புதன், 7 ஜனவரி, 2009

இருளை ஒளியாக்குதல்

இறை நம்பிக்கையுள்ள மக்கள் தெய்வீக ஒளியை நம்புகிறார்கள். பைபிள் கூறுகிறது: "தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை…" (1 யோவான் 1:5).

தேவன் தன் சித்தத்தை தன் தீர்க்கதரிசிகளுக்கு அறிவிப்பதின் மூலமாக இருளில் தன் ஒளியை பிரகாசிக்கச் செய்தார்.

வேதவசனம் இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது, "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது " (சங்கீதம் 119:105).

குர்‍ஆன் கூறுகிறது " அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) ...நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன"(சூரா 24:35, 5:44).


கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இயேசு கிறிஸ்து "இறைவனின் வார்த்தையாக இருக்கிறார்" என்று நம்புகிறார்கள் (அரபியில் கலிமதுல்லா).

அவர் தேவனுடைய வார்த்தையாக இருப்பதினால், வெளிச்சத்தை கொடுக்கிறார். நற்செய்தி என்றுச் சொல்லும் இஞ்ஜிலில் நாம் படிக்கிறோம்,

"அந்த வார்த்தை மாம்சமாகி...அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது;" (யோவான் 1:14, 4, 5).

இன்னும் குர்‍ஆனிலும் படிக்கிறோம், அதாவது இயேசு இஞ்ஜிலை பெற்றார், "அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன, அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது" (குர்‍ஆன் 5:46).


வெளிப்படும் ஒளி -


இயேசு குழந்தையாக இருக்கும் போது, அவரை விருத்தசேதனம் செய்வதற்காக ஆலயத்திற்கு கொண்டுவந்த போது, அவரைப் பற்றி ஒரு ஆச்சரியமான தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது.

"அவன்(சிமியோன்) அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே,... புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்"(லூக்கா 2:28-32).


மேசியாவின் மூலமாக வெளியாக்கப்பட்ட இந்த வெளிச்சமானது, "அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், ...அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.."(லூக்கா 1:78,79) என்று சொல்லப்பட்டது.

இதுமட்டுமல்ல‌, இன்னொரு தீர்க்கதரிசனமும் மேசியாவினால் நிறைவேறியது, "..என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்;.."(மல்கியா 4:2).


சுகப்படுத்தும் ஒளி


"நீதியின் சூரியன் உங்கள் மேல் உதித்து, அதன் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்" என்ற தீர்க்கதரிசனத்தின் பொருளை விளக்குவது போல ஒரு அரேபிய பழமொழி உண்டு. இந்த பழமொழி, சூரியனுக்கும், ஆரோக்கியம் அடைவதற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்குகிறது.

இது மக்களுக்கு அறிவுரை இப்படியாக கூறுகிறது: "நீ மருத்துவரிடம் செல்வது போல, சூரியனிடம் போ - Go to the sun like you go to the doctor". இதனால் தான், தங்கள் உடலின் தோலில் சுகவீனமுள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள், காலையில் உதிக்கும் சூரிய ஒளியில் சிறிது நேரம் காட்டும் படி உற்சாகப்படுத்துகின்றனர்.

இதுமட்டுமல்ல, சூரிய ஒளியின் மூலமாக நம் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான "உயிர்ச்சத்து டி"யை நாம் பெறமுடியும் மற்றும் நீண்ட நாட்களாக சோர்ந்துப் போய் இருக்கும் மன அழுத்தமுள்ளவர்களுக்கும் சூரிய ஒளி நனமையை பயக்கும்.


இயேசு மிகவும் அற்புதமான முறையில் பலரை சுகப்படுத்தினார் என்பதை நாம் அறிவோம். இஞ்ஜிலில் இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது,

அதாவது இயேசுவினால் "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது...

பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, ... ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்... அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார்"(மத்தேயு 4:15,23,24).


இரட்சிக்கும் ஒளி


இயேசு சுகமாக்கிய அனேக மக்களில் சிலரின் நோய் மிகவும் தீவிரமாக இருந்தது. இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையில் இயேசு இடைப்பட்டதால், அவர்கள் உயிர் பிழைத்தார்கள், இவர்களுக்கு அவரே இரட்சிப்பாக மாறினார்(லூக்கா 7:2, 8:43).

தன் வல்லமையுள்ள‌ ஒளியை மரணத்தை எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்தவர்களின் மீது பாய்ச்சி காப்பாற்றியதால், "மரண இருளில் இருந்தவர்களுக்கு அவர் வெளிச்சம் கொடுத்தார்" என்ற மேசியா பற்றிய வசனங்களின் பொருள் இன்னும் சிறப்பு மிக்கதாக மாறுகிறது.

இது மட்டுமல்ல, மரித்துப்போனவர்களையும் அவர் உயிரோடு எழுப்பினார், இதனை பைபிளும் குர்‍ஆனும் போதிக்கின்றன. குஷ்ட வியாதியினால் நம்பிக்கையின்றி வாழ்ந்தவர்களுக்கு, இயேசு நம்பிக்கையின் கலங்கரை விளக்காக இருந்தார்.


மேசியாவின் ஒளியைப் பற்றிய இன்னொரு தீர்க்கதரிசனத்தை நாம் சிந்திப்பது நல்லது. ஏசாயா 49:6ல் நாம் படிக்கிறோம், தேவனுடைய தாசனாகிய மேசியா இரட்சிப்பு மற்றும் ஒளியாக இருக்கிறார், "பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன்".


வாழ்வு தரும் ஒளி


இதற்கு முன்பாக "தேவனுடைய வார்த்தை நம் எல்லாருடைய‌ வாழ்விற்கு ஒளி தருகிறது" என்று கண்டோம். இப்போது நாம் இயேசுவின் போதனை எப்படி வாழ்வு தருகிறது என்பதைக் காண்போம், மற்றும் ஒளிக்கும் வாழ்விற்கும் இடையே உள்ள தொடர்பையும் காண்போம். "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" என்று இயேசு கூறினார்

மற்றும் "என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்"(யோவான் 8:12).


இயேசு வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பல ஆண்டுகளுக்கு பின்பு, தன் சீடரான யோவானுக்கு தரிசனத்தில் இவ்விதமாக கூறினார்:

".. நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்."(வெளி 1:16-18).


இயேசுவின் முகம் பற்றிச் சொல்லும் போது, "அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது" என்று யோவான் விவரிக்கிறார்.

இயேசுவின் முகத்திலிருந்து வெளிப்பட்ட இந்த ஆச்சரியமான ஒளி நமக்கு "நீதியின் சூரியன்" என்று மேசியாவைக் குறிக்கும் பெயரை நியாபகப்படுத்துகிறது.

பிரகாசமான ஒளி என்பது அவர் பாவமற்ற பரிசுத்தர் என்பதை காட்டுகிறது (சூரா 19:19ஐ ஒப்பிட்டுப்பார்க்கவும்).


நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கலாமா? "உண்மையிலேயே இயேசு மரித்ததிலிருந்து எழுந்தார் என்றுச் சொன்னால், அவரிடம் மரணத்தின் மற்றும் பாதாளத்தின் திறவுகோள் உள்ளது என்று பொருள் படுகிறதல்லவா?"

இயேசு பாதாளத்தின் காரிருளில் நுழைந்து மற்றும் அதிலிருந்து வெற்றிகரமாக வெளியே வந்தார். இதைப்போல செய்தவர்கள் யாருமில்லை!(


யூத‌ர‌ல்லாத‌வ‌ர்க‌ளுக்கு ஓளி -


யோவான் 4ம் அதிகார‌த்தில் ஒரு சுவார‌சிய‌மான‌ நிக‌ழ்ச்சி ந‌டைபெறுகிற‌து, இந்த‌ நிக‌ழ்ச்சியில் "ச‌மாரிய‌ர்க‌ள்" என்றுச் சொல்ல‌க்கூடிய‌ ம‌க்க‌ளுக்கு ஒரு ஆன்மீக‌ வெளிச்ச‌த்தை இயேசு கொண்டு வ‌ந்தார்.

த‌ங்கள் சகோதரர் இனமான யூதர்களைப்போல, இந்த சமாரியர்களும் படைப்பாளியாகிய தேவனை நம்புகிறார்கள், அவர் தான் மோசேக்கும் சட்டத்தை கொடுத்தார் என்றும் நம்புகிறார்கள்.

துரதிஷ்டவசமாக இவர்கள் சில வகைகளில் உண்மையான பாதையை விட்டு விட்டார்கள். இவர்களுக்கு தேவன் யார் என்றுத் தெரியவில்லை,

ஏனென்றால், "இரட்சிப்பு யூதர்கள் வழியாக வருகிறது" என்று இயேசு இவர்களிடம் கூறினார்"(யோவான் 4:22).


தற்காலத்தில் அனேகர் இந்த கருத்தை விமர்சிக்கிறார்கள், அதாவது "இது குறுகிய எண்ணமுடையது" என்றுச் சொல்கிறார்கள்.

ஆனால், இந்த யூத இனத்தில் தான் தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பினார், வேதத்தை அருளினார் மற்றும் கடைசியாக உலகத்தின் அனைத்து மக்களுக்கும் இரட்சிப்பை தரும் மேசியாவாக வருவார் என்பதை இவர்கள் மறந்துப்போகிறார்கள்.

கடைசியாக, சமாரியர்கள் இயேசுவின் அன்பான கடிந்துக்கொள்ளுதலை ஏற்றுக்கொண்டு, "உண்மையாக அவரே உலகத்தின் இரட்சகர்" என்பதை அங்கீகரித்தனர்(யோவான் 4:42).


இயேசுவின் இந்த பெயரின் பொருளை(இரட்சகர்-Saviour) இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், ஆனால், இயேசு (ஈஸா) என்ற பெயரை அல்லா தெரிந்தெடுத்து அதனை ஒரு தூதன் மூலமாக வெளிப்படுத்தினார் என்று குர்‍ஆன் சொல்கிறது.

இயேசு என்ற பெயரின் பொருள் "தேவனே இரட்சகர்-God is salvation" என்று முஹம்மத் ஐ எ உஸ்மான் என்ற இஸ்லாமிய அறிஞர் "இஸ்லாமிய பெயர்கள்" என்ற புத்தகத்தில்(பக்கம் 77) அங்கீகரித்துள்ளார்.


இயேசுவே இறைவனின் ஒளி மற்றும் இரட்சகர் என்று நம்புகிறீர்களா?

கருத்துகள் இல்லை: