்கிப்பிடிக்கும்படி இப்பொழுதே முடிந்த அளவு திருவசனத்தை இருதயத்தில் நிரப்பிவைத்துக் கொள்ளுதல் அவசியம்!"

வேத வசனங்கள் மனனம் செய்வதைத் தாய் மொழியில் துவங்குவது நல்லது. பள்ளியில் மாண வனாயிருக்கும்போது நான் வசனங்களைத் தமிழில் மனப்பாடம் செய்தேன்.

பதினாறு வயதினிலே கல்லூரியில் நுழைந்தபோது அவ்வசனங்களை ஆங்கிலத்தில் மனனம் செய்வது எனக்கு எளிதாயிற்று.

இன்று ஆங்கில வேதமும் தமிழ் வேதமும் தெரிந்திருப்பதும், இரு மொழிகளிலும் அருட்செய்திக் கட்டுரைகள் எழுதுவதுமான இரட்டைப்பயன் எனக்குண்டு.

வசனங்களை மனனம் செய்வதற்காய்ச் செலவழித்த மணிநேரங்கள் எனது வாழ்நாள் முழுவதற்கும் முதலீடாகவும் காப்பீடாகவும் மாறிவிட்டன.

இந்தியை வெறுத்து, இந்திப் பரீட்சையில் தோல்வியுற்ற தமிழர் பலர் இந்தித் திரைப்படங்கள் பார்ப்பதற்காய் இந்தியை ஆர்வமாய்ப் படித்தனர்! மனமிருந்தால் மார்க்கமுண்டு;

விருப்பமிருந்தால் வினையுண்டாகும்! ஏதாவதொன்று நமக்குப் பிடித்து விட்டால் அதற்காய் மணிக்கணக்கில் செலவிடும் நேரம் மணித்துளிகளாகத்தான் தெரியும்!

சத்தமாய் வாசியுங்கள்!

அநேகக் கிறிஸ்தவ இல்லங்களில் ஒன்று குடும்ப ஜெபமே இருக்காது; அப்படி இருந்தாலும் அது சுருக்க ஜெபங்களைவிடச் சுருக்கமாயிருக்கும்.

முப்பது நிமிடங்கள்கூட இல்லாமல் நடத்தப்படும் குடும்ப ஜெபத்தில் என்னதான் பயன் கிட்டுமோ? குடும்ப ஜெப நேரத்தைச் சரிபாதியாகப் பிரித்துக்கொள்ளலாம்.

எஸ்றா மற்றும் நெகேமியாவின் சீர்திருத்தப் பணியின்போது மக்கள் மறைநூலைக் காலை ஆறு முதல் மதியம் பன்னிரண்டுவரை வாசித்தனர்;

அதைத் தொடர்ந்து மாலை ஆறுவரை அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு ஆண்டவரைத் தொழுதுகொண்டனர் (நெகே 9:3).

இது ஆரோக்கியமான சரிவிகிதம். குடும்ப ஜெபத்தில் முதல் பதினைந்து நிமிடத்தைத் திருமறை வாசிப்புக்கும் தியானத்திற்கும் செலவிடலாம்.

மீதியுள்ள நேரத்தின் துதி விண்ணப்பத்தை அது அர்த்தமுள்ள தாக்கும்.

நமது மகன்களையும் மகள்களையும் பைபிளைச் சத்தமாய் வாசிக்க வாய்ப்பு கொடுத்து ஊக்குவிக்கவேண்டும்.

பல இல்லங்களில் இப்படிச் செய்யப்படாததால், நமது வாலிபர் நங்கையர் அநேகருக்கு வசனத்தை அழுத்தம் திருத்தமாகச் சத்தமாய் வாசிக்கத் தெரியாது.

தீமோத்தேயுவுக்குப் பவுல், "வாசிக்கிறதில் கவனமாயிரு" என்றெழுதினான் (1 தீமோ 4:13).

இது விசுவாசிகளுக்கு மறை நூலைப் படித்துக்காட்டும் பணியாகும்.

இயேசு இப் பயிற்சியில் தேறியிருந்தார். அவர் எழுந்து வேதத்தை வாசித்தபோது சபையார் அவரைக் கண் சிமிட்டாமல் கவனித்துக்கொண்டிருந்தார்கள் (லூக் 4:16,17,20).

கரும்பா கட்டையா?

பைபிளை வாசிக்க வாசிக்க அதை வாசிக்க விருப்பம் அதிகரிக்கும். ஆனால் சில வேளைகளில் அதை வாசிப்பதிலும் தியானிப்பதிலும் சுவை இருக்காது,

அது சுமையாய்த் தெரியும். இவ்வித வேளைகளில்தான் நாம் கவனமாயிருக்கவேண்டும்.

புதிதாய் விருப்பமும் வாஞ்சையும் மறுபடி வரும்வரை வேத வாசிப்புப் பழக்கத்தை விட்டுவிட நமக்குச் சோதனைவரும்.

காலத்தை வென்ற மோட்சப் பிரயாணம் என்ற நூலாசிரியர் ஜான் பனியன் (1628-1688) கூறியதைக் கவனியுங்கள்:

"சில வேளைகளில் திருமறையின் ஒரே வரியில் அவ்வளவு நேரம் செலவழிக்குமளவு அது தித்திப்பாயிருக்கும்; மற்ற நேரங்களிலோ வேதம் முழுவதுமே வெறும் காய்ந்த கட்டைபோலிருக்கும்!"

திருமறையோடுள்ள நமது ஈடுபாட்டில் இவ்வித வறட்சியான வேளைகள் வரத்தான் செய்யும். உடனே நாம் தியான நேரத்தைக் குறைத்துவிடவும் கூடாது;

அப்பழக்கத்தை விட்டுவிடவும் கூடாது.

எப்பொழுது, எவ்விதம், எப்பகுதியிலிருந்து ஆண்டவர் நம்மோடு பேசுவாரென்று நமக்குத் தெரியாது. அண்டைவீட்டுக் கதவைத் தட்டிவிட்டு, திறக்க ஆள் வந்ததும் ஓடிவிடும் சின்னப்பயல்கள் போல நாம் இருக்கக்கூடாது!

கேளுங்கள் கேள்விகள்!

பைபிள் திருவார்த்தை. அதிலிருந்து நாம் பெற்றுக் கொள்ளும் செய்தி திருக்குரல். கிரேக்க மொழியில் முதலில் கூறியது "logos" என்றும் அடுத்தது "rhema" என்றும் உள்ளது.

பொதுவாக நமக்கு உடனுக்குடன் "சாநஅய" அதாவது செய்தி கிடைத்துவிடாது. வாசிக்கும் பகுதியிலிருந்து செய்தி மானைப் போல் துள்ளிக்குதித்து வரும்வரை போதுமான நேரம் அதைத் தியானிப்பதில் செலவழிக்கவேண்டும்.

அதுவரை அப்பகுதியைத் திரும்பத் திரும்ப வாசிக்கவேண்டும். மைல்ஸ் கவர்டேல் (1488-1569) ஒரு வேதாகம மொழிபெயர்ப்பாளர். அவருடையது தான் முதன்முதல் அச்சேறிய ஆங்கில வேதம்.

King James Version என்ற பிரபல மொழியாக்கத்திற்கு அடிப்படையாய் அமைந்தது அதுவே. அவர் மொழி பெயர்த்து வெளியிட்ட வேதாகமத்தின் முன்னுரை யில் வேதத்தை அவர் எவ்விதம் ஆராய்கிறாரென்று கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்-

எழுதப்பட்டது என்ன?

எழுதப்பட்டது யாரைப்பற்றி?

எழுதப்பட்டது யாருக்கு?

எழுதப்பட்டது எந்த வார்த்தைகளில்?

எழுதப்பட்டது எப்போது?

எழுதப்பட்டது எங்கே?


எழுதப்பட்டது எதற்காக?

எழுதப்பட்டது எச்சூழலில்?

எழுதப்பட்டதற்கு முன்னாலிருப்பது என்ன?

எழுதப்பட்டதற்குப் பின்வருவது என்ன?
எனக் கவனித்தால் வேதம் நன்றாய் விளங்கும்.

போதுமான நேரம் செலவழிக்காமல் இந்தப் பத்துக் கேள்விகளுக்குப் பதில்கள் கண்டுபிடிக்க முடியுமா?

இவைகளெல்லாம் அடிப்படைக் கேள்விகள்தான்! வேதம் நமக்குள் நுழையவேண்டுமானால் நாம் அதற்குள் நுழையவேண்டும்.

திருமறையோடு செலவிடும் நேரத்திற்கு நாம் கஞ்சத்தனம்பண்ணினால், ஒரு சில பகுதிகளை மட்டுமே விரும்பி வாசித்துக்கொண்டிருப்போம்.

ஒரு சில வசனங்களை மட்டுமே திரும்பத்திரும்ப வாசிப்பதும் மற்றவற்றையோ விட்டுவிடுவதுமான நிலையுண்டாகும்.

இப்படிச் செய்தால் நமக்கு "முழுமையான" உணவு கிடையாமற்போகும். கடவுளின் "முழு" ஆலோசனையை இழந்துபோவோம் (அப் 20:27).

அதிலுள்ள "எல்லாம்" கடவுளது ஆவியினால் அருளப்பட்டவை என்று திருமறை தன்னைக் குறித்துச் சொல்லுகிறது (2 தீமோ 3:16,17).

அதிலுள்ள ஒரு சில பகுதிகளை நாம் ஒதுக்கிவிட்டால், நாம் தேர்ச்சியடையவும் முடியாது, எல்லா நற்செயல்களையும் செய்யும் தகுதியும் பெறமுடியாது.

மேலெ ழுந்தவாறு பார்க்கும்போது, திருமறையிலுள்ள சில புத்தகங்களும் பகுதிகளும் அவ்வளவு கவர்ச்சியாயிருக்காது.

ஆனால் நாம் நமது மனதைக் கட்டாயப்படுத்தித் திருப்பி அவ்விதப் பகுதிகளைத் தியானித்தால், அவற்றிலிருந்து கிடைக்கும் சத்தியங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

தீர்க்கன் எசேக்கியேலுக்கு முன்பாகக் கடவுள் ஒரு சுருளேட்டை விரித்தார். அதின் இரு பக்கங்களிலும் "கதறல்களும் புலம்பல்களும் கேடுகளும்" எழுதப்பட்டிருந்தன.

அவன் தயக்கத்தை மேற்கொண்டு அதைத்தின்றபோதோ, அது "தேன்போல் இனித்தது" (எசேக் 2:8-3:3).

திரும்பத் திரும்ப வாசிப்போம்!

ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வேதாகமம் முழுவதையும் வாசித்து முடிப்பதற்கான வேதவாசிப்பு அட்டவணைகள் பலவுண்டு.

உங்களுக்குப் பொருத்தமானதொன்றைத் தெரிந்துகொண்டு தினசரிப் பகுதியை வாசிப்பதில் கிரமமாயிருங்கள்.

நன்கு உறிஞ்சிக்கொள்ளும் நிலையில் மனது காணப்படும் அதிகாலை வேளை வேத வாசிப்பிற்கு மிகவும் ஏற்றது. இது வெறும் வாசிப்புதான்.

தியானம் என்பது அன்றன்று வாசிக்கப்படும் பகுதியிலுள்ள ஒரு சில வசனங்கள் மீதே இருக்கலாம்; அல்லது வேறு பகுதி ஒன்றையும் தெரிந்துகொள்ளலாம்.

திருமறையைத் திரும்பத் திரும்ப வாசிக்கும்போது, வசனங்களை வசனங்களோடு ஒப்பிடுவது எளிதாகிறது. தாமஸ் வாட்சன் என்ற பக்தனின் அருமையான கருத்து இதோ:

"வைரத்தை வெட்ட வைரம்தான் வேண்டும்; வசனத்தை விளக்க வசனம்தான் வேண்டும்!" இவ்விதம் வேதத்தைப் படிப்பதில் இரு சிறப்பான பயன்கள் உண்டு.

ஒன்று, மிகவும் கடினமான பகுதிகள் கூட அவற்றின்மீது மற்ற வசனங்கள் ஒளி வீசியவுடன் தெளிவாகிவிடும்.

அடுத்தது, துர்வுபதேசங்களுக்கு வழிவகுக்கும் தவறான வியாக்கியானங்களுக்கு நாம் தப்பலாம். பொய்ச்சாட்சிகளைப் போலவே தவறான உபதேசங்களும் ஒன்றுக் கொன்று ஒத்துப்போகாது!

தனக்குப் புரியாவிட்டாலும் விடாமல் வேதத்தை வாசிக்கும் பழக்கம் பெயர் சொல்லப்படாத அந்த எத்தியோப்பிய அதிகாரியிடம் இருந்தது.

அந்த முறை அவன் எருசலேமுக்குச் சென்ற பயணத்தின்போது வாசிக்க ஏசாயா புத்தகச் சுருளை எடுத்துக்கொண்டான்.

சுவிசேஷகன் பிலிப்புவின் எளிய விளக்கம் அந்த அதிகாரிக்கு நற்செய்தியை எவ்வளவு விரைவாய்ப் புரியவைத்துவிட்டது பாருங்கள்! (அப் 8:26-40).

வேதத்தை வாசிக்கும்போதெல்லாம், உங்களுக்கு முக்கியமாய்த் தோன்றும் வார்த்தைகள், வரிகள், வாக்கியங்களை அடிக்கோடிட நல்ல யெடடயீநn ஒன்று வைத்துக்கொள்ளுங்கள்.

பைபிள் அச்சிடப்பட்டுள்ள தாள் மெல்லியதாயிருப்பதால் கசியும் பேனா எதையும் பயன்படுத்தாதீர்கள்.

உங்களுக்குப் புரியாத வசனமோ பகுதியோ வரும்போது ஓரத்தில் ஒரு கேள்விக்குறி போட்டுவிடுங்கள்.

அடுத்த முறை வாசிக்கும்போதே அநேக கேள்விக் குறிகளை அடித்துவிடுவீர்கள்! வாசிக்க வாசிக்கக் கேள்விகள் ஒவ்வொன்றாய் அகலும்.

நமது புரிந்து கொள்ளும் திறன் மற்றும் முதிர்ச்சிக்கேற்ப ஆண்டவர் தமது சத்தியங்களைப் படிப்படையாய் நமக்கு வெளிப்படுத்தி விளங்கச்செய்வார்.

"நான் உங்களிடம் சொல்லவேண்டியவை இன்னும் ஏராளம் உண்டு; ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது" என்று ஒருமுறை இயேசு தமது சீடரிடம் கூறினார் (யோ 16:12).

தூயாவியானவர் தரும் விளக்கத்திற்கு நாம் எவ்விதம் பதிலளிக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் வேத அறிவில் நமது வளர்ச்சி இருக்கும் (வச 13).

"நான் செய்வது என்ன வென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்துகொள்வாய்" என்று இன்னொரு இடத்தில் இயேசு சொன்னார் (யோ 13:7).

வாசிக்கும்போது உங்கள் இதயத்தை அனலாக்கும் குறிப்புகளை உடனுக்குடன் எழுதி வைத்துக்கொள்ள ஒரு குறிப்பேடு ஒன்றை அதற்கென்றே வைத்துக்கொள்ளுங்கள். இதைச் செய்யச் சோம்பற்பட்டால் இழப்பு பெரிதாயிருக்கும்.

இறைநூலும் இறைவேண்டலும்

இறைநூலோடு நாம் செலவிடும் நேரம் நமது இறைவேண்டல் வேளையை உயிர்ப்பித்துச் செழிப்பிக்கும். பைபிளை ஒரு ஜெபப்புத்தகம் எனலாம்.

அதில் எழுதப்பட்டுள்ள 667 ஜெபங்களில் 454க்குப் பதில் கிடைத்துள்ளதாய் வாசிக்கிறோம்.

கடவுளை நோக்கி ஜெபத்தில் நமது இருதயங்களை உயர்த்தும் போது, வேதத்திலுள்ள வார்த்தைகள், வாக்கியங்களையே பயன்படுத்தலாம்.

தாவீது ஓர் அரசனாயிருந்தும், சராசரியான குடிமக்கள் கடந்துவந்த பாடுகள் மற்றும் பிரச்னைகள் எல்லாமே அவனுக்கு இருந்தன.

தோல்விகள், போராட்டங்கள், கேள்விகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், காட்டிக்கொடுக்கப் படுதல், வியாதிகள், தனிமை, இப்படி எதைச் சொன்னாலும் அவை அவனுக்கிருந்தன.

அவனது சங்கீதங்கள் பல அவனது இதயக்குமுறலின்போது பிறந்தவையே. அவனது இதயக் கதறல்களை ஜெபமாகவும் தொழுகையாகவும் திருப்பாடல்களாய் வடித்தான்.

119ஆம் சங்கீதத்தின் 176 வசனங்களில் ஒவ்வொன்றும் துதியாயிருக்கும், அறிக்கையாயிருக்கும் அல்லது வேண்டலாயிருக்கும்.

அவற்றில் 171 வசனங்கள் கடவுளுடைய வார்த்தையைக் குறிப்பிடுகின்றன. அகரம் முதல் னகரம் வரை என்று நாம் தமிழில் சொல்வதுபோல, தாவீது இச்சங்கீதத்தை எபிரேய மொழியில் "aleph" முதல் "tav" வரை வடிவமைத்தான்.

னுச. ரவி சகரியா அவர்கள் சமீபத்தில் (2003) எழுதியுள்ள Recapture the Wonder என்ற நூலில், "மொழிகளின் எழுத்துக்களையெல்லாம் கடவுளுடைய வார்த்தை மிஞ்சிவிடுகிறது" எனச் சுட்டிக்காட்டியுள்ளார்!

வேத ஆராய்ச்சி நூல்கள்

வேதத்தின் ஒரு சிறிய பகுதியைக்கூட மொழியாக்கம் செய்வதற்கு வேத மொழிபெயர்ப்பாளர்கள் எவ்வளவு நேரமெடுக்க வேண்டியதிருக்கிறதென்று மட்டும் நாம் அறிந்திருந்தால் வேதத் தியானத்தை ஏதோ சும்மாயிருக்கும் நேரத்தில் செய்யவேண்டியதாய்க் கருதமாட்டோம்.

முழு வேதாகமத்தையும் நமது தாய்மொழியிலேயே, அதுவும் பல்வேறு திருத்திய மொழியாக்கங்களில், பெற்றிருப்பது எத்தனை சிலாக்கியம்!

வேதத்திலுள்ள ஒரு வரிகூட இன்னும் மொழியாக்கம் செய்யப்படாத 1000க்கும் மேற்பட்ட மொழிகள் உலகிலுண்டு.

இந்தத் தலைமுறையினருக்குக் கிடைத்துள்ள ஆராய்ச்சி வேதங்களையும் உதவி நூல்களையும் பார்த்தால், அப்பப்பா, பொறாமையாயிருக்கிறது.

கல்லூரி மாணவப்பருவத்தில், எனது ஆன்மீக வாழ்வின் முதலாவது எட்டு ஆண்டுகளில் (1962-1970), ஒரேயொரு ஆராய்ச்சி வேதம்கூட வாங்க எனக்கு வசதியில்லை.

ஒன்றாவது வேண்டுமென்று எத்தனை முறை எனது கல்லூரி ஜெபக்குழு அங்கத்தினர்களோடு ஜெபித்திருப்பேன்!

1970ஆம் ஆண்டு நான் லில்லியனுக்கு நிச்சயிக்கப்பட்டபோது எனது மாமனார் எனக்கு வெகுமதியாக Dake’s Annotated Reference Bible ஒன்றைக் கொடுத்த போது எனது நெடுங்கால ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது.

1965ஆம் ஆண்டுப் பதிப்பாகிய அந்த வேதாகமத்தின் அன்றைய விலை ரூ. 161/- Finis Jennings Dake (1902-1987) என்ற போதகருக்கு அந்த ஆராய்ச்சி வேதாகமம் தயாரிக்க 43 ஆண்டுகளில் ஏறத்தாழ 100000 மணிநேரம் ஆராய்ந்து படிக்கவேண்டியதிருந்தது.

இன்று என்னிடம் டஜன் கணக்கில் ஆராய்ச்சி வேதங்கள் உண்டு.

அவைகளைப் பயபக்தியுடன் பயன்படுத்துகிறேன்; ஏனெனில் இவ்வித ஆராய்ச்சி வேதங்களைத் தயாரிக்க அந்தந்த ஆசிரியர்களுக்கு எவ்வளவு நேரம் பிடித்திருக்கும், அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்று வேதத்தைப் போதிக்கும் எனக்கு நன்கு உணரமுடிகிறது.

ஆராய்ச்சி வேதங்களை வாங்குவது நன்று; ஆனால் அவற்றைப் படிப்பதற்கு நேரம் ஒதுக்குகிறோமா? நம்மில் அநேகருக்கு ஞாயிறு ஒன்றுதான் விடுமுறை நாள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் ஓர் ஆராதனை அல்லது கூட்டத்திற்குமேல் நீங்கள் பங்குபெற்றால் உங்கள் குடும்பத்திற்காகவும் வேத ஆராய்ச்சிக்காகவும் உங்களுக்கு நேரம் மிஞ்சுவது அரிது.

ஞாயிறு மதியங்களில் ஒரு தொண்டர் தூக்கம் போட்டுவிட்டுத் தீவிரமாய் வேதத்தை ஆராய்ச்சி நூல்கள் உதவியுடன் படிக்க உட்கார்ந்து விடுங்கள். முயற்சித்துப் பாருங்களேன்!

வேதத்தைப் படிப்பதில் மூன்று படிகள் உண்டு (1) வாசித்தல்: இந்தப் பகுதி சொல்லுவது என்ன? (2) பொருளறிதல்: இந்தப் பகுதியின் பொருள் என்ன? (3) பயிற்சித்தல்:

இந்தப் பகுதி எனக்கு எப்படிப் பொருந்தும்? வாசித்தலில் நாம் சொல்லப்பட்ட செய்தியைக் கண்டறிகிறோம்; பொருளறிதலில் செய்தியை உட்கொள்ளுகிறோம்;

பயிற்சித்தலில் செய்தியை அப்பியாசித்துப் பார்க்கிறோம். நமது பொறுமையின்மையினால், நாம் வாசித்தலிலிருந்து, பொருளறிதலுக்கு நேரம் செலவழிக்காமல், பயிற்சித்தலுக்கு நேரே குதித்துவிடுகிறோம்.

பொருளறிய நேரமாகும். நடுவிலுள்ள இந்தப் படியை நாம் விட்டு விட்டால் தவற்றிலும் சத்தியத்தைத் திரிப்பதிலும் தான் பொதுவாக முடிவடைவோம்.

"சத்திய வார்த்தையைச் சரியானபடி பகுத்துக்கூறும்படி" நாம் அறிவுறுத்தப்பட்டுள்ளோம் (2 தீமோ 2:15ஆ). இதற்குப் பொறுமையும் முயற்சியும் தேவை (வச 15அ).

திருமறையைத் திறக்கும்போதெல்லாம் உதவி நூல்களைப் புரட்டவேண்டுமென்று சொல்லவில்லை. குறைந்தது வேதாகமப் பக்கங்களின் நடுவிலோ இரு ஓரங்களிலோ தரப்பட்ட ஒத்துவாக்கியங்களையாவது எடுத்துப் பார்க்கவேண்டும்.

ஒத்துவாக்கியங்களைப் படிக்காவிட்டால் ஒத்துவாக்கிய வேதாகமங்களை வைத்திருந்து என்ன பயன்? பழைய ஏற்பாட்டையும் புதியதையும் இணைக்கும் ஒத்து வாக்கியங்கள் மதிக்கமுடியாதவை.

பழைய ஏற்பாட்டில் புதியது மறைந்துள்ளதென்றும், புதியதில் பழையது மலர்ந்துள்ளதென்றும் நீங்கள் கண்டு பிடிக்கும்போது உங்கள் உள்ளம் துள்ளும். இவ்விதப் பரவசத்தில் நேரம் போவதே தெரியாது!

எந்த மொழியாக்கம்?

பைபிள் எழுதப்பட்ட எபிரேயு மற்றும் கிரேக்கு ஆகிய மூலமொழிகளைக் கற்காத நம்மைப் போன்றவர்களுக்குப் புதுப்புது மொழியாக்கங்கள் ஒரு வரப் பிரசாதமாகும்.

நூற்றுக்குநூறு சரியான மொழியாக்கமோ, நூற்றுக்குநூறு பிழையான மொழியாக்கமோ எதுவும் கிடையாது.

ஒவ்வொரு மொழியாக்கத்திற்கும் சிறப்புகளும் உண்டு, குறைபாடுகளும் உண்டு. வெறும் பாரம்பரியத்திற்குப் பலியாகி, புதிய மொழி யாக்கங்களுக்குக் கதவடைத்துவிடாதீர்கள்.

தினசரி வாசிப்புப் பகுதிகளை வேறே ஒன்றிரண்டு மொழியாக்கங்களிலும் வாசித்துப்பாருங்கள். புத்துணர்வு தரும் அர்த்தங்கள் பெற்று குதூகலிப்பீர்கள்!

ஆங்கிலத்தில் முதுஏ மொழியாக்கம் ஒன்றையே பிடித்துக்கொண்டு மற்றவற்றை வெறுத்துத் தள்ளுவோர் நினைவிற் கொள்க:

முதுஏ என்பது முதல் ஆங்கில மொழியாக்கமல்ல, அது ஏறத்தாழ பத்து மொழியாக் கங்களைத் திருத்திப் பின்னர் வந்தது!

அவ்விதமே, இன்று அதிகமாய்ப் புழக்கத்திலுள்ள தமிழ் வேதாகமம்தான் முதலில் வந்தது என்று நினைத்துவிட வேண்டாம்.

பல்வேறு தமிழாக்கங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தபின்னர், அவற்றை ஒப்பிட்டுப்பார்த்துச் செய்யப்பட்ட இன்னொரு மொழியாக்கமே இது.

அன்றுள்ளோருக்குப் புதிய மொழிபெயர்ப்பாயிருந்தது நமக்குப் பழைய மொழிபெயர்ப்பாயிற்று, அவ்வளவுதான்! புதிது புதிதாய்த் திருத்தப்பட்டுவரும் மொழியாக்கங்களை வரவேற்போம்; அவற்றிலுள்ள மேம்பட்டவற்றைத் தைரியமாய் எடுத்துக்கொள்வோம்.

பாலும் புலாலும்

திருமறையானது பாலுக்கும் புலாலுக்கும் ஒப்பிடப்பட்டிருக்கிறது. துவக்க நிலையிலுள்ளோருக்கு அது பால்; வளர்ந்தோருக்கும் முதிர்ச்சியடைந் தோருக்கும் அது புலால் (எபி 5:12-14).

கறியைச் சவைத்துச் சாப்பிடுவதற்குப் பாலைக் குடிப்பதைவிட நேரமாகும். நாம் கிறிஸ்தவ வாழ்வில் வளர வளர, திருமறைத் தியானத்திற்குச் செலவழிக்கும் நேரத்தைக் கூட்டிக்கொண்டே போகவேண்டும்.

வேதத்தில் புரியாத புதிர்கள் மற்றும் கடினமான கேள்விகள் நமக்கு எதிர்ப்படும். வேதாகமப் பொருளகராதிகள் (Bible Dictionaries)

மக்கு வேதத்திலுள்ள ஒவ்வொரு புத்தகமும் எழுதப்பட்ட சூழமைவை விளக்கிக் காட்டும். ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு பக்கங்களென ஆரம்பத்திலிருந்து இந்தப் பொருளகராதிகளை நான் வாசிப்பேன்.

அவைகளிலுள்ள தகவல்கள் அகர வரிசையில் கொடுக்கப்பட்டிருந்தாலும், நான் அடிக்கடி அனுபவித்து அதிசயித்தது என்ன தெரியுமா? நான் அந்தச் சமயத்தில் தியானித்துக்கொண்டிருக்கும் வேதபகுதிக்குத் தேவையான தகவல்களைத்தான் பொருளகராதியில் வாசித்திருப்பேன்!

இதில் இரகசியம் என்னவெனில், உண்மையாய்த் தேடுகிறவர்களுக்குத் தூயாவியானவர் விரைந்துவந்து உதவுகிறார். "தேடுங்கள், கண்டுகொள்வீர்கள்" என்றார் இயேசு (மத் 7:7). "கண்டுகொள்ளும்வரை தேடுங்கள்" என்றே அது எனக்குப் புரிகிறது!

71 மணி நேரந்தான்!

நமது திருமறைக் கல்லாமையைச் சாத்தான் தனக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக்கொள்ளுகிறான். துர்வுபதேசக்காற்று ஒவ்வொன்றினாலும் அலசடிபடுகிறோம் (எபே 4:14).

திருவசனமெனும் தூயாவியானவரின் பட்டயம் நமது கரங்களிலிருந்தும் தீய சக்திகளுக்கெதிராக அதை எவ்விதம் பயன்படுத்துவதென்று நமக்குத் தெரிவதில்லை (எபே 6:17).

இன்னல்களும் இக்கட்டுகளும் வந்தவுடன் நமது ஆடலும் பாடலும் பறந்துவிடுகின்றன (சங் 119:92).

நமது விசுவாசத்தில் உறுதியாயிருக்கவும், சோதனைகளை வெல்லவும் ஒரே வழி திரும் பத்திரும்பத் திருவசனத்தை வாசிப்பதே (ரோ 10:17; சங் 119:9,11).

"எழுதப்பட்டிருக்கிறதே" என்பது "வாசிக்கப்பட்டிருக்கிறதே" என்று வந்தால்தான் ஏதும் பயனுண்டு!

சுற்றுலா செல்லவும் முகாம்களில் பங்கேற்கவும் விடுமுறை எடுத்துக்கொள்ளுகிறோமே. உட்கார்ந்து ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல்வரை வாசித்து முடிப்பதற்கென்றே ஏன் மூன்று நான்கு நாட்கள் லீவு எடுக்கக்கூடாது?

பழைய ஏற்பாட்டையும் புதியதையும் நிதானமாக, சத்தமாக, அழுத்தந்திருத்தமாக வாசித்து முடிக்க 71 மணி நேரத்திற்குக் குறைவாகத்தான் ஆகும்! த

கருத்துகள் இல்லை: