வெள்ளி, 23 ஜனவரி, 2009

மீட்பர் அவசியம் கடவுளாகத் தான் இருக்க வேண்டுமா?

கேள்வி:

இயேசுவை "மீட்பர் – Saviour" எனச் சொல்லப்பட்டுள்ள‌தினால், கிறிஸ்துவர்கள் அவரைக் "கடவுள்" என வாதிடுகின்றனர்.

ஆனால், பழைய ஏற்பாட்டில் யேகோவா தேவன் ஒருவ‌ரே "மீட்பர்" எனச் சொல்லப்பட்டுள்ளது (ஏசாயா 43:11, 45:21, ஓசியா 13:4).

இந்த வாதம், யேகோவா தேவன் ஒருவரே மீட்பராக இருப்பினும் அவர் தம் சித்தத்தை நிறைவேற்றுகையில் தமது பிரதிநிதியாக இன்னொருவரை நியமித்து அனுப்புகிறார் என்கின்ற விவரத்தை காணத் தவறுகிறது.

உதாரணமாக, பழைய ஏற்பாட்டில், ஒத்னியேல் என்கின்ற ஒரு இஸ்ரவேலரை, இஸ்ரவேல் மக்களை மீட்க யேகோவா தேவன் பயன்படுத்தினார் எனப் பார்க்கிறோம். அவரும் கூட "மீட்பர்" என்றே அழைக்கப்படுகிறார்! (நியாயாதிபதிகள் 3:9, ஓபதியா 1:21).

யேகோவா தேவன் ஒருவரே மீட்பர் எனச் சொல்லும் போது, அது, அவர் ஒருவரே மீட்பின் பிறப்பிடமாய் இருக்கிறார் என்றே உண்மையில் அர்த்தமாகின்றது.

வேறு எவரையும் மீட்பினைக் கொண்டுவர தேவன் பயன்படுத்த முடியாது என இதனைப் பொருள் கொள்ளலாகாது.

இதன் அடிப்படையில், இயேசு, தேவனின் பிரதிநிதியாக தேவனால் "மீட்பர்" எனப் அழைப்பட்டிருந்தால், அவரைக் "கடவுள்" என‌ அழைப்பது எவ்விதத்தில் நிரூப‌ண‌மாகும்?

பதில்:

யேகோவா தேவனுக்கு இணையாக வேறு எந்த இரட்சகரும் இல்லை எனச் சொல்லும் வேத வசனங்கள் இவைகளே:

"நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்து கொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்;

எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப் பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை"(ஏசாயா 43:10-11).

"நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்து வந்தது முதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறிய வேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை"(ஓசியா 13:4).

ஆனால் இந்தக் கேள்வியிலேயே உள்ளபடி "இரட்சகர்/ மீட்பர்" என அழைக்கப்படும் வேறு நபர்களும் உண்டு எனவும் இது அவர்களை கடவுளாகவோ அல்லது தெய்வீகத் தன்மை உள்ளவர்களாகவோ ஆக்கவில்லை எனவும் காண்கிறோம்.

"கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோப மூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப் போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்ட போது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும் படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு ரட்சகனை அவர்களுக்கு எழும்பப் பண்ணினார்"(நியாயாதிபதிகள் 3:8-9).

"ஏசாவின் பர்வதத்தை நியாயந் தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன் பர்வதத்தில் வந்தேறுவார்கள்; அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்" (ஒபதியா 1:21).

இவ்வாறு ஒப்பிடுவதில் பிரச்சினை என்னவென்றால், இயேசுவை இரட்சகர் என்று அழைப்பதற்கும் ஏனையோரை அவ்வாறு அழைப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான்.

முதலாவதாக, தேவன் இந்த மனிதர்களை "இஸ்ரவேலை அதன் பகைவர்களிடமிருந்து மீட்பதற்காக" பயன்படுத்தினார். அவர்கள் இஸ்ரவேலின் நெருக்கத்தினின்று அதைக் காப்பாற்ற அனுப்பப்பட்டனர்.

அவர்களின் பாவத்தினின்று அவர்களை மீட்பதற்காகவோ அல்லது அவர்களுக்கு நித்திய வாழ்வினை வழங்கவோ அவர்கள் அனுப்பப்படவில்லை. அது தேவனால் மட்டுமே முடியும்.

இரண்டாவதாக, இந்தக் கேள்வியிலேயே அமைந்துள்ளபடி, இரட்சிப்பு யேகோவா தேவனிடமிருந்து மட்டுமே வர முடியும்; அது அவருக்கே உரியது என பழைய ஏற்பாடு வேத வசனங்கள் போதிக்கிறது.

"இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின் மேல் இருப்பதாக" (சங்கீதம் 3:8).

"நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்" (யோனா 2:9).

இங்கு தான் இயேசுவின் தெய்வீகத் தன்மைக்கான நிரூபணம் வெளிப்படுகிறது. இரட்சிப்பு ஆண்டவராகிய இயேசுவுக்கே உரியதாகி அவரிடமிருந்தே புறப்படுகிறது என புதிய ஏற்பாடு கூறுகிறது.

"அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக் குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்" (வெளி 7:10).

மேலும், யேகோவா தேவன் அவர் தம்மக்களை அவருக்கே உரியவர்களாக்கும் பொருட்டு அவர்களை பாவத்தினின்று மீட்டுக் கொண்டாரென எபிரேய வேதமாகிய பைபிள் தெரிவிக்கின்றது‌.

"இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக் கொள்வீர்களானால்,சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது" (யாத்திராகமம் 19:5).

"நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்து கொண்டார்"(உபாகமம் 7:6).

"நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்து கொண்டார்"(உபாகமம் 14:2).

"கர்த்தரும் உனக்கு வாக்குக் கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக் கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும்.."(உபாகமம் 26:18).

"இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு. அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக் கொள்வார்"(சங்கீதம் 130:7-8).

"அவர்கள் இனித் தங்கள் நரகலான விக்கிரகங்களினாலும் தங்கள் அருவருப்புகளினாலும் தங்களுடைய சகல மீறுதல்களினாலும் தங்களைத் தீட்டுப் படுத்துவதுமில்லை;

அவர்கள் குடியிருந்து பாவஞ் செய்த எல்லா இடங்களிலிருந்தும் நான் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுத்தம் பண்ணுவேன்;

அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் வனாயிருப்பேன் "(எசேக்கியேல் 37: 23).


எனினும், ஆண்டவராகிய இயேசு, யேகோவா தேவன் செய்தது போன்றே செய்தார் என புதிய ஏற்பாடு போதிக்கிறது. சான்றாக, அவர் பாவிகளை அவர்களது பாவங்களினின்று மீட்டு அவர்களை அவரது சொந்த ஜனமாக்கிக் கொள்ளவே இவ்வுலகிற்கு வந்தார் என வாசிக்கிறோம்.

"அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.."(மத்தேயு 1:21).

"நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.

அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்தி வைராக்கிய முள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்தார்."(தீத்து 2:13-14).

இறுதியாக, விசுவாசிப்போர் தங்களது அடைக்கலத்தையும் பரிசுத்தமாகுதலையும் சகல முழங்கால்களும் முடங்கும் யேகோவா தேவனிடம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என தீர்க்கதரிசிகள் அறிவித்தார்கள்.

"நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனை பண்ணுங்கள்; இதைப் பூர்வகால முதற் கொண்டு விளங்கப் பண்ணி அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை;

என்னைத் தவிர வேறொருவரும் இல்லை. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்;

நானே தேவன், வேறொருவரும் இல்லை. முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக் கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்;

இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார். கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்;

அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள். இஸ்ரவேலின் சந்ததியாகிய யாவரும் கர்த்தருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்" (ஏசாயா 45: 21-25).

மேலும், பழைய ஏற்பாட்டின் படி யேகோவா தேவனுக்கே உரித்தான குறிப்பிடப்பட்ட காரியங்கள் இயேசுவுக்கும் குறிப்பிடப்பட்டன என புதிய ஏற்பாட்டில் காண்கிறோம்.

"நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மை பாராட்டத்தக்கதாக, அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்."(I கொரிந்தியர் 1:30-31).

"ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும் படிக்கும்,

பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும் படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்"(பிலிப்பியர் 2:9-11).

மேலே சொன்னவைகள் ஒரு விவரத்தை தெளிவாக்குகிறது. இயேசுவை, ஒத்னியேல் போன்றவர்களின் வரிசையில் இரட்சகராகக் கருதப்படலாகாது.

ஏனெனில், அவர் இஸ்ரவேல் மக்களை அவர்களின் பகைவர்களினின்று இரட்சிக்க அனுப்பப்பட்ட பிரத்தியோகமான மனிதத் தூதர் அல்லர்.

மாறாக, அவர் தேவன் மட்டுமே செய்யக் கூடிய காரியத்தை செய்யும் படிக்கு பிதாவினால் அனுப்பப்பட்டு இரட்சிப்பின் ஊற்றாகச் செயல்பட்டார்.

அதாவது அவரை விசுவாசிக்கும் சகல மனிதரையும் அவர் தம் பாவக்கறை நீங்க அவரது மாசற்ற தூய இரத்தத்தினால் கழுவி சுத்திகரித்து நித்திய மீட்பை அவர்களுக்கு அவரது கீழ்படிதலாலும் தியாகத்தினாலும் பெற்றுக் கொடுத்தார்.

"கிறிஸ்துவானவர் வரப் போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டி சம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல,

பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டு பண்ணினார்.

அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள் மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீர சுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத் தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக் கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ் செய்வதற்கு உங்கள் மனச் சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்தி செய்யும் பொருட்டு அவர் மரண மடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்து கொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்" (எபிரெயர் 9:11-15).

"தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும் படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்"(I யோவான் 4:9,10,14).

மேலே சொன்னவைகளின் அடிப்படையில், புதிய ஏற்பாட்டின் வேத வசனங்கள் இயேசுவே ஜீவனை உண்டாக்குபவர், அவரே நித்திய மீட்பின் ஊற்றுக்கண்,

அவரே நமது தேவன் மற்றும் நமது மீட்பர் என புதிய ஏற்பாடு அழுத்தமாக வெளிப்படுத்துகிறது என்பதைக் கண்டுகொள்வதில் சற்றும் வியப்பில்லை.

"அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது" (யோவான் 1:4).

"பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.

என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.

அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்து போகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.

குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்திய ஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்"(யோவான் 6:37-40).

"இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த் தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்;

இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்"(யோவான் 11:23-27).

"பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலை பாதகனை உங்களுக்காக விடுதலை பண்ணவேண்டுமென்று கேட்டு, ஜீவாதிபதியைக் கொலை செய்தீர்கள்;

அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்" (அப்போஸ்தலர் 3:14,15).

"ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு வந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபவத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.

எப்படியெனில், பரிசுத்தஞ் செய்கிறவரும் பரிசுத்தஞ் செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்"(எபிரெயர் 2:10,11).

"அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்"(எபிரெயர் 5:8-10).

"...விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி… அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்"(எபிரெயர் 12:1-2).

"நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப் போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:" (II பேதுரு 1:1).

த‌ர்க்க‌ சாஸ்திர‌த்தின்( அடிப்ப‌டையில் பார்ப்போமானால்:

1. யேகோவா தேவ‌ன் ஒருவ‌ரே இர‌ட்சிப்பின் ஊற்றும் ஜீவ‌னுமாய் இருக்கிறார்

2. இயேசு இர‌ட்சிப்பின் ஊற்றும் ஜீவ‌னுமாய் இருக்கிறார்

3. என‌வே இயேசுவே யேகோவா தேவனாவார்

கருத்துகள் இல்லை: