ஞாயிறு, 11 ஜனவரி, 2009

யாராவது என்னைப் பார்க்க மாட்டிங்களா?

தலைப்பை பார்த்த்தவுடனே யாரோ அபாயத்தில் இருப்பவர் அல்லது விபத்தில் சிக்கி உதவிக்காக கதறுபவர் கூப்பிடுவது போல இருக்கிறதல்லவா!

நீங்கள் போகிற வழியில் யாராவது இவ்வாறு கதறுவதை கேட்டு இருக்கிறீர்களா?

அதைக் கேட்டும் கேளாதவர்களாகவும் கண்டும் காணாதவர்களாகவும் இருந்திருக்கிறீர்களா? அப்படியெனில் இதைப் படிங்க முதலில்.........

நாம் வாழ்கிற சூழலில் ஒருவருக்கு உதவுவதற்கு முன்பு ஆயிரம் காரியங்களை நாம் யோசிக்கிறோம். எல்லாம் சுயநலம்தான் காரணம்.

உதவி செய்யப் போய் உபத்திரவமாக மாறிவிடக் கூடாதே என்ற தன்னல உணர்வுதான் காரணம் ஆகும்.

நடைமுறையில் உண்மையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் கூட அவைகள் எல்லாமே சாக்குப் போக்குகள் தான்.

ஒரு கிறிஸ்தவன் இத்தகைய சாக்குப் போக்குகள் கூறுவதைக் கடந்தவனாக இருக்கவேண்டும்.

இன்றையக் கிறிஸ்தவர்கள் பலர் உலகத்தாரை விட மிஞ்சினவர்களாக உலகக் காரியங்களில் கரைகடந்தவர்களாக இருக்கின்றனர்.

ஒருவருக்கு உதவுவதற்கு ஆயிரம் காரியங்களை யோசிக்கும் நாம் ஒருவரிடமிருந்து பெறுவதற்கு பெரும்பாலும் எதையுமே யோசிப்பதில்லை.

இங்கே ஒரு பஞ்ச் டயலாக் வந்தால் நன்றாயிருக்குமல்லவா!

உதவி செய்ய யோசிக்காதே - ஆனால்
உதவி பெறுவதற்கு முன் யோசி

குழந்தை முதம் பெரியவர் வரை பலரும் நம்மை யாராவது பார்க்கமாட்டார்களா என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏங்குகின்றனர்.

நாம் வாழ்கிற உலகில் பலர் உலகம் நம்மை பார்க்கவேண்டும் என்பதற்காகவே பல காரியங்களைச் செய்கின்றனர்.

கின்னஸ் சாதனையாளர்கள் பலர் கிச்சனில் இருப்பதை மட்டுமல்ல சாதனைக்காக அவர்கள் எதையும் சாப்பிடுவார்கள் ( நீங்கள் இப்போது நினைப்பதையும் கூட).

எல்லாம் சாதனைக்காகத்தான். எல்லாரும் நம்மைப் பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான்.

இன்றைய உலகில் பல காரியங்கள் தலைகீழாகத்தான் நடக்கின்றன.

உண்மையில் உதவி கேட்டு யாராவது கதறும் போது காதுகொடுத்து கேட்க மனமில்லாத பலர் இந்த சாதனையாளர்கள் செய்யும் காரியங்களை வாயைப் பிளந்து கொண்டு அமர்ந்து பார்ப்பர்.

நீங்கள் அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும் என்று வேதம் கூறுகிறது. நாம் மற்றவர்களுக்கு உதவும்போதுதானே நம்முடைய தேவையில் மற்றவர்கள் நமக்குதவுவர்.

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுக்கிறான் என்பது வேதமொழி. நாம் இதுவரை எதை விதைத்திருக்கிறோம் அறுப்பதற்கு?

ஒரு சிறுவர் கதை எனக்கு நினைவுக்கு வருகிறது.

ஒரு விவசாயி தினமும் வயலுக்குச் சென்று நெற்பயிர் முளைத்திருக்கிறதா என்று பார்த்துவந்தானாம்.

இவ்வாறு நீண்ட நாட்கள் அவன் செய்துவந்ததைப் பார்த்த அப்பக்கத்தில் உள்ள முதியவர் ஒருவர் அவனிடம் தம்பி நீ தினமும்வயலுக்குச் சென்று எதைப் பார்க்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு அவன் நான் வயல் விளைகிறதா என்று பார்க்கிறேன் என்றான். நீ என்ன விளையும் என்று எதிர்பார்க்கிறாய்இ என்ன விதைத்திருக்கிறாய்இ சும்மா பார்த்து பார்த்து விட்டுப் போகிறாயே என்று திரும்பக் கேட்டார்.

அதற்கு அவன் ஐயா நான் இதுவரைக்கும் எதையும் விதைக்கவில்லைஇ இது விவசாய நிலம் என்பதால் ஏதாவது விளையும் என்று எதிர்பார்க்கிறேன் என்றான்.

அப்போது அந்த முதியவர், இது விவசாய நிலம்தான் என்றாலும் நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுக்கமுடியும்.

தானாக எதாவது விளையும் என்று நீ எதிர்பார்த்தால் உன்னைப் போல அடி முட்டாள் எவனும் இருக்க மாட்டான்.

ஏனெனில் தேவையற்ற களையும் முள்ளுமே தானாக முளைக்கும் என்று அவனை கடிந்து கொண்டார்.

அந்த விவசாயியும் ஏதோ புரிந்தவனாக தலையை ஆட்டிக் கொண்டு அவ்விடம் விட்டுச் சென்றான். உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?

நிலமாகிய இவ்வுலகத்தில் கிறிஸ்தவம் செழிக்க நாம் எதை விதைக்கிறோம். வசனமாகியவிதையை விதைக்கிறோமா?

உலகம் நம்மில் காணப்படும் நற்கிரியைகளைக் கண்டு பிதாவை மகிமைப்படுத்தும்வண்ணம் நாம் ஒளிவீசுகிறோமா? எதையுமே செய்யாமல் அந்த விவசாயி போல இருக்கிறோமா?

மற்றவர்கள் உதவி கேட்பது ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் பொதுச்சுமை வாகனத்தில் எழுதப்பட்டிருக்கிற வார்த்தைகளை கவனித்திருக்கிறீர்களா?

பொதுச்சுமை வாகனம் என்றாலே பலருக்கு தெரியாது என்பதால் லாரி என்ற அதன் உண்மையான பெயரையே குறிப்பிடுகிறேன்.

எல்லா லாரியிலும் பேட்டரி இருக்குமிடத்தில் என்னை தினமும் கவனி என்று கண்டிப்பாக எழுதப்பட்டிருக்கும்.

அதன் பொருள் என்ன? லாரி நீண்ட தூரம் செல்ல வேண்டுமானால் அதை அனுதினமும் கவனிக்கவேண்டுவது அவசியமானதாக இருக்கிறது. அ

தேபோலத்தான் நம் ஆவிக்குரிய வாழ்க்கையும். அது அனுதினமும் போஷிக்கப்படவேண்டும்.

மற்றவர்களின் உதவிக்குரல் நமக்கு கேட்காவிட்டால் நமக்கு ஒருவேளை நேரடி பாதிப்பு வராதிருக்கலாம்.

ஆனால் நம் ஆத்துமாவின் உதவிக்குரலே நமக்கு கேட்காவிடில் அந்தோ பரிதாபம். வேறென்ன சொல்ல!

இதனால் தான் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று ஆவியான்வர் எழுதிவைத்திருக்கிறாரோ? மற்றவர்களின் சத்தத்தைக் கேட்க காது தேவை.

உங்களின் சத்தம் கேட்க காது அல்ல உணர்வும் உயிரும் இருந்தால் அது தானாகவே நடக்கவேண்டும்.

இன்று பல கிறிஸ்த்வர்களுக்கு ஆத்துமாவை போஷிக்க நேரமில்லை.

உதவி கேட்டு ஆத்துமா கதறும்போது நேரமில்லை என்பதே அதற்கு கிடைக்கும் உடனடி பதிலாக இருக்கிறது.

அனேகர் ஆத்தும இரட்சிப்படையாமல் நித்தியமாக அழிந்து கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் உதவிக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்.

அழிந்து போகிற ஆத்துமாக்களின் கதறல்கள் அதைக் கேட்கிற எவரையும் சும்மா இருக்க விடாது. கிறிஸ்துவுக்காக எதையாவது செய்ய வைத்துவிடும்.

அழிவின் பள்ளத்தாக்கில் ஆத்தும தரிசனம் கண்டிடுவீர். அழிவின் பள்ளத்தாக்கு தரிசனப் பள்ளத்தாக்காக மாறுவதாக.

கிறிஸ்தவத்தின் இன்றையத்தேவை
ஏக்கப் பெருமூச்சுகள் அல்ல
ஆக்கமிகு திரு முயற்சிகளே

கருத்துகள் இல்லை: