வெள்ளி, 30 ஜனவரி, 2009

எப்படி சந்திப்பது?

பழைய வருடத்தை முடித்து, புதிய வருடத்தில் வந்தாச்சி, நான் யாரோடு வந்திருக்கிறேன் என்பது அல்ல. யாரை நம்பி இந்த புதிய வருடத்தில் பிரவேசித்தேன் என்பதுதான் இந்த ஆண்டில் எனக்கு வெற்றியையும், ஆசீர்வாதத்தையும் கொண்டுவரப்போகிறது.

நீங்களும் ஒருவேளை கர்த்தரை மாத்திரம் தான் நம்பி இந்த வருடத்தில் வந்திருப்பீர் களானால், உங்களுக்குதான் இந்த பதிவு உள்ளே வாருங்கள்.

நாம் நம்முடைய பழைய வாழ்க்கையை, பழைய வருடத்தை முடிக்கும்போது தேவன் நம்மிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்?

இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய அடிமைத்தன வாழ்க்கையிலிருந்து, விடுவிக்கப்பட்டு தேவன் தங்களுக்கு சுதந்தரமாக கொடுத்த கானான் தேசத்தை சுதந்தரிக்கும்பொழுது, தேவன் தன்னுடைய மக்களிடம் எதிர்ப்பார்த்தது ஒன்றே ஒன்று.

அவர்க‌ள் பிழைக்க, த‌ங்களுடைய‌ வாழ்க்கையில் ஆசீர்வாதமாக இருக்க, அவர்களுடைய செல்வங்கள் பெருக, தேவன் அவர்களுக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதமான வாழ்க்கையில் பிரவேசிக்க தேவன் அவர்களிடம் எதிர்ப்பார்த்தது

அவர் கொடுத்த அவருடைய "கற்பனைகளை/ கட்டளைகளை/ பிரமாணங்களை / வார்த்தையை" கடைப்பிடிக்க அவர்கள் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும் என்பதே.

நீங்களும் புதிய ஆண்டில் புதிய காரியங்களை செய்ய விரும்புகிறீர்களா? தேவனின் விருப்பப்படி அவருடைய வார்த்தைக்கு (கற்பனைகளுக்கு) பயந்து, அவரின் கட்டளைகளைக் கீழ்ப்படிந்து அதை கைக்கொள்ளுவோம்.

கடந்த ஆண்டில் தேவன் நம்மை நடத்திய விதத்தை, நம்மை சிறுமைப்படுத்தின நாட்களையும். நாம் அவருடைய கட்டளைகளுக்கு, வார்த்தைக்கு கீழ்ப்படிகிறோமா?

அவருடைய வார்த்தையை கைக்கொள்ளுகிறோமா? என்று நம்மை சோதித்த விதத்தை, நம்முடைய ஆபத்தில், பிரச்சனையில், போராட்டத்தில், நம்முடைய பெலவீனங்களில் தேவன் நம்மை எப்படி நடத்தினார்.

தேவைகளில் இருக்கும்போது, பசியாய் இருக்கும்போதும், ஒரு தகப்பனைப்போல் தன் பிள்ளையின் தேவைகளை சந்தித்து, அன்புக்காட்டி, அரவணைத்து, சிட்சித்து நடத்திய விதத்தை நாம் திரும்பிப்பார்ப்போம்.

தேவன் நமக்கு செய்த எல்லா காரியங்களை நினைவுக்கூர்ந்து, நம‌க்கு கொடுத்த நல்ல வாழ்க்கைக்காக அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம்.

கடந்த ஆண்டில் என் சாமர்த்தியம் தான், என் கைப்பெலன் தான் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நம்முடைய இருதயத்தில் பெருமைக்கொள்ளாமல் எச்சரிக்கையாயிருந்து, கர்த்தர் தான் இதை எனக்கு செய்தார்.

சம்பாதிக்கும் பெலத்தையும், சாமர்த்தியத்தையும் தந்தார் என்று நினைவுக்கூறுவோம். அவரையே நினைப்போமாக. ஏனெனில் அவரே நம்மை நினைத்திருக்கிறார் அதனால் ஆசீர்வதித்தார்.

அப்பொழுது தம்முடைய வார்த்தையை நம்மிடம் உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் நம‌க்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை நமக்கு கொடுப்பார்.

தேவன் தந்த சொல்லி முடியாத ஈவுகளுக்காக அவருக்கு நன்றி செலுத்துகிற பிள்ளைகளாக இருப்போம்.

தேவனுக்கும், அவருடைய வார்த்தைக்கும் நன்றி செலுத்தி, அவர் செய்த எல்லா நன்மைகளுக்காக‌ அவருக்கு நன்றி செலுத்தி, அவரால் தான் இந்த பழைய ஆண்டை என்னால் கடக்க முடிந்தது என்ற நன்றி உணர்வோடு நாம் இந்த புதிய ஆண்டில் பிரவேசிப்போம். தேவனும் இதைத்தான் எதிர்ப்பார்க்கிறார்.

ஒரு புதிய வாழ்க்கையை, புதிய வருடத்தை நாம் எப்படி சந்திப்பது? புதிய வருடத்தில் எப்படி பிரவேசிப்பது?

நாம் பயம் நிறைந்த காலத்திலே வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் வெவ்வேறான சீர‌ழிவுகள், புது புது நோய்கள். ஒரு பிரச்சனை முடியும்போதே இன்னோரு பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது.

உலகத்திலே எப்போது? என்ன நடக்குமோ? என்ற பயத்தோடு உலகமே கலங்கி கொண்டிருப்பதை நாம் அறிவோம். இந்த சூழ்நிலையில் என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்குமோ? என்ற பயமும், கேள்வியும் எல்லோருக்குள்ளும் நிறைந்திருக்கிறது.

தேவன் மனிதனை உண்டாக்கி, அவனை ஆசீர்வாதமான இடத்தில் வைத்து, த‌ம்முடைய வார்த்தையின் ப‌டியான‌ வாழ்க்கையை மனிதன் வாழ விரும்பினார்.

ஆனால். மனிதனோ தன்னுடைய கீழ்ப்படியாமையினாலே தேவன் எதிர்ப்பார்த்த வாழ்க்கையை வாழ தவறியதால் அவனுடைய வாழ்க்கையில் பயம் வந்தது.

நம்பிக்கையே இல்லாத இந்த காலக்கட்டத்தில், இந்த புதிய வருடத்தில் வந்திருக்கிறோம். அநேகருடைய இருதயத்திலே பயம் சூழ்ந்துள்ளதை நாம் பார்ப்போம்.

எதிர்க்காலம் எப்படி இருக்குமோ என்று தெரியவில்லை?. நாளைக்கு என் வாழ்க்கை என்ன ஆகும்? நான் உயிரோடு இருப்பேனா? எனக்கு என்ன நடக்கும்,?

என்னுடைய பொருளாதார வாழ்க்கை இப்படி முடங்கி கிடக்கிறதே என்னுடைய பொருளாதார வாழ்வு சீர்ப்படுமா? நான் வேலைக்கு சென்றால் வேலை இருக்குமோ இல்லையோ?

இந்த ஆண்டு போன ஆண்டைவிட இன்னும் கொடுமையாக இருக்குமோ? நான் என்ன செய்யப்போகிறேன்? என் வாழ்க்கை எப்படி நடக்கும்? என் பிள்ளையை என்னால் படிக்கவைக்க முடியுமா?

என் குடும்பத்திலே, வியாதிகள், கஷ்டங்கள், சோர்வுகள். இப்படிப்பட்டதான இக்கட்டின் வாழ்க்கையை நாம் நினைக்கும் போது, நிச்சயமாக பயம் நம்மை ஆட்கொள்ளும்.

எத்தனையோ சூழ்நிலையின் மத்தியிலும், நாம் இந்த புதிய வருடத்திற்கு வந்துவிட்டோம்.

இந்தப் புதிய ஆண்டிலாவது பயம் இல்லாத வாழ்க்கை வாழலாம் என்று நினைத்தோமே.? ஆனால் இப்படி நடக்கவில்லையே, நாம் என்ன செய்ய என்ற அநேக கேள்விகள் நம்மில் எழும்பிக்கொண்டிருக்கிறதை நாம் அறிவோம்.

"இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்."ஏசாயா 43:1.


ஒரு மனிதன் இன்னொருவனை தேற்றும்போது அம்மா/அப்பா/அக்கா/தங்கச்சி/தம்பி/ சிஸ்டர்/பிரதர், பயப்படாதீங்க நாங்க உங்கக்கூட இருக்கிறோம் என்று அவர்களை ஆறுதல்படுத்துவதுண்டு.

ஆனால் அதின் பின் விளைவுகளை நாம் சில நாட்களிலேயே பார்க்க முடியும். ஆனால் தேவனும் நம்மை ஆறுதல் படுத்த கூறுகிறாரா? நிச்சயமாக இல்லை.

"பயப்படாதே" என்று தேவன் சொல்லும் போது அதற்கு ஒரு நோக்கம் அல்லது காரணம் உண்டு. தேவன் உண்மையாகவே சொல்லுகிறார். அவர் செய்ய விரும்புகிறதை/ நினைக்கிறதை சொல்லுகிறார்.

மனிதன் உண்டாக்கப்பட்டப்போது; முதன் முதலில் மனிதனுக்கு ஏற்ப்பட்ட உணர்வு பயம் என்பதை நாம் வேதத்தில் காண்கிறோம்.

பயத்தினாலே மனிதனுக்கும், மிருகங்களுக்கும் வேறுப்பாடு உண்டானது என்றும் கூறலாம். பாவம் செய்ததினாலே, பயம் மனிதனை ஆட்கொண்டது எனவும் கூறலாம். (ஏசாயா 11: 6,7,8).

இயேசு கிறிஸ்து நம் வாழ்க்கையின் இரட்சகராக, தெய்வமாக, ஆண்டவராக மாறும்போது நம்மைவிட்டு பயம் நீங்குகிறது.

அதாவது, இயேசு கிறிஸ்து எங்கேயெல்லாம் உயர்த்தப்படுகிறாரோ, அங்கு பயம் இருக்காது. பயமும், நம்பிக்கையும் எப்போதும் கூடி வாழ முடியாது. பயத்துக்கு எதிரித்தான் நம்பிக்கை.

இயேசு கிறிஸ்து சீஷர்களை நோக்கி நாம் அக்கரைக்கு போவோம் வாருங்கள் என்று கூறினார். அவர் தான், அவர்களை வாங்கப்பா நாம் அந்தப்பக்கம் போகலாம் என்றுஅழைத்தார்.

நாம் இந்த புதிய வருடத்தை காண, தேவன் நம்மை அழைத்திருக்கிறார். நம்மை எதற்காக அழைத்தாரோ, அந்த அழைப்பில் அவர் உறுதியாக இருக்கிறார்.

பிதாவினிடத்தில் நம்மை சேர்க்கிறவரை நம்மை காப்பார், நம்மை தன்னுடைய பரிசுத்த ஆவியானவராலே பலப்படுத்துவார் என்று நமக்கு வாக்களித்திருக்கிறா.

அந்த பக்கம் நிச்சயமாக நம்மை கொண்டுப்போவார். ஆனால் நம்முடைய விருப்பப்படி அல்ல, அவருடைய சித்தத்தின்படி.

ப‌லத்த காற்றும், புயலும் வீசியப்போது அவர்கள் பயந்தார்கள். இயேசு அந்த சூழ்நிலையிலும், அலைகள் கப்பலில் மீது வீசியப்போதும் அவர்களோடுதான் இருந்தார்.

இன்றைக்கு, இந்த புதிய வருடத்தில் நம் வாழ்க்கையில் பலத்த காற்றோ, புயலோ, அலைகளோ, நாம் கடக்க வேண்டிய தண்ணீர்களோ, நாம் போக வேண்டிய அக்கினியின் பரீட்சையோ, வாழ்க்கையில் துன்பமோ, பிரச்சனையோ, பாடோ, கவலையோ கொந்தளிக்கலாம்! பயப்படாதே, இயேசு கிறிஸ்து உன்னோடு இருக்கிறார்.

அதற்காக பிரச்சனை, போராட்டம் தான் வாழ்க்கையா? என்று அஞ்ச தோன்றுகிறதா!. இல்லை இல்லை. இயேசு இருக்கிற இடத்தில் சந்தோஷம், சமாதானம், நிம்மதி, ஆறுதல் உண்டு.

ஏனெனில் எந்த சூழ்நிலையின் மத்தியிலும் நம்மை விடுவிக்கிறவராக, நம்மை தப்புவிக்கிறவராக அவர் இருக்கிறார்.

ஏனெனில் நாம் அவரால் உருவாக்கப்பட்டு, அவரால் மீட்கப்பட்ட அவருடைய சொத்து. நாம் அவருக்கு சொந்தம். நம் தகப்பனும், தாயும் நம்மை பெற்று இருக்கலாம்.

ஆனால் நம்மை மீட்டுக்கொண்டு, நம்மை விடுதலையாகிய கர்த்தர் நம்முடைய உரிமையாளராய் இருக்கிறார். நம்மை அவரிடம் இருந்து யாராலும் பரித்துக்கொள்ளவோ, பிடுங்க முடியாது.

நீ இயேசு கிறிஸ்துவின் கையினாலும், பிதாவில் கையினாலும் வைக்கப்பட்டிருக்கிற அவருடைய விலையேறப்பெற்ற சொத்து, நீ அவரின் உரிமை. நீ அவருக்கு சொந்தமானவன்/சொந்தமானவள்.

நான் உலகத்தில் எவருக்கும் சொந்தமல்ல, நான் வெறுக்கப்பட்டவன்/ள் என்று என்னத் தோன்றுகிறதா? உன்னை விடுதலையாக்கி, ம‌றுபடியுமாய் தன்னுடைய இரத்தத்தையே உனக்காக சிந்தி உன்னை விலைக்கு வாங்கியிருக்கிறார்.

அதனால் உன்னை குறித்து தாழ்வு மனப்பான்மை கொள்ளவேண்டாம். அதே சமயத்தில் தேவன் உனக்காக வைத்திருக்கும் வாழ்விலிருந்தும் நீ உன்னை மிஞ்சி எண்ணவேண்டாம்.

நாம் தெளிந்த எண்ணம் உடையவர்களாக இருக்க தேவன் விரும்புகிறார். நித்தியம் வரைக்கும் நம்மை காக்க அவர் வல்லவர்.

வாழ்க்கையின் பிரச்சனை நம்மை வாழ்க்கையின் விழிம்புக்கு கொண்டு செல்லாது. நாம் பிரச்சனையை எப்படி எடுத்துக்கொள்ளுகிறோமோ அது தான் விளைவுகளை உண்டாக்கும்.

சாத்தானோடு வெளிச்சத்திலே வாழ்வதைப்பார்க்கிலும், தேவனோடு இருட்டில் வாழ்வது நலமானது, ஏனெனில் அவர் நமக்கு வெளிச்சமாய் இருக்கிறார்.

தேவன் உண்டாக்கிய விதமாக உன் வாழ்க்கையை பார்க்க பழ‌கு. பிரச்சனைகளின் ஊடாய் நீ நடக்கும்போது, நான் வானத்தில் இருப்பேன் என்று தேவன் கூறவில்லை.

நான் உன்னோடு இருக்கிறேன் என்று கூறுகிறார். தேவனே நம்முடைய பாதுக்காப்பாக இருக்கும்போது நாம் எதற்கும் அச்சவேண்டிய அவசியம் இல்லை. மட்டுமல்ல நாம் தேவனுக்கு அருமையானவர்கள் என்று வேதம் கூறுகிறது.

அதனால் அவரே நமக்கு பெலன் தந்து, நம்மை கனப்படுத்துகிறார். உறவுகளில், நம்முடைய உலக வாழ்க்கையில், ஆவிக்குறிய வாழ்க்கையில் பிளவுகள், பிரிவினைகள் இருக்கலாம்.

ஆனால் தேவன் நம்மை மன்னித்து, நாம் முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாக இருக்க விரும்புகிறார். அவருடைய பிரசன்னம் நம்மோடு கூட இருக்கும்.

நாம் இழ‌ந்துப்போன ஆசீர்வாதங்களை, சிதறிப்போன நம்முடைய‌ வாழ்க்கையை அவர் திரும்ப எடுத்து கட்டி, ஒருங்கிணைத்து நம்மிடம் கொடுக்க விரும்புகிறார்.

அவருடைய நோக்கத்தை உன்னிடம் நிறைவேற்ற விரும்புகிறார். அவருடைய மகிமை விளங்கும்படி உன்னை மறுபடியுமாய் எடுத்து பயன்படுத்த விரும்புகிறார்.

இதற்கு நாம்/நான் செய்யவேண்டிய காரியம். அவருடைய கட்டளைகளுக்கு, கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்து, அவருடைய கற்பனைகளை கைக்கொள்ளவேண்டும்.

நாம் அவருடைய கற்பனைகளை(வார்த்தைகளை) கைக்கொள்ளுவது நம்முடைய தீமைக்காக அல்ல. நமக்கு நன்மை உண்டாக்கும்படி, நாம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழும்படி.

ந‌ம்முடைய வாழ்க்கையைக்குறித்து தேவனுக்கு ஒரு மேலான நோக்கம் உண்டு. உலக வாழ்க்கை, உலகத்தின் காரியங்கள் நம்மை அசைக்காதப்படி நான் நம்மைக்காத்துக் கொள்ளுவோம்.

வாழ்க்கையின் அனைத்து கேள்விகளுக்கும்/பிரச்சனைகளுக்கும் பதிலே தெரியவில்லையா?

இதோ, தேவனின் கேள்வி, உங்களை நோக்கி உங்களின் பதிலாய் வருகிறது.


1. தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

யாரும் இல்லை. யார் நமக்கு விரோதமாய் இருக்கமுடியும். தேவன் நம்மோடு இருக்கும்மட்டும். நாம் கவலைப்படவேண்டியதில்லையே.

2. த‌ம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

உலக வாழ்க்கை அதிக பாரமாக இருக்கா? சுமக்க முடியலையா? பொருளாதார பிரச்சனையா? தம்முடைய சொந்த குமாரனான இயேசு கிறிஸ்துவையே கொடுத்த அவருக்கு உன்னுடைய தேவைகளை சந்திக்க கஷ்டம் கிடையாது.

3. தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை
நீதிமான்களாக்குகிறவர்.

உன்னைக்குறித்து குற்ற உணர்வு இருக்கிறதா? உன் மேல், சாத்தான் குற்றம்சாட்டுகிறானா? மனிதன் குற்றம் சாட்டுகிறானா? உன்னை யாரும் நேசிக்கவில்லையா, நான் ஒரு பாவி என்று சொல்லுகிறாயா?

தேவன் உன்னை நீதிமானாக்க வல்லவர். நீ இன்னும் குற்றமனப்பான்மையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

4. ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்?

கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வ‌லதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.

வாழ்க்கையின் கவலையை விடு. தேவனை தேடு. உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மை எதுவும் எந்த வருடத்திலும், எந்த சூழ்நிலையிலும் பிரிக்காதப்படி நாம் பார்த்துக்கொள்ளவேண்டும்.

உபத்திரவமா? அவர் நம்மோடு இருக்கிறார். வியாகுலமோ, துன்பமோ? அவர் நம்மை அறிந்தும், புரிந்துக்கொண்டும் இருக்கிறார். பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?

எதுவும் கிறிஸ்துவை நம்மிடம் விட்டு பிரித்துக்கொள்ளாதப்படி, அவருடைய அன்பைவிட்டு பிரிக்ககூடாதப்படி நாம் காத்துக்கொள்ள பிரயாசப்படுவோம்.

ஏனெனில் இயேசுவாகிய தேவன், நம்மோடு இருப்பாரானால், இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவர அவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம்.

மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறோமே!.

நம்முடைய திறமை, பட்டம், பதவி, அழகு, பணம், ஐசுவரியம் சார்ந்து வாழ்க்கை அல்ல. ஆண்டவரே, உம்முடைய ஜீவனுள்ளு வார்த்தையை சார்ந்து வாழ்கின்ற வாழ்க்கை வாழ எங்களுக்கு கிருபை தாரும் என்று நாம் அவ‌ரிட‌ம் கேட்போம். க‌ர்த்த‌ர் ந‌ம்மை ஆசீர்வ‌திப்பாராக‌.

தேவன் நம்மை ஆசீர்வதிக்க விரும்பும் போது நம்முடைய பலவீனமோ, நம்முடைய இயலாமைகளோ அவருக்கு தடையில்லை.

அதனால், அவருடைய சித்தம் உன் வாழ்க்கையில் நிறைவேற உன்னை அவருக்கு விட்டுக்கொடு.

இம்மட்டும் எபிநேசராய் நம்முடைய தேவைகளை சந்தித்த தேவன். இம்மானுவேலாய் நம்மோடு இன்றைக்கும், இந்த வருடத்திலும், சதாகால‌மும் ந‌ம்மோடும், ந‌ம்முடைய‌ குடும்ப‌த்தோடும் இருப்பாராக‌.

பிதாவையும், சத்தியமாகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவில் நிரப்பப்படவும், பரிசுத்த ஆவியின் ஒத்தாசையை, பெலனை பெற்றுக்கொள்ளுவதில் உறுதியாக இருக்கவும், உங்களின் இந்த புதிய வருடத்தை தொடங்கவும்

என்னுடைய‌ இனிய‌ புத்தாண்டு ந‌ல் வாழ்த்துக்க‌ள்!!

கருத்துகள் இல்லை: