ஞாயிறு, 25 ஜனவரி, 2009

இரட்சிப்பின் வழி

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையுள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப்பட்டயத்திலும் கருக்கானதாயும் இருக்கிறது. - எபிரேயர் 4.12

தேவன் சொன்னதாவது: என் வாயிலிருந்து புறப்படும் வசனம் வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல்,

அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். - ஏசாயா 55. 11

உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தருகிறது.
- சங்கீதம் 119.130

உலகத்தின் சிருஷ்டிப்பு

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
- ஆதி. 1.1

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. - யோவா. 1.3

மனுஷனின் சிருஷ்டிப்பு

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார். அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்: ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். - ஆதி. 1.27,28

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னுமொரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.
- ஆதி. 2.7,8

தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்திலழைத்துக் கொண்டு வந்து அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கலாம்.

ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்: அதை நீ புசிக்கும் நாளiல் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
- ஆதி. 2. 15-17

பாவத்தின் உட்பிரவேசம்

தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது.

அது ஸ்திரியை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களiன் கனியையும் புசிக்கவேண்டாமென்று தேவன் சொன்னதுண்டோ என்றது.

ஸ்திரி சர்ப்பத்தைப் பார்த்து நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்:ஆனாலும், தோட்டத்தின் நடுவிலிருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன் நீங்கள் சாகாதபடிக்கு அதை புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.

அப்பொழுது சர்ப்பம் ஸ்திரியை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை: நீங்கள் இதைப் புசிக்கும் நாளiலே உங்கள் கண்கள் திறக்கப்படுமென்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்களென்றும் தேவன் அறிவாரென்றது.

அப்பொழுது ஸ்திரியானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தௌiவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாயிருக்கிறதென்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்:
அவனும் புசித்தான். - ஆதி 3. 1-6

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரியை நோக்கி: நீ இப்படிச் செய்ததென்ன என்றார். ஸ்திரியானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல காட்டு மிருகங்களiலும் சபிக்கப்பட்டிருப்பாய்,

நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத்தின்பாய்: உனக்கும் ஸ்திரிக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்:

அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாயென்றார்.

அவர் ஸ்திரியை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்: வேதனையோடே பிள்ளை பெறுவாய்:

உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவானென்றார்.

பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியை புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்:

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்: வெளiயின் பயிர் வகைகளைப் புசிப்பாய்.

நீ பூமியிலிருந்தெடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்கு திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்: நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாயென்றார்.
- ஆதி. 3. 13-19

பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் உலகமனைத்தையும் மோசம்போக்குகிறது.
- வெளi. 12. 9

இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்தில் பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ் செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது. - ரோமர் 5. 12.

கடவுளுக்கு முன்பாக மனுஷன் குற்றவாளி
நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம். - ஏசா. 53. 6

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். எல்லாரும் வழி விலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்: நன்மை செய்கிறவனில்லை. ஒருவனாகிலுமில்லை. - சங். 14. 2,3.

அந்தப்படியே நீதிமானொருவனாகிலும் இல்லை. சமாதான வழியை அவர்களறியாதிருக்கிறார்கள். அவர்கள் கண்களுக்கு முன்பாக தெய்வ பயமில்லை. எல்லாரும் பாவஞ் செய்து தேவமகிமையற்றவர்களானார்கள். - ரோமர் 3. 10,17,18,23

வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின் கீழடைத்துப்போட்டது. - கலா. 3. 22

மனுஷன்பேரில் கடவுள் வைக்கிற அன்பு
தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவனெவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். - யோவா. 3.16

தம்முடைய ஒரே பேரான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்ததினாலல்ல, அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய
குமாரனையனுப்பினதினாலே அன்புண்டாயிருக்கிறது. - 1 யோவா. 4 . 9,10

கடவுளுடைய குமாரன் இப்பூலோகத்திற்கு வருதல் பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தாரென்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும்
பாத்திரமுமானது. - 1 தீமோ. 1 . 15

கிறிஸ்து இயேசு ... மனுஷசாயலானார். - பிலி. 2 . 5,7

அவர் உலகத்திலிருந்தார், உலகம் அவர் மூலமாயுண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை. - யோவா. 1. 10

அவருடைய பிறப்பு

இயேசு கிறிஸ்துவினுடைய ஜெனனத்தின் விபரமாவது - தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறினது.

அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேலென்று பேரிடுவார்களென்று சொன்னான்.

இம்மானுவேலென்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறாரென்று அர்த்தமாம். - மத். 1. 18,22,23.

அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக: ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பாரென்றான். - மத். 1. 21.

அவர் உலகத்தில் ஜீவித்த ஜீவியம்

நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்:

தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையிலகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்தார். - அப். 10. 38

இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெபாலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்குண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி அவர்களை சொஸ்தமாக்கினார். - மத். 9. 35

சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து,

அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள் அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார். - மத். 15. 30

அவருடைய மரணத்தினால் பாவநிவர்த்தி உண்டானது மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும் சிலுவையில் அரையப்படவும் வேண்டும். - லுக். 24. 7

கபாலஸ்தலமென்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரை சிலுவையில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்றறியாதிருக்கிறார்களே என்றார். - லுக். 23. 33,34

அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடநுபவிப்பவருமாயிருந்தார்.

மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். நாமோ, அவர் தேவனாலடிக்கப்பட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்கனிமித்தம் அவர் நொருக்கப்பட்டார், அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்: கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்தறுப்புண்டுபோனார்: என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார். துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக் குழியை நியமித்தார்கள்:

ஆனாலும், அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்: அவர் கொடுமை செய்யவில்லை: அவர் வாயில் வஞ்சனையிருந்ததுமில்லை:

அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி அக்கிரமக்காரரிலொருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தை தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டார்.
- ஏசாயா 53: 3-6, 8, 9, 12.

கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார். 1 கொரி. 15: 3

கர்த்தராகிய இயேசு சொன்னதாவது: நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளுமெனக்குண்டு: அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும். அவைகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். - யோவா. 10: 11,16

அவருடைய உயிர்த்தெழுதலும் பரமேறுதலும்

எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந் தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது.

அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. - லுக். 24: 46,47

மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார்.

ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார். - அப். 10: 40,41

இயேசு பாடுபட்டபின்பு நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்திற்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகத் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.

அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அப். 1: 3,9

தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார். தேவதூதர்களால் காணப்பட்டார்,

புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். - 1 தீமோ. 3: 16

கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். மனுஷனால் மரணமுண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்தெழுதலும் உண்டாயிற்று.

ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். - 1 கொரி. 15: 20-22

கடவுள் ஏற்படுத்திய இரட்சிப்பின் வழி

இரட்சிக்கப்படும்படிக்கு நானென்ன செய்யவேண்டும்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய். - அப். 16: 30,31.

உங்கள் பாவங்கள் நிவர்த்திசெய்யப்படும்பொருட்டு, நீங்கள்
மனந்திரும்பிக் குணப்படுங்கள். - அப். 3: 20.

நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். - அப். 2: 38

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியுமுள்ளவராயிருக்கிறார். - 1 யோவா. 1: 9.

கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும்: இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைப்பண்ணப்படும். - ரோமர் 10: 9,10.

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்: இது உங்களாலுண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. - எபே. 2: 8.

கர்த்தராகிய இயேசு சொன்னதாவது: என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. - யோ. 6: 37.

ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். - யோவா. 17: 3.

அவருடைய இரத்தத்தின் மூலமாய் உண்டாகிய இரட்சிப்பு
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். - எபே. 2: 13.

தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகலபாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். - 1 யோவா. 1: 7

சுகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் பிதாவுக்குப் பிரியமாயிற்று. - கொலோ. 1: 19,20.

அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்றறிந்திருக்கிறீர்களே. - 1 பேதுரு 1: 18,19

அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்குண்டாகிறது. - எபே. 1: 7

ஆத்துமாவிற்காகப் பாவநிவர்த்தி செய்கிறது இரத்தமே. - லேவி. 17: 11

ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்: பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. - 2 கொரி. 5: 17

பரிசுத்த ஆவியானவர்
கர்த்தராகிய இயேசு சொன்னதாவது: நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது:

அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். - யோவா. 14: 16,17

என் நாமத்தினாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார். - யோ. 14: 26

நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப்பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். - எபே. 4: 30

ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். - கலா. 5: 16

எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். - ரோம. 8: 14

ஆவியினால் நிறைந்திருங்கள். - எபே. 5: 18

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்: இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணமொன்றுமில்லை. - கலா. 5: 22,23

பரிசுத்தமாகுதல்


நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. - 1 தெச. 4: 3

இயேசு சொன்னதாவது: பிதாவே, உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்: உம்முடைய வசனமே சத்தியம்.
- யோவா. 17: 1,17

பரிசுத்தஞ் செய்கிறவரும் பரிசுத்தஞ் செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள் இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படவில்லை.
- எபி. 2: 11.

உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
- ரோம. 6: 11

நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும்
பலன், முடிவோ நித்திய ஜீவன். - ரோமர் 6: 22

சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். - 1 தெச. 5: 23,24


ஜெபம்


கர்த்தராகிய இயேசு சொன்னதாவது: நீங்கள் என் நாமத்தினாலே எதைக்கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.

என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதைநான் செய்வேன். - யோவா. 14: 13,14

நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். - யோவா. 15: 7

கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள். - யோ. 16: 24.

நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோமென்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்குண்டாகும்.
- மாற். 11: 24

எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன் பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும்வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள். - எபே. 6:18

இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். - 1 தெச. 5: 17

ஊழியமும் அதனால் வரும் துன்பமும்
இயேசு சொன்னதாவது: ஒருவன் என்னைப் பின்பற்றி வரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். - மத். 16: 24

நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
- 2 கொரி. 9: 8.

கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்றறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக. - 1 கொரி. 15: 58

கிறிஸ்துவிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப்பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.
- பிலி. 1: 29

நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்: பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்.
- 1 பேது. 3: 14

நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்: ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார். - 1 பேது. 4: 14

சொரூப வணக்கம் கடவுளால் விலக்கப்பட்டிருக்கிறது

உன் தேவனாகிய கர்த்தர் நானே, என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருகிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்: நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்:

உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறேன். - யாத். 20: 2-5
சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே: கர்த்தரோ
வானங்களை உண்டாக்கினவர். - சங். 96: 5

உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்fறும் அறிந்திருக்கிறோம்.
- 1 கொரி. 8: 4

பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும்
உண்டாயிருக்கிறது. இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு: அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது. அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 1 கொரி. 8: 6

இயேசு சொன்னதாவது: அப்பாலே போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறது. - மத். 4: 10

விபச்சாரம், அசுத்தம், மோகம், துர் இச்சை விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.

இவைகளின் பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்.
- கொலோ. 3: 5,6

கடவுளின் இரட்சிப்பைத் தள்ளி விடுவது அபாயம்

இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்? - எபி. 2: 4

குமாரனிடத்தில் (இயேசு கிறிஸ்து) விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை. தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்.
- யோ. 3: 36

வருங்கோபத்திற்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? - லுக். 3: 7

பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள். - வெளி. 21: 8

பிசாசினின்றும் தீமையினின்றும் விடுதலை

சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார். - ரோமர் 16: 20

இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். - கொலோ. 1: 13

பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். - 1 யோவான். 3: 8

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து .... நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார். அவருக்கு என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக.
- கலா. 1: 3,4,5

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத்
திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள். - எபே. 6: 11

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். - 1 கொரி. 15: 57

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை கர்த்தராகிய இயேசு சொன்னதாவது: நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்திலே சேர்த்துக்கொள்ளுவேன். - யோவான். 14: 3

உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ அப்படியே மறுபடியும் வருவார். - அப். 1: 11

கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்:

அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். - 1 தெச. 4: 16,17

அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். - 1 யோவான். 3: 2

உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்....நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் (இயேசுகிறிஸ்து) வருவார்: ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். - மத். 24: 42,44

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்: அவனவனுடைய கிரியைகளின்படிஅவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.- வெளி. 22: 12

ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும். - வெளி. 22: 20

கருத்துகள் இல்லை: