ஞாயிறு, 25 ஜனவரி, 2009

தாய்மொழியில் வேதாகமம்

நம் இந்திய தேசத்திலுள்ள பல நூறு மக்கள் கூட்டங்களுக்கு இடையேத் தொடர்பு என்பது எப்போதுமே மிகவும் சிக்கலானதாகவும் கடினமானதாகவுமே இருந்து வந்துள்ளது.

ஒரு குழுவினரிடமிருந்து ஒரு செய்தியை மற்றொருவரிடம் பகிர்நது கொள்வதற்கு அதிக அனுபவமும் ஆற்றலும் தேவை.

பல விதமான மொழிகளும் பல தரப்பட்ட கலாச்சாரப் பிண்ணனிகளும் இணைந்திருப்பதால் இது மிகவும் கடினமாக உள்ளது.

நகரங்களில் வாழும் பெரும்பாலான இந்தியர்களால் இரண்டு அல்லது மூன்று மொழிகளைப் பேசவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது.

எனினும் தங்கள் தாய் மொழியை மட்டுமே பேசுகின்ற ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். இப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான மொழிக் குழுக்கள் இந்தியாவில் உள்ளன.

இவற்றில் பெரும்பான்மையானவற்றின் மக்கள் தொகை மிகவும் குறைவே. இந்த மொழிகள் ""சிறுபான்மை மொழிகள்'' என அழைக்கப்படுகின்றன.

இந்தியாவின் முக்கிய மொழிகளில் வேதாகமம் இருப்பதினால் அதுவே ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்யப் போதுமானது என்னும் பொதுவான கருத்து நிலவுகிறது.

மக்களுடன் மிகச் சிறந்த முறையில் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமானால், தேவனுடைய வார்த்தை மாநில மொழியில் இருந்தால் மட்டும் போதாது,

அவரது தாய்மொழியிலும் இருக்கவேண்டும் என்பது நமக்கு கடந்த கால அனுபவங்கள் கற்றுத் தந்த பாடமாகும்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக முக்கிய காரணமாக, தாய்மொழியே உலகெங்கிலு முள்ளவர்கள் முதலில் கற்றுக்கொள்ளும் மொழியாகும்.

அது இயல்பான முறையில் வீட்டில் கற்கப்படுகிறது. தாய்மொழியே ஒருவரது கலாச்சாரம், நம்பிக்கை ஆகியவற்றின் சின்னமாகவும் இருக்கிறது.

சுவிசேஷம் பரம்புவதற்கு ஏற்ற ஒரு சிறந்த சாதனமாகவும், சபை வளர்ச்சிக்கான ஒரு கருவியாகவும் தாய்மொழி வேதாகமத்தைப் பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தி வருகிறார்.

சபை வரலாற்றை நாம் படிக்கும்போது, தாய்மொழி வேதாகமத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

""இந்த இரண்டாயிரம் ஆண்டு சபை வரலாற்றில் வேதாகமத்தை வாசிக்காமல், நல்ல வளர்ச்சிபெற்ற செழிப்பான ஒரு சபையை நாம் காண முடியாது.

தொடர்ந்த வேத வாசிப்பு இல்லாத ஒரு சபை தவறான உபதேசங்களுக்குள்ளோ அல்லது நிரந்தர அழிவுக்குள்ளோ சென்றுவிடும்.''

பில் ரைஸ், லிட்ரஸி அண்டு இவாஞ்சலிஸம் இன்டர்நேஷனல்

""சொந்த மொழியில் வேதாகமம் இல்லாமலேயே நன்கு வளர்ச்சியடைந்த ஸ்திரமான, உறுதியான சபையை திருச்சபை வரலாற்றிலேயே நாம் காண முடியாது.''

டாக்டர். ரிச்சர்டு பிட்மன், மொழியியலார்.

""ஊழியத்தின் வெற்றி, தோல்வி என்பது கிறிஸ்துவுக்குள் வந்தவர்கள் தங்கள் சொந்த மொழியில் வேதாகமத்தை வைத்திருந்தார்களா என்பதைப் பொறுத்தே அமையும் என்பதை ஊழிய வரலாறு நமக்குக் காட்டுகிறது.''

டாக்டர். ஜி. கேம்ப்பெல் மார்கன்

பிலிப்பைன்ஸ் நாட்டின் பொலாங்காவோ மக்களின் மொழியில் வேதாகமம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்க்கப்பட்டது.

அந்த மொழிபெயர்ப்பை தன் கைகளில் வாங்கிய அவர்களுடைய போதகர்களில் ஒருவர், ""மிஷனெரி தேவ வார்த்தையை மொழிபெயர்க்காமல் எங்களிடத்தில் கூறியிருப்பாரானால், மிஷனெரி எங்களை விட்டு சென்றவுடனேயே எங்கள் சபை அழிந்து போயிருக்கும்.

தேவ வார்த்தை எங்களது சொந்த மொழியில் மொழிபெயர்க்கப் பட்டிருப்பதால், எங்கள் சபைகள் இன்னும் உயிரோடிருக்கின்றன.'' எனக் கூறினார்.

இதைப் போன்ற இன்னும் அநேக உதாரணங்களைக் கூறலாம். பொதுவாகக் கேட்கப்படும் கேள்வியென்னவெனில்: ஒரு சபையின் வளர்ச்சி பெரும்பாலும் ஏன் தாய்மொழி வேதாகமத்தையே சார்ந்துள்ளது? அதற்கான காரணங்களில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

புரிந்துகொள்ளும் திறன்

ஒரு குறிப்பிட்ட மொழியினைப் பேசும் மக்கள் மற்றொரு மொழியினைப் புரிந்து கொள்ளும் திறன் மிகவும் அதிகமாக இருந்தாலும், அம்மொழியிலுள்ள வேதாகமத்தை சிறந்த முறையில் உபயோகிக்க முடியாது. கீழ்க்காணும் உதாரணத்தை கவனியுங்கள்.

"அ' குழுவினர் தங்கள் தாய்மொழியில் வேதாகமம் வைத்திருக்கின்றனர். "ஆ' குழுவினருக்கு தாய்மொழி வேதாகமம் கிடையாது.

"ஆ' குழு மக்கள் "அ' குழுவினரின் மொழியிலுள்ள வார்த்தைகளில் 80 சதவீதத்தைப் புரிந்துகொள்ளுகிறார்கள் என மொழியியல் ஆய்வறிக்கைக் கூறுகிறது என வைத்துக்கொள்வோம்.

எனவே, "ஆ' மொழி பேசும் மக்களுக்கு "அ' குழு மக்களுடைய வேதாகமத்தைக் கொடுக்கலாம் என்பதே இயல்பாக நாம் அளிக்கக் கூடிய தீர்வாகும்.

ஆனால், இது சரியான ஒரு பதிலாகாது. அது ஏன் என்பதைக் கீழ்க்காணும் பகுதி விளக்குகிறது.

நமக்கு மிகவும் பரிச்சயமான நீதிமொழிகள் 3:5-6 வசனங்களை எடுத்துக் கொள்ளுவோம்:

""உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.''

இந்த வசனங்கள் "அ' குழுவினரின் மொழியில் இருக்கிறது என வைத்துக் கொள்வோம்.

"ஆ' மொழி பேசும் மக்கள் 20 சதவீதத்தைப் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும் (மேலேயுள்ள 17 வார்த்தைகளில் சுமார் 4 வார்த்தைகள்).

புரிந்துகொள்வதற்குக் கடினமாயுள்ள 4 வார்த்தைகளை நீக்கிவிட்டால் அந்த பகுதி இவ்வாறு இருக்கும்:

""உன் -------- சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் -----------, உன் ------------- அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் ---------------.''

20 சதவீத வார்த்தைகளை மட்டுமே அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லையெனினும், இந்த செய்தி அவர்களுக்கு எந்தவொரு அர்த்தத்தையும் கொடுக்கவில்லை.

சிறுபான்மை மொழி பேசும் மக்கள், தேசிய அல்லது மாநில மொழியில் உள்ள வேதபகுதிகளைப் புரிந்து கொள்ள கடினப்படுவதற்கு இது ஒரு காரணமாகும்.

கலாச்சாரம்

தெற்கு பசிபிக் பகுதியில் வாழும் ஜிபு இனத்தவரில் ஆண்கள் பெண்களை மிகச் சிறிய காரணங்களுக்காக மிகவும் அதிகமாக அடிப்பர்.

மாற்கு 5:25-34 இல் கொடுக்கப்பட்டிருக்கின்ற, இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டு குணமான ஸ்திரீயின் கதை ஜிபு மக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது.

தம்மைத் தொட்ட எவரோ குணமானதை உணர்ந்த இயேசு திரும்பி, ""என்னைத் தொட்டது யார்?'' எனக் கேட்டார்.

அந்தப் பெண் மரியாதையைக் காண்பிக்கும் விதமாக இயேசுவின் காலடியில் விழுந்தார். ""அந்தப் பெண் ஏன் அவர் காலடியில் விழுந்தாள்?'' எனக் கேட்டதற்கு, ""அவர் தமது கையில் ஒரு தடியை எடுத்துக் கொண்டு அடிப்பதற்கு ஆயத்தமானார்.'' என்பது அவர்கள் பதிலாக அமைந்தது.

இந்த காரணத்திற்காகவே ஜிபு பெண்கள் ஆண்கள் காலடியில் விழுவது வழக்கமாயிருந்தது. இயேசு பெண்களை அடிப்பவர் என ஜிபு மக்கள் புரிந்து கொண்டனர்.

கலாச்சார வேறுபாடுகள் ஒரு செய்தியை எவ்வளவு தவறாக அவர்கள் புரிந்துகொள்ளும்படி செய்துவிட்டது பாருங்கள்!

வேறொரு மொழியில் வேதபகுதியை வாசிக்கும்போது அது பொதுவாக தவறாகப் புரிந்துகொள்ளச் செய்துவிடும்.

எனவே ஒரு கலாச்சாரத்திற்கும், மொழிக்கும் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பானது பெரும்பாலும் தவறான அர்த்தத்தையே - அதுவும் அவர்கள் முற்றிலும் புரிந்து கொள்ளும் சூழ்நிலையிலும்கூட கொடுக்கிறது.

உருவகம்

வெளிப்படுத்தல் 2:23ல் கிறிஸ்து தியத்தீரா சபைக்குக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

""அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்.''

ஆனால் மூல மொழியான கிரேக்க மொழியில் இது, ""நானே சிறுநீரகங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவர்'' என்று உள்ளது.

முக்கிய மொழிபெயர்ப்புகளில் ""சிறுநீரகம்'' என்னும் வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. நாம் ஏன் இந்த ""சிறுநீரகம்'' என்னும் வார்த்தையை பயன்படுத்தக்கூடாது?

ஏனெனில் இந்த வார்த்தை வேறொரு அர்த்தத்தைக் கொடுக்கக்கூடிய உருவகமாக இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

வேதாகமம் முழுவதும் இப்படிப்பட்ட உதாரணங்கள் உள்ளன. வார்த்தைக்கு வார்த்தை நாம் அவற்றை மொழிபெயர்ப்போமானால் அவை விநோதமான அர்த்தத்தைக் கொடுக்கும்.

எனவே ஒவ்வொரு மொழிக்கும், அந்தந்த மொழியின் கலாச்சாரத் தேவைக்கேற்ப வேதாகம உருவகங்களை பயன்படுத்த வேண்டும்.

கதை சொல்லும் பாங்கு

அமேசோனியப் பகுதியில் ஒரு மொழிபெயர்ப்பாளர் பணியாற்றி வந்தார். ஒரு சில ஆண்டுகளுக்குள்ளாகவே அவர் அந்த மொழியைக் கற்று விட்டார்.

ஒரு சிலர் இயேசுவின் மேல் தங்கள் விசுவாசத்தை வைத்தனர்.

ஒரு முறை, கிறிஸ்மஸ் நாட்கள் நெருங்குகின்ற வேளையில், அந்த மக்களுக்கு இயேசுவின் பிறப்பின் கதையை அவர்கள் சொந்த மொழியிலேயே முதன் முறையாகத் தர விரும்பினார்.

அவர் லூக்கா எழுதின சுவிசேஷம் இரண்டாம் அதிகாரத்திலுள்ள பெத்லகேம் கதையை மொழிபெயர்த்தார்.

அதை அந்த உள்ளூர் கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்த்தார். ஆனால் அவர் அதை வாசித்தபோதோ, மக்கள் குழப்பமுற்றார்கள்.

சிறிது நேரத்திற்குப் பின்னரே மொழிபெயர்ப்பாளருக்கு பிரச்சனை என்னவென்று புரிந்தது. அவர்கள் கலாச்சாரத்தில், எந்தவொரு கதையின் முதல் வாக்கியமும் அந்தக் கதை எதைப்பற்றியது என்று கூறும் கதைச் சுருக்கத்துடன் ஆரம்பிக்க வேண்டும்.

லூக்கா இரண்டாம் அதிகாரம், அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டும் என்று அகஸ்துராயனால் கட்டளை பிறந்தது.'' என ஆரம்பிக்கிறது.

மக்கள் இதை இந்தக் கதையின் தலைப்பு என எண்ணி, இந்தக் கதை குடிமதிப்பைப் பற்றியது என நினைத்தனர். ஆனால் தொடர்ந்து கதை வாசிக்கப்பட்டபோது, அதில் குடிமதிப்பு எழுதுவதைப் பற்றி வேறெதுவும் குறிப்பிடப்படவில்லை.

எனவே அவர்கள் குழப்பமுற்றதால், அந்த அற்புதமான கிறிஸ்துவின் பிறப்பின் கதையை அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அந்த மொழிபெயர்ப்பாளர், லூக்கா இரண்டாம் அதிகாரத் துவக்கத்தில் ஒரு வாக்கியத்தை சேர்த்தார்.

அது, ""இந்த சம்பவம் தேவன் எவ்வாறு தமது குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார் என்பதைப் பற்றியது'' என்பதாகும். உடனே அந்த மக்கள் அந்தக் கதையைப் புரிந்துகொண்டனர்.

கருத்துக்களை வெளியிட ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனிப்பட்ட பாணி இருக்கிறது. ஒரு மொழியில் கையாளப்படும் பாணி அடுத்த மொழியில் பிரயோகிக்கப்பட்டால் குழப்பத்தையே தரும்.

புரிந்துகொள்ளும் ஆற்றல் மிகவும் அதிகமாக இருந்தாலும், ஒரு மொழியில் உள்ள மொழிபெயர்ப்பு மற்றொரு மொழிக்கு ஏற்றதாக அமையாது.

இதய மொழி

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நவாஜோ என்னும் சிறுபான்மை மொழிபேசும் மக்கள் உள்ளனர். 100 வருடங்களுக்கும் மேலாக அவர்கள் மத்தியில் மிஷனெரிப் பணி நடந்து வந்தும் எந்த பலனும் இல்லை.

சமீபத்தில் வேதாகமம் நவாஜோ மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்போது, அங்கு நன்கு ஸ்திரமான சபை உள்ளது.

பழைய நாட்களை நினைவுகூரும் நவாஜோக்கள் இவ்வாறு கூறுகின்றனர்: ""முன்பு நாங்கள் கிறிஸ்தவத்தை "வெள்ளைக்காரர்களின் மதம்' என எண்ணி வந்தோம்.

ஆனால் இப்போதோ, தேவன் எங்களோடு எங்கள் சொந்த மொழியில் பேசுகிறார். நாங்கள் கிறிஸ்தவத்தை "வெள்ளைக்கார மதமாக' எண்ணுவதை நிறுத்திவிட்டோம்.''

அநேக நவாஜோக்கள் ஆங்கில வேதாகமத்தை வாசித்துப் புரிந்துகொள்ளும் அளவிற்கு ஆங்கிலம் அறிந்திருந்தனர்.

ஆனால் தேவ வார்த்தை அவர்களுக்கு ஆங்கிலத்தில் - அதாவது, அவர்கள் மேல் அதிகாரம் செலுத்தும் "வெள்ளைக்கார' மொழியில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டபோது அது கவர்ச்சிகரமானதாக இருக்கவில்லை.

அந்த செய்தி நிராகரிக்கப்பட்டதில் ஆச்சரியமேதும் இல்லை! அது அவர்களுக்கு அவர்கள் சொந்த மொழியில் கொடுக்கப்பட்டபோது கவர்ச்சிகரமாக மாறினது. நவாஜோக்களுக்கு அது இதய மொழியைக் குறித்த காரியமாக இருந்தது.

ஒருவரை அவர் தாய்மொழியைத் (இதய மொழி) தவிர எதுவும் எளிதில் அசைக்க முடியாது.

கிரெகொரியோ டிங்ஸன் என்னும் பிரபல பிலிப்பைன்ஸ் நாட்டு சுவிசேஷகர், ""என் நாட்டில் பரவலாக ஆங்கிலம் பேசப்படுகிறது.

ஆனால் ஒரு வாலிபர் தன் காதலியிடம், "நான் உன்னை நேசிக்கிறேன்' எனக் கூற விரும்பும்போது, தன் சொந்த மொழியிலேயே கூறுவார்.

ஆங்கிலத்தில் கூறமாட்டார். ஏனெனில் அப்போது வாலிபனுடைய ஆன்மா அந்தப் பெண்ணின் ஆன்மாவுடன் பேசுகிறது.'' எனக் கூறுகிறார்.

தேவன் இந்த உலகத்திலுள்ள ஒவ்வொருவரிடமும் ""நான் உன்னை நேசிக்கிறேன்'' எனக் கூற விரும்புகிறார்.

அவர் வேதாகமத்தைக் காட்டி, ""என்னுடைய அன்பின் கதை இங்கே உள்ளது!'' எனக் கூற விரும்புகிறார்.

இந்த ஆவலை, பெந்தேகோஸ்தே என்னும் நாளிலே அவரவர் சொந்த மொழியில் அனைவரிடமும் பேசியதின் மூலம் இதை வெளிக்காட்டினார்.

இந்திய தேசத்தில் குறைந்தபட்சம் இன்னும் 200 சிறுபான்மை மொழிகளில் வேதாகமம் தேவைப்படுகிறது.

இந்த மொழிக்குழுவினர் தங்கள் மொழியைத் தவிர வேறெந்த மொழியிலும் வேத வசனங்களின் அர்த்தத்தை முழுவதுமாகப் புரிந்துகொள்ள இயலாதவர்கள்.

""நீங்கள் உலகமெங்கும் போய்... நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் கைக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு உபதேசியுங்கள்.''

எழுதப்பட்ட தேவ வார்த்தைகளை அனைத்து மொழிக்கூட்டத்தினருக்கும் கொடுக்கும் இந்த மகா உன்னதப்பணியில் நாமும் இணைவோம்.

இதுவே அவர்கள் மத்தியில் ஒரு ஆரோக்கியமான உயிருள்ள சபை வளருவதை உறுதி செய்யும்.

கருத்துகள் இல்லை: