வெள்ளி, 2 ஜனவரி, 2009

உள்ள(த்)தைக் கொடு

யோவான் 6:5. இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்.

9. இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான்.

10. இயேசு: ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம் பேராயிருந்தார்கள்.

11. இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டிய மட்டும் கொடுத்தார்.

12. அவர்கள் திருப்திடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார்

நிமிர்ந்து நில்:

நீ அநேக‌ருக்கு ஆசிர்வாத‌மாக‌ மாற‌போகிற‌வ‌ன். ஆம் நிமிர்ந்து நில்
இங்கு ப‌சியாயிருந்த‌ ஆயிர‌க்க‌னாகான‌ ஜ‌ன‌ங்க‌ள் சாப்பிட்டு திருப்திய‌டைய‌ யார் கார‌ண‌ம் தெரியுமா?

ஒரு சிறுவ‌ன். அநேக‌ருக்கு முன்பாக‌ அவ‌ன் இயேசுவால் த‌லை நிமிர்ந்து நிறுத்த‌‌ப்ப‌ட்டான். அவ‌ன் கொண்டு வ‌ந்த‌ 5 அப்ப‌ங்களையும், 2 மீன்க‌ளையும் வைத்துதான் ஆண்ட‌வ‌ர் அத்த‌னை ஜ‌ன‌ங்க‌ளையும் போஷித்தார்.

ந‌ம்முடைய‌ சிறிய‌ முய‌ற்சிக‌ளையும் திற‌மைக‌ளையும், ஆர்வ‌த்தையும் இயேசுவிட‌ம் கொண்டுவ‌ந்து த‌ரும்போது அவ‌ர் அதை ஏற்றுகொண்டு அநேக‌ருக்கு ஆசீர்வாதாமாக‌ மாற்றுவார்.

இப்ப‌டி அநேக‌ருக்கு ஆசிர்வாத‌மாக‌ மாற‌கார‌ண‌மாயிருந்த‌ அந்த‌ சிறுவ‌னிட‌ம் சில‌ ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌ங்க‌ள் இருந்த‌து. அது என்ன‌ தெரியுமா??

1. முத‌லாவ‌து இயேசுவை தேடிவ‌ந்தான்.இயேச‌ப்பா ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ரு, ந‌ம்மை நேசிக்கிற‌வ‌ரு அப்ப‌டின்னு தெரிஞ்சு அந்த‌ இயேச‌ப்பாவை பார்க்கவும் அவ‌ர் சொல்ல‌ற‌தை கேட்க‌வும் வ‌ந்திருந்தான்.நாம் எப்ப‌டி??????

2. அவ‌னிட‌ம் இருந்த‌ அந்த‌ அப்ப‌த்தையும் மீனையும் இயேசுப்பா பேசி முடிக்க‌ற‌வரைக்கும் சாப்பிடாம‌ல் அப்ப‌டியே வைத்திருந்தான். இது அவ‌னின் பொறுமையை குறிக்கிற‌து. எல்லாத்துக்கும் அவசரபடக்கூடாது. இவனிடமிருந்து நாம் பொறுமையைக் கற்றுகொள்ளவேண்டும்

3.இயேச‌ப்பாவின் பிர‌ச‌ங்க‌த்தை கேட்ட‌பின் அவ‌னுக்கும் ஒரு தியாக உள்ள‌ம் வ‌ந்த‌து. நாமாக‌ இருந்தால் என்ன‌செய்வோம். ந‌ம்முக்கிட்டைஇருக்கிற‌தே கொஞ்ச‌ம் அதை கொடுத்துட்ட‌ ந‌ம‌க்கு என்ன‌ செய்வோமுனு நினைக்காமா அதை ம‌த்த‌வ‌ங்க‌ளும் சாப்பிட‌ட்டும்னு இயேசப்பாவிட‌ம் கொண்டுவ‌ந்து கொடுத்தான். இது அவ‌னுடைய‌ தியாக‌த்தை காட்டுது.நீயும் நானும் எப்ப‌டி?????

4. தைரிய‌மாக‌ இயேசப்பாவிட‌ம் கொண்டுவ‌ந்தான். அவ‌னுக்குள் இருந்த‌ தாழ்வு ம‌ன‌பான்மையை இயேசப்பாவின் பிர‌ச‌ங்க‌த்தை கேட்ட‌வும் மாற்றிகொண்டான். நாமும்கூட‌ என்ன‌நினைப்போம் என்னால‌ அதெல்லாம் முடியாது. என‌க்கு திற‌மையே இல்லையே.. என‌க்கு ச‌ரியா பேச‌முடியாதே, ச‌ரியா எழுத‌ தெரியாதே என்று தாழ்வு ம‌ன‌ப்பாண்மையுட‌ம் இருப்போம்

இனி இயேசப்பாவிட‌ம் உன் குறைக‌ளை சொல்லிவிடு அவ‌ர் அதை மாற்றி உன்னை த‌லைநிமிர்ந்து நிற்க‌செய்வார். உன்னை பார்த்து அநேக‌ர் ஆச்ச‌ரிய‌ப‌ட‌போகிறார்க‌ள்.

5. இயேசப்பா அற்புத‌ம் செய்ற‌வ‌ர்னு ம‌ன‌ப்பூர்வ‌ உள்ள‌த்தில் ந‌ம்பிருந்தான். அத‌னால‌தான் த‌ன்னிட‌மிருந்த‌ அப்ப‌த்தையும் இயேசப்பாவிட‌ம் கொண்டுவ‌ந்து கொடுத்தார்.நாமும் விசுவாச‌மாக‌ / ந‌ம்பிக்கையாக‌ இயேசப்பாவிட‌ம் ஜெப‌ம் செய்ய‌வேண்டும். ந‌ம் பெற்றோருக்காக‌, க‌ஷ்ட‌ப்ப‌டும் ந‌ம் ந‌ண்ப‌ர்க‌ளுக்காக‌, ந‌ம்ம‌ சொந்த‌கார‌ங்க‌ளுக்காக, ந‌ம்ம‌கூட‌ ப‌டிக்கிற‌வ‌ங்களுக்காக‌ நாம் ஜெபிக்க‌வேண்டும்.ஜெபிப்பிங்க‌ளா..

இந்த சிறுவன் எல்லோருடைய பசியையும் போக்க ஒரு காரணமாயிருந்தான். இயேசப்பா இந்த‌ சிறுவ‌னிட‌மிருந்த‌ அப்ப‌த்தையும் மீனையும் வாங்கி அநேகருக்கு ஆசிர்வாதமாக்கினார்.

சிறுவன் தன்னிடம் உள்ளதைக்கொடுத்தான் உள்ளத்தையும் கொடுத்தான் அநேகருக்கு ஆசிர்வாதமானவனாக இயேசுவால் மாற்றப்பட்டான். நம்மையும் அவர் மாற்ற ஆயத்தமே.. நாம் ஆயத்தமா..

நீயே பூமிக்கு உப்பும்.... வெளிச்சமும்....

இன்றைக்கு நாம் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை தியானிக்கப்போகிறோம். இதை வாசித்து உங்களுடைய கருத்துக்களையும் எழுதுங்கள். இப்படிப்பட்ட உங்களின் தியானத்தையும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்

முதலாவது மத்தேயு 5 : 14 நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.

அடுத்து மத்தேயு 5 : 13 நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்

முதலாவது மத்தேயு 5 : 14 நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.

இயேசு கிறிஸ்து இந்த‌ உல‌க‌த்திற்கு வ‌ந்த‌போது நானே உல‌க‌த்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார். ந‌ம் முனிவ‌ர்க‌ளில் சில‌ர் கூட‌ த‌ங்க‌ளுடைய‌ செய்யுள்க‌ளின் இறைவ‌ன் இருளான இவ்வூலகத்திற்கு ஓளியாக‌ அவ‌த‌ரிப்பார் என்று முன்னுரைத்துள்ள‌ன‌ர்.

இவ்வூல‌க‌ம் பாவ, சாப இருளினால் முழ்கியிருக்கிறது. எங்கும் ஆத்துமாவை அசுத்தப்படுத்தும் காரியங்கள். இவைகளின் மத்தியில் ஒரு மனிதன் தண்ணிர் தடாகத்தில் மூழ்கியிருந்தாலும் தாமரை இலையில் அத்தண்ணீர் ஒட்டாதது போல‌ ‌பாவ‌ உல‌கில் வாழ்ந்தாலும் பாவ‌ அசுத்த‌ங்க‌ளுக்கு வில‌கியிருக்க‌முடியுமா என்ற கேள்விக்குதான் இயேசு கிறிஸ்து ப‌திலாக‌ இவ்வூல‌கில்ஒளியாக‌ வாழ்ந்துகாட்டினார்.

அவ‌ரின் அடுசுவ‌டுக‌ளை பின்ப‌ற்றுகிற அவரிடத்திலிருந்து ஒளியை பெருகிற‌ ந‌ம்மைப்பார்த்துதான் அவ‌ர் சொல்லுகிறார். நீங்க‌ள் உல‌க‌த்துக்கு வெளிச்சாமியிருக்கிறீர்க‌ள் என்று.

ஆம் உல‌க அசுத்த‌ங்க‌ளுக்கு ஒரு ம‌னித‌ன் வில‌கியிருக்க‌ முடியும் என்ப‌திற்கு சாட்சியாக‌ உங்க‌ளையும் என்னையும் இந்த‌ உல‌க‌ம் விர‌ல் நீட்டி காட்ட‌வேண்டும். அப்ப‌டிப‌ட்ட‌தொரு வாழ்க்கைவாழ‌ இறைவ‌ன் உங்க‌ளுக்கும் என‌க்கும் உத‌விசெய்வாராக‌

அடுத்து மத்தேயு 5 : 13 நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்

உப்பின் த‌ன்மை க‌றைந்து விடும் த‌ன்மை. ருசி கொடுக்கும் த‌ன்மை (இனிப்பு ப‌ல‌கார‌ம் செய்யும்போது குட‌ அதில் உப்பு சேர்ப்பார்க‌ளாம்) அப்ப‌டியாக‌ ஆண்ட‌வ‌ர் ந‌ம்மை உப்பாக மாற‌விரும்புகிறார்.

அதுவும் சார‌முள்ள‌ உப்பாக‌ மாற‌விரும்புகிறார். இது எதை குறிக்கிற‌து என்றால் நாம் ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌ம் ஜ‌க்கிய‌மாக‌ வாழ்வ‌தை குறிக்கிற‌து. எல்லோரிட‌மும் ச‌மாத‌ன‌மாக‌ வாழும் ஒரு வாழ்க்கையைக் குறிக்கிற‌து .

அழுகிற‌வ‌ர்க‌ளுட‌ன் கூட‌ சேர்ந்து அழுங்க‌ள் என்று வேத‌ வ‌ச‌ன‌ம் சொல்லுகிற‌து. அதாவ‌து ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் குடும்ப‌ங்க்க‌ளில் ஏற்ப‌டும் துக்க‌ நிக‌ழ்ச்சிக‌ளில் த‌வ‌றாவ‌ல் ப‌ங்கேற்று அவ‌ர்க‌ளுக்கு முடிந்த‌ள‌வுக்கு நாம் ஆறுத‌லாக‌ இருக்க‌வேண்டும்.

ம‌ற்றவ‌ர்க‌ள் ந‌ம்மிட‌ம் அவ‌ர்க‌ளுடைய‌ சோக‌ங்க‌ளை ப‌கிர்ந்துகொள்ளும்போது நாமும் அவ‌ரின் சோக‌த்தில் ப‌ங்கேற்று அவ‌ருக்கு ஆறுத‌லான‌ வார்த்தைக‌ளால் அவ‌ரை தேற்ற‌வேண்டும். அவ‌ருக்கும் ஆண்ட‌வ‌ரின் அன்பை ப‌கிர்ந்துகொள்ள‌வேண்டும்.

அவர்க‌ளின் பிர‌ச்ச‌னைக‌ளுக்காக‌ நாமும் ம‌ன‌முருகி ஜெபிக்க‌வேண்டும். இப்ப‌டி நாம் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் வாழ்க்கையில் ஒரு தாக்க‌த்தை ஏற்ப‌டுத்துகிற‌வ‌ர்க‌ளாக‌ இருக்கும்போது நாம் பூமிக்கு உப்பாக‌ மாறுகிறோம்.


ச‌ரி அடுத்து இந்த‌ இர‌ண்டு வ‌ச‌ன‌ங்க‌ளையும் ந‌ம்முடைய‌ வாழ்க்கையில் கடைபிடிக்கும்போது சில விசயங்களை மனதில் பதிய வைப்பது நல்லது. அதாவது ஓளியாக இருக்க‌வேண்டிய‌ இட‌த்தில் உப்பாக‌ இருக்க‌க்கூடாது.

உதார‌ண‌த்திற்கு உங்க‌ளிட‌ம் ந‌ட்பாக‌ ப‌ழ‌கும் ஒருவ‌ர் புகைபிடிக்க‌வோ, ம‌துஅருந்த‌வோ அல்ல‌து வேறு பாவ‌செய‌லுக்கோ உங்க‌ளை க‌ம்பெனி கொடுக்க‌ சொல்கிறார் என்றால் அவ‌ர் ம‌னது ச‌ங்க‌ட‌ப‌டக்கூடாது அல்ல‌து ந‌ம்மிட‌ம் வெருப்பு வ‌ந்துவிடும் என‌நினைத்து அவ‌ரின் செய‌லுக்கு உட‌ந்தையாகி நீங்களும் அதை செய்து அங்கு உப்பாக‌ மாறிவிட‌க்கூடாது .

அங்கு ஓளியாக‌ இருக்க‌வேண்டும். அவரின் பாவஇருள் ம‌றையும் ஒளியாக‌ இயேசுபிள்ளை என்ப‌தை வெளிப்ப‌டுத்தும் ஒளியாக‌ அங்கு பிரகாசிக்க‌வேண்டும்

எப்ப‌டி க‌‌ரைதேடும் க‌ப்ப‌லுக்கு கரை காட்ட‌ ஒரு க‌ல‌ங்கரை விள‌க்கு உள்ளதோ அதுபோல‌ இந்த‌ இயேச‌ப்பாவை காட்டும் ஒரு க‌ல‌ங்க‌ரை விள‌க்காக‌ நாம் ஒளிகொடுப்போம். உப்பாக‌
மாறுவோம்

இவைக‌ளை நாம் முன்பே உட்கார்ந்து தீர்மானிப்போமான‌ல் பின்னாலில் க‌ஷ்...

உலகில் வாழும் நமக்கு அறிவு வளர நாம் கல்வி சாலைக்கு சென்று கல்வி கற்கிறோம். புத்தி வர வாழ்க்கையில் அடிப்பட்டு வரும் அனுபவத்தினால் கற்றுக்கொள்கிறோம் இல்லையானால் ஏற்கனவே அனுபவப்பட்டவர்களின் அறிவுரையை கேட்கும்போது அது நமக்கு பயனளிக்கிறது.

உலகில் இப்படி சொல் உண்டு. அறிவே சக்தி i.e knowledge is power.
ஆனால் நமக்கு சாலமோனைப்போல் ஞானம் வரவேண்டுமானால் நமக்கு தேவனுடைய ஆலோசனையை கேட்பது அவசியம். சிறு வயதில் இராஜ்ஜியத்தை ஆளும் ஆட்சி அதிகாரம் சாலமோனுக்கு வந்தபோது அவன் தேவனிடம் கேட்டது ஞானத்தையே.


வேத‌த்தில் இன்று ஒரு வச‌னத்தை தியானிப்போம்.
லூக்கா 14:30 இந்த மனுஷன் கட்டத்தொடங்கி முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ?

நாம் அன்றாட‌ம் போகும் வ‌ழியில் பார்த்தோமானால் ஒரு சில‌ இட‌ங்க‌ளில் க‌ட்டிட‌ங்க‌ள் க‌ட்ட‌தொட‌ங்கி பாதியில் நின்றுபோன‌தை பார்க்க‌லாம். ஏன்...... அதிக கடன் வாங்கி கட்டதொடங்கியீருப்பார்கள். எதிர்ப்பார்த்த பணம் வராத போது அந்த கட்டிடத்தை கட்டமுடியாமல் பாதியிலேயே நிறுத்தியிருப்பார்கள்.


இப்போதெல்லாம் எல்லாவற்றையும் தவணை முறையில் வீடு தேடி வந்து தந்துபோகிறார்கள். சின்ன வீட்டு உபயோக பொருட்கள் முதல் கார் போன்ற வாகனம் வரை க‌ட‌னுக்கு த‌ருகிறார்க‌ள். இவ‌ர்க‌ளின் ஆசை வார்த்தைக்கு ம‌ய‌ங்கி உட‌னே எல்லாவ‌ற்றையும் வாங்கி போடுகிறோம்.

சில‌ர் வீம்புக்கும் ஆட‌ம்ப‌ர‌த்துக்கும் வாங்கி போடுகிறார்க‌ள். ஆனால் அதை வாங்கும் முன்பு த‌ன‌க்குள்ள‌ வ‌ருமான‌ம் அதற்கு என்ன‌னென்ன‌ செல‌வுக‌ள் உண்டு, செல‌வுக‌ள் போக‌ மீதி சேமிப்பு எவ்வ‌ள‌வு வ‌ரும், எதிர்பாரா செல‌வு வ‌ந்தால் என்ன‌ செய்ய‌வேண்டும் அத‌ற்கு எவ்வ‌ள‌வு ஒதுக்க‌வேண்டும் போன்ற‌ விச‌ய‌ங்க‌ளை யோசிப்ப‌தேல்லை. க‌ண்ணைமூடி வாங்கிவிடுகிறோம்.

ஒரு சில‌ மாத‌ங்க‌ள் ச‌ந்தோச‌மாக‌ செல்லும். ஆனால் எதோ ஒரு இட‌ம் வ‌ரும் அப்போது ந‌ம்முடைய‌ வ‌ருமான‌ம் அந்த‌ மாத‌ த‌வ‌ணையை அடைக்க‌ப் போதுமானாதாக‌ இருக்காது. என்ன‌செய்வோம் மீண்டும் க‌ட‌ன் வாங்குவோம். இதுவே அனேக‌ருக்கு க‌ட‌னில் முழ்குவ‌த‌ற்கு ஒரு கார‌ண‌மாக‌வும் உள்ள‌து.


அதேப்போல் திரும‌ண‌ வைப‌வ‌ங்களில் ஆட‌ம்ப‌ர‌ம்.... க‌ட‌ன்வாங்கியாவ‌து என் ம‌க‌ளின் திரும‌ண‌த்தை சொந்த‌கார‌ங்க‌ ஆச்ச‌ரிய‌ப்ப‌டும‌ள‌வுக்கு ந‌ட‌த்துவோம் என்று த‌ன்னுடைய‌ எதிர்கால‌த்துக்கு என்று ஒன்றும் எடுத்து வைக்காம‌ல் அப்ப‌டியே எடுத்து செல‌வு செய்வ‌து. மேலும் ப‌ற்றாக்குறைக்கு க‌ட‌ன் வாங்கி செல‌வு செய்வ‌து.

முடிவு க‌ட‌னையும் க‌ட்ட‌முடியாம‌ல் த‌ன்னுடைய‌ வீட்டையும் விற்கும் நிலைக்கு த‌ள்ள‌ப‌டுவ‌து. இதுப்போன்ற‌ கார‌ண‌ங்க‌ளினால் அநேக‌ர் த‌ற்கொலையும் செய்துள்ள‌ன‌ர்.


இங்கு இயேசு நாத‌ர் சொன்ன‌ வ‌ச‌னத்தை க‌வ‌னியுங்க‌ள்.
............அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ?


ஆம் எந்த‌ ஒரு செய‌லையும் செய்யும் முன் அதைக்குறித்து ஆலோச‌னை செய்ய‌வேண்டும். நாம் செய்யும் செய‌லுக்கு நான்கு புற‌மும் உள்ள‌ கார‌ணிக‌ளை ஆராய்ந்து அல‌சிப்பார்க்க‌வேண்டும்.

ந‌ம்முடைய‌ த‌குதிக்கு மீறிய‌செய‌லா. அத‌னால் பின்னாளில் ந‌ம‌க்கோ வேறுயாருக்கேனும் பாதிப்புவ‌ருமா... ந‌ம்முடைய‌ வ‌ருமான‌ம் இத‌ற்கு போதுமான‌தாக‌ இருக்குமா... க‌ட‌ன் வாங்க‌வேண்டிய‌ சூழ்நிலை வ‌ருமா... அதை த‌விர்க்க‌ இப்போதிருந்தே நான் எடுக்க‌வேண்டிய‌ தீர்மான‌ங்க‌ள் என்னென்ன‌...


இவைக‌ளை நாம் முன்பே உட்கார்ந்து தீர்மானிப்போமான‌ல் பின்னாலில் க‌ஷ்ட‌ப்ப‌ட‌வும் வேண்டாம். பிற‌ர்முன் அவ‌மான‌மும் ப‌ட‌வேண்டாம்
இதைக்குறித்து உங்க‌ள் எண்ண‌ங்க‌ள் என்ன‌ ச‌கோத‌ர‌ரே.....

சிலுவையில் பேசின 7 வது வார்த்தை : உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கின்றேன்

இயேசு சிலுவையில் மொழிந்த ஏழாவது வார்த்தை இயேசு பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கின்றேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார், இப்படி சொல்லி ஜீவனை விட்டார். (லூக்கா 23:46)

ஆறு வார்த்தைகளையும் மகாவேதனையின் மத்தியில் கூறிய இயேசு, ஏழாவது வார்த்தையாக தன்னை அனுப்பின பிதாவின் சித்தத்தை செய்து முடித்தவராய் பூரண திருப்தியுடன் பிதாவினிடத்தில் தனது ஆவியை ஒப்புவிக்கின்ற வார்த்தையை கூறுகின்றார்.

ஏழு என்னும் இலக்கம் பரிபூரணத்தை குறிக்கிறது, ஆகவே அவர் கூறிய ஏழாவது வார்த்தை மிகவும் பரிபூரணமான வார்த்தையாக காணப்படுகிறது.


இங்கு ஒரு விடயத்தை அவதானிப்போமானால் மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார், இப்படி சொல்லி ஜீவனை விட்டார் என வேதம் கூறுகிறது. ஏன் இயேசு மகா சத்தமாய் கூப்பிட்டு ஜீவனை விட்டார்?

பிதா எப்பொழுதும் அவருரோடே கூட இருந்தவர் மெதுவாய் அல்லது மனதிற்குள் சொன்னால் பிதாவிற்கு தெரியாதா? அல்லது விளங்காதா? ஏனெனில் தான் ஜீவனை விடுகின்ற அந்த தொணி ஏரோதிற்கு கேட்க வேண்டும், தன்னை ஏற்காதா இஸ்ரவேலருக்கு கேட்க வேண்டும், ஏன் இன்னும் இரண்டாயிரத்தி ஏழு வருடங்கள் கழிந்தும் தன்னை ஏற்காத, தன்னை மறுதலிக்கின்ற ஜனங்களுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே.

யோவான் 10:17,18 ஆம் வசனம் இப்படி கூறுகின்றது நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்து கொள்ளும்படிக்கு அதை கொடுக்கிற படியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார் ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ள மாட்டான்; நானே அதை கொடுக்கிறேன் அதை கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் அதிகாரம் உண்டு.

ஆகவே இந்த உலகத்தில் உள்ள எந்த மனிதனும் தன் ஆவி பிரிவதை அறியான். ஒரு வேளை நான் மரிக்கப் போகின்றேன் என்பதனை ஒருவன் உணரலாம் ஆனால் அது எப்பொழுது என்பது எந்தக் கணப்பொழுதில் என்பது அவனுக்கு தெரியாது

ஏனெனில் தேவன் தான் ஜீவனைத்தருகின்றார் அவரே அதை மீண்டும் எடுத்துக்கொள்கின்றர்ர். ஆனால் இயேசு கிறிஸ்து தெய்வம் என்ற படியினால் தன் ஆவியை பிதாவின் கரத்தில் ஒப்புக்கொடுத்தார் என்பதனை இங்கு காண்கிறோம்.

இயேசுவிற்கு எத்தனையோ விதமான தண்டணைகளை, ஆக்கினைகளை அன்று கொடுத்தார்கள். ஆனால் யாராலும் அவரின் உயிரை எடுக்க முடியவில்லை. ஜீவனை கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் அதிகாரம் உண்டு, என அவர் சொன்ன வார்த்தையின் பிரகாரம் பிதாவின் கரத்திலே தனது ஆவியை ஒப்புக்கொடுத்தார்

மறுபடியும் பிதாவின் கரத்திலிருந்து மூன்றாம் நாளில் தனது ஆவியை பெற்றுக்கொண்டார். மத்தேயு 3:16 ஆம் வசனத்திலே இயேசு ஞானஸ்நானம் எடுத்து கரையேறினவுடனே அவருக்கு வானம் திறக்கப்பட்டது என வேதத்தில் காண்கிறோம்.

இங்கு நமது ஆதி பெற்றோர்களாகிய ஆதாம் ஏவாளின் கீழ்படியாமையினால் அடைக்கப்பட்ட வானம் பிந்திய ஆதாமாகிய இயேசுகிறிஸ்துவின் கீழ்படிவினால் அதாவது ஞானஸ்நானம் எடுத்து கரையேறினவுடனே அவருக்கு திறக்கப்பட்டது. மீண்டும் சிலுவையிலே ஜெபத்துடன் தன்னுடைய ஆவியை பிதாவின் கரத்தில் ஒப்புக்கொடுக்கும் போது புத்திரசுவிகாரர்களாய் நாங்கள் யாவரும் பரத்துக்குச் செல்லும் பாதை திறக்கப்பட்டது.

இயேசு தனது ஆவியை ஒப்புக்கொடுத்து தலையை சாய்த்த பின்னர் அநேக அற்புதங்கள் நடந்தது. (மத் 27:51,52)

தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கி கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது. கல்லறைகள் திறந்தது நித்திரையடைந்த அனேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.

இதிலே முக்கியமாய் கூறப்போனால் நூற்றுக்கு அதிபதியும் அவனோடே கூட இயேசுவை காவல் காத்திருந்தவர்களும் நடந்த சம்பவங்களை கண்டு இவர் மெய்யாய் தேவனுடைய குமாரன் என அறிக்கை செய்தார்கள். கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதிலிருந்து அவர் உயிர்த்தெழுந்தவரை அனேகருடைய மனக்கண்கள் திறக்கப்பட்டதை காண்கிறோம்.

ஆகவே நாங்களும் அவருடைய வழிகாட்டலின் படி வாழ்ந்து நல்லதொரு சாட்சியினை இந்த உலகத்திற்கு விட்டுசெல்பவர்களாய் வாழ தேவன் கிருபை செய்வாராக. 1.நம்மை உண்டாக்கினவர் அவரே, அவரிடம் நாம் திரும்ப வேண்டும் என்கிற விருப்பம் எங்களுக்குள் வரவேண்டும்.

2.நம் ஒவ்வொருவருடைய ஜீவன் மேலும் தேவன் ஒருவருக்கு மாத்திரமே அதிகாரம் உண்டு என்பதனை நாங்கள் உணரவேண்டும். 3.கிறிஸ்துவைப் போல நம்முடைய மரணத்திலும் எங்கு, யாரிடம் செல்லப்போகின்றோம் என்ற நிச்சயத்தோடு மரிக்கவேண்டும்.

சிலுவையில் பேசின 4 வது வார்த்தை : என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்

இயேசு சிலுவையில் மொழிந்த நான்காவது வார்த்தை ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என சிலுவையிலே இயேசு பிதாவை நோக்கி கதறுகின்ற வார்த்தை இது.

இதனுடைய அர்த்தம் என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்? ஆகும். இவர் தேவனுடைய குமாரனாயின் ஏன் இவ்வாறு கதறவேண்டும் என எல்லா மனிதர்களுக்குள்ளும் இது ஒரு கேள்விக்குரியான வார்த்தையாக காணப்படுகின்றது.

நாங்கள் வேதத்தை ஆராய்ந்து பார்த்தால் ஏசாயா 59:2 இப்படி கூறுகின்றது உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்குகிறது, உங்கள் பாவங்களே அவர் உங்களுக்கு செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.

ஆகவே தேவனுடைய முகத்தை மனுஷன் பார்க்க முடியாது மறைப்பது பாவம் எமக்கும் தேவனுக்கும் இடையே பாவம் ஒரு இரும்பு திரையாக உள்ளது. தேவன் எம்மை பார்க்க முடியாத சந்தர்ப்பம் பாவத்தின் மூலம் வருகின்றது.

யோவான் 8:29இல் பார்ப்போமானால் என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார் பிதாவுக்கு பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னை தனியேயிருக்கவிடவில்லை என்றார்.

அதே போன்று மறுரூபமலையிலே எலியாவோடும் மோசேயோடும் பேசிக்கொண்டிருக்கையில் இவர் என் நேசக்குமாரன் இவருக்கு செவிகொடுங்கள் எனக் கூறினார்.

இங்கே பார்க்கும் போது பிதா எப்பொழுதும் அவரோடு உறவாடியதற்கு காரணம் அவரிடம் பாவமில்லை என்பதினால் தான்.

அன்று கல்வாரியிலே பிதா அவரை ஒரு நிமிடம் கைவிட வேண்டும் என்றால் அதற்கு அவருக்கும் பிதாவிற்கும் இடையில் ஒன்று வரவேண்டும் அது பாவம் ஆனால் அவர் பாவம் செய்யவில்லையே! எப்படியெனில் உலகமும் அதில் உள்ளவர்களும் செய்த பாவமே அதற்கு காரணம். 2கொரி 5:21 இப்படி சொல்லுகின்றது

நாம் அவருக்குள் நீதியாகும் படிக்கு அவரை நமக்காகப் பாவமாக்கினார். எனவே இயேசு முதன் முறையாக பிதாவின் தொடர்பு இல்லாமல் இருந்தவர்.
எங்களுடைய பாவங்கள் அனைத்தையும் அவர் தாமே ஏற்றுக்கொண்ட போது இயேசு குற்றவாளியாகவும் பிதா நீதிபதியாகவும் நின்று ஒருகணம் தன்னுடைய முகத்தை அவருக்கு மறைத்தார் அது நியாயத்தீர்ப்பின் நேரமாய் காணப்பட்டது.

அவ்வேளையிலே இயேசு தேவனை நோக்கி கதறிய வார்த்தை இது. ஆகவே இனி மனிதனுடைய பாவத்திற்காக ஆடு, மாடுகளின் இரத்தம் சிந்தப்பட வேண்டியதில்லை இயேசுவே எமது பாவத்தை தன் மேல் சுமந்து தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்தி மீட்பை பெற்றுத்தந்துள்ளார்.

சிலுவையில் பேசின 5 வது வார்த்தை: "தாகமாயிருக்கிறேன் என்றார்" (யோவான் 19:28 )

5) எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக : "தாகமாயிருக்கிறேன் என்றார்" (யோவான் 19:28 ) கர்த்தருக்குள் பிரியமான திருச்சபைக்கும்,நண்பர்களுக்கும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் மொழிந்த வார்த்தைகளில் ஒன்றுதான் இந்த தாகமாயிருக்கிறேன் என்ற வார்த்தை.

ஆனால் இதை யோவான் எழுதும் முன்பாக இயேசு ஏதோ ஒன்றை அறிந்து அதன் பின் இந்த வார்த்தையை சொன்னதாக எழுதுகிறார்.சரி இயேசு என்னதை அறிந்து கொண்டார் என்று பார்க்கும் பொழுது அவர் எல்லாம் முடிந்தது என்று அறிந்து என்று இந்த வசனம் சொகிறது.

ஆனால் இயேசுகிறிஸ்து சொன்ன ஏழு வார்த்தைகளில் முடிந்தது என்பதும் ஒரு வார்த்தை உள்ளது.ஆனால் இயேசு இந்த இடத்தில் எல்லாம் முடிந்தது என்று அறிந்து தாகமாயிருக்கிறேன் என்று சொல்லுகிறார். சரி எல்லா வல்ல கடவுளாகிய இறைவன் பூமிக்கு வந்து மனிதனாக பிறந்து எதை செய்ய வந்தாரோ அந்த பணியை முடித்துவிட்டார்

ஆனால் அவர் இன்னும் செய்ய வேண்டிய அல்லது சொல்லவேண்டிய காரியங்கள் உண்டு. பழைய ஏற்பாட்டில் நாம் இயேசுவுக்கு பல வழிகளில் முன்னோடியாக இருந்த சிம்சோனை பார்க்கிறோம்.

சிம்சோன் என்றால் சூரியனை போன்றவர் என்று அர்த்தம்.இயேசுகிறிஸ்துவோ நீதியின் சூரியன் என்று அழைக்கப்படுகிறார்.சிம்சோன் நசரேய விரதம் இருந்ததான்.. இயேசுவும் நாசரேத்தூரில் இருந்து வந்தவர் என்பதை குறிக்கும் படி நசரேயன் என்றே அழைக்கப்பட்டார்.

கடைசியாக சிம்சோன் உயிரோடு இருக்கும் போது ஜனங்களுக்கு கொண்டு வந்த இரட்சிப்பை விட அவன் மரித்தபின் பெலிஸ்தியரை கொன்று இஸ்ரவேலுக்கு அதிகமான நன்மைகள் கொண்டு வந்தான்.

இயேசுவும் தான் உயிரோடு இருந்த நாட்களில் செய்த ஊழியத்தை விட தன் மரணத்தின் மூலம் இரட்சித்துக் கொண்டிருக்கிற ஜனங்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காதவை.

சிம்சோனை பற்றி படிக்கும் போது அவன் இஸ்ரவேல் ஜனங்களை இரட்சிக்க தொடங்கினான் என்று வேதம் சொல்லுகிறது. நியாயாதிபதிகள் 13:5 நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.

ஆனால் இரட்சிக்க தொடங்கிய சிம்சோன் அதை முடிக்கவில்லை.இன்றைக்கு அநேகம் பேர் தங்கள் வாழ்க்கையின் ஆரம்பத்தில் மிகப்பெரிய காரியங்களை சாதிப்பார்கள்.ஆனால் அவர்களின் முடிவோ மிகவும் கேவலமானதாக,பரிதவிக்கத்தக்கதாக இருக்கும்.

சாலமோனை பற்றி நெகேமியா இப்படியாக சொல்லுகிறார். நெகேமியா 13:27 இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா?

அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக வைத்தார்; அப்பபடிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே.

இது போல் அநேக நபர்கள் தங்கள் வாழ்க்கையை சரியாக முடிக்க முடியாமல் திணறி இருக்கிறார்கள். ஆனால் எம்பெருமான் இயேசுகிறிஸ்து மட்டும் தான் என்ன நோக்கத்துக்காக உலகத்தில் அவதரித்தாரோ அதில் ஒரு அச்சும் கூட பிசகாமல் அதை சாதித்து முடித்தார்.

எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன் என்று சொன்னார். அப்படியானால் அந்த வேத வாக்கியம் என்ன?

சங்கீதம் 69:21 என் ஆகாரத்தில கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள். இயேசுகிறிஸ்து வேத வாக்கியங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பதை இதில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இயேசு உண்ணும் போஜனமும்,அவருடைய தாகத்துக்கு தகுந்த தண்ணீரும் எதுவாக இருக்கும் என்ற கேள்வியை நாம் எழுப்புவோமானால்,வேத வசனம் இப்படியாக சொல்லுகிறது யோவான் 4:34 இயேசு அவர்களை நோக்கி, நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடையகிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.

தன்னை அனுப்பின பிதாவின் சித்தப்படி செய்வதே இயேசுவுக்கு போஜனாமாக உள்ளது,இயேசுவின் தாகம் பிதாவின் சித்தம் செய்யப்படுவதே.

அப்படியானால் இந்த உலகத்தில் இயேசுகிறிஸ்துவை அச்சடையாளமாக கொண்ட திருச்சபையே இன்றைக்கு நாம் இயேசுவின் தாகத்தை போக்க என்ன செய்துவருகிறோம்.பிதாவின் சித்தத்தை நாம் உணர்ன்து இருக்கிறோமா?

கீழே உள்ள வசனங்கள் பிதாவின் சித்தம் என்ன என்று நமக்கு அழகாக காண்பிக்கின்றது. மத்தேயு 18:14 இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல. யோவான் 6:39

அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளைஎழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. இதுவே பிதாவின் சித்தம்.இதை நிறைவேற்றுகிறவனே இயேசுவின் தாகத்தை தீர்க்கமுடியும்.

உலகில் உள்ள ஒவ்வொரு ஆத்துமாவும் கிறிஸ்துவின் அன்பை அறிய வேண்டும் என்பதே பிதாவின் சித்தம்.அப்படியானால் அந்த ஆத்துமாக்களை நேசிக்கிறவன் இயேசுவுக்கு சாப்படு கொடுக்கிறவனாக,தண்ணீர் கொடுக்கிறவனாக காணப்படுவான் என்று இயேசு சொல்லுகிறார்.

மத்தேயு 25:35 பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;

முடிவுரை

எனக்கன்பான தேவ ஜனமே இயேசுவின் சிலுவை பாடுகளை தியானிக்கின்ற நாம் அவர் சிலுவையில் சொன்ன தாகமாயிருக்கிறேன் என்ற வார்த்தை எவ்வளவாக அவர் பிதாவின் சித்தம் செய்ய தன்னை அர்பணித்திருந்தார் என்பதை நமக்கு காட்டுகிறது.

இன்றைக்கு நாம் இயேசுவுக்காக துக்கம் கொண்டாடாமல் இயேசு சொன்னது போல் லுூக்கா 23:28 இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி, எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.

இது நமக்காகவும்,நம் ஜனத்துக்காகவும் துக்கப்படும் வேளை.இரட்டை கிழித்து சாம்பலில் உட்காராவிட்டாலும் வேத வசனம் சொல்கிறபடி நம் இருதயங்களை கிழித்து நம் மக்கள் மேல் வரப்போகும் கோபாக்கினைகளுக்கு தேவன் ஜனங்களை காக்கும் படி திறப்பிலே நின்று அவருக்கென்று கதறகூடிய ஆத்துமாவை ஆணடவர் தேடிக்கொண்டிருக்கிறார்.

கண்முன்னால் அழிந்துகொண்டிருக்கும் இத்தனை கோடி ஜனங்களுக்கு நான் என்ன் பதில் ஆண்டவருகு சொல்லப்போகிறோம்.

நாம் சிந்திப்போம் ,ஆண்டவருக்காக எதையாகிளும் சாதிக்கிறவர்களாக அவரிடம் நம்மை ஒப்புக்கொடுப்பதே அவரின் சிலுவையை தியானிப்பதின் உண்மையான அர்த்தம் ஆகும். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக

சிலுவையில் பேசின 3 வது வார்த்தை:அம்மா, இதோ, உன் மகன் என்றார்". சீடனை நோக்கி : "இதோ உன் தாய் என்றார்"

(இயேசு) தம்முடைய தாயை நோக்கி : "அம்மா, இதோ, உன் மகன் என்றார்". சீடனை நோக்கி : "இதோ உன் தாய் என்றார்" (யோவான் 19 : 26,27 )

உடலெல்லாம் ஊடுருவக் குத்திக் கிழித்த காயங்களுடன் தேவகுமாரன்! உள்ளமெல்லாம் ஊடுருவக் குத்திக் கிழித்த காயங்களுடன் மானுடத் தாய்!!(லூக் 2:35)

இறுகிய; மன இருக்கத்தின் நேரமாகவே அது இருந்திருக்கும். ஒரு மகனை தம் தேசத்தினரே, தன் சொந்த இனத்தவரே, மதத்தவரே கொலை செய்யப்படுமளவு குற்றம் சுமத்தி, சிலுவையில் அறையும் பொழுதுஅருகிலிருக்கும் தாய்க்கு ஓர் இறுகிய உடைந்து போன சூழலே இருக்கும்.

தன்னை, தன் இனத்தவரே "இவன் எங்கள் இனத்தைச் சார்ந்தவன் இல்லை" என்பதாக ஊருக்குப் புறம்பே அவமானமாகச் சாகடித்துக் கொண்டிருக்கும் காட்சியை, தன் தாயும் நேரில் காண நேரும் சூழல், ஒரு மகனுக்கு மன இறுக்கத்தையும், கையறு நிலையையும் தான் கொண்டு வந்திருக்கும்.

இருவரும் இதயம் வெடித்து இறக்குமளவுக்கு ஏதுவான சூழலே அது என்றாலும் மிகையில்லை. தேவனுக்குள், பரமதந்தையின் ஐக்கியத்துக்குள் இருப்பவரே, இந்த மனித இயல்பையும், இறுக்கத்தையும், கையறு நிலையையும் மீறி, இறைவன் சித்தப்படி எது நடப்பினும் அதற்கு ஆம் என்றும் ஆமென் என்றும் வாழ முடியும்.இயேசு அப்படித்தான் வாழ்ந்தார்.

இயேசுவின் தாய் மரியாளும் அப்படியேதான் வாழ்ந்தவர். அதனால்தான் கொடூரமான அவமானகரமான சாவின் உச்ச நிலையிலும், வானத்துக்கும் பூமிக்கும் நடுவில் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையிலும் தன் தாயிடம் " அம்மா இதோ உம் மகன்" என்றும், தன் அன்புத் தொண்டனிடம் "இதோ உன் தாய்" என்றும் ஒரு ஆன்ம சமூக அறவியல் வார்த்தைகளை உரைக்க முடிந்தது.

நேரடி உலகியல் வாழ்விலிருந்து, தேவ குமாரன் விடைபெறும் நேரம், தாயை அன்புச் சீடரிடமும், தொண்டரைத் தாயிடமும் ஒப்படைக்கும் பரஸ்பர சுவிகார நிகழ்வு அது. தாயின் மகன்: அன்னை மரியாள் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தது, தெய்வத்திருமகனாம் இயேசுவை.

ஊர் பழிக்கு அஞ்சாது, கர்த்தருக்கு ஆம் என்று சொல்லி பெற்றெடுத்தவர் மரியாள். பரம தந்தை உலகின் மீது கொண்டுள்ள அன்பை எண்பிக்க, இயேசு தாமும் ஒரு தாயால் வளர்க்கப்பட வேண்டிய அளவு வலுவற்றவரும் குழந்தையுமானது, கன்னி மரியாளின் மடியில் தான்.இந்த தாயின் பராமரிப்பில்தான், இவ்வுலகில் குழந்தை இயேசு வளர்ந்து வலிமை பெற்று, ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்தவராய் வளர்ந்தார். (லூக் 3:40 )பரம

ந்தையின் மேல் கொண்டிருந்த நம்பிக்கையும்,மகன் மேல் கொண்டிருந்த அன்பும்தான், குழந்தை இயேசுவை ஏரோதின் கொலை வெறித்தாக்குதலில் இருந்து தப்புவிக்க எகிப்துக்கு தூக்கிக் கொண்டு ஓட வைத்தது.

இந்த அன்புதான் பன்னிரண்டு வயதில் காணமற்போன மகனைத் தேடி பரிதவித்தது; ஊரார் பலர் பழித்துரைத்து இழித்துரைக்கும் மகனைத் தேடி அவர் போதிக்கும் இடங்களுக்கும் தேடி வந்து பார்க்கச் செய்தது. இறுதியில் சிலுவையடியிலும் தாயைக் கொண்டு வந்து நிறுத்தியது. மகனின் தாய்:கன்னி மரியாள் ஆண்டவருடைய தாய் (லூக் 1:43 ).

எளிய கன்னி மரியின் கண்காணிப்பில் தம் மகன் இயேசுவை அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மீது அன்பு கூர்ந்தார். ஆண்டவர் இயேசு தன் கருவில் வந்தபோதே கன்னி மரியாள் நேரடியாக அவரை மற்றவர்களுக்கு அளிக்கச் சென்றார்.

இயேசுவை எலிசபெத்துக்கும், அவர் எதிர் நோக்கியிருந்த மகனுக்கும் கொடுப்பதற்காக தொலை தூரம் இருந்த மலை தேசத்திற்கும் செல்கிறார். அங்கே கிறிஸ்துவை முதன் முதலாக சந்தித்த அந்நேரமே எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை யோவான் அக்களிப்பால் துள்ளினார்.

நம் வாழ்க்கை; கிறிஸ்துவைப் பெற்றுக் கொண்ட நம் வாழ்க்கை... பிறருக்கு மகிழ்வைத் தரக்கூடியதாக கிறிஸ்துவைத் தரக் கூடியதாக இருக்கிறதா? கிருபை நிறைந்தவராய் இருந்தாலும், மரியாள் தாழ்ச்சி நிறைந்தவராய் இருந்தார். அருள் நிறைந்த அவளே அடிமைப்பெண்ணுமாக இருந்தாள்.

கடவுளின் அடிமையாகும் அவரின் வலிமை ஆண்டவருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதில் கிடைத்தது. இந்த மகிழ்ச்சிதான் யூதேயாவின் மலை நாட்டுக்கும் சென்று மூன்று மாதமளவும் தங்கி பணிவிடை செய்ய வலிமை தந்தது.

கிறிஸ்துவுக்குள் மகிழ்வோடிருக்கும் நாமும், மற்றவர்களுக்கு பணிவிடை செய்ய துன்ப மலைகளுக்கும் விரைந்தேக வேண்டும் எனும் பாடத்தையும் தருகிறது. தாய் மரியாளின் வாழ்வு நமக்கு தாழ்ச்சியையும் கற்றுத் தருகிறது. ஆண்டவரின் அன்னையானாலும், கிருபை நிறைந்தவராய் இருந்தாலும் ஆண்டவரின் அடிமைப் பெண்ணாய் இரக்கத்தை வேண்டி நம்மில் ஒருவராய் சிலுவையடியில் மரியாள் நிற்கிறாள்.(யோவான் 19:25 )

இரட்சிப்பின் மகிழ்ச்சியில் இருக்கும் நாம், தாழ்ச்சியோடு இருக்கிறோமா? மன மேட்டிமையோடு இருக்கிறோமா? நம் மன மேட்டிமைகள் இன்றும் இயேசுவை சிலுவையில் அறைகின்றன என்பதை உணர்ந்து மனம் திருந்துவோமா? இறைவன் சித்தப்படியே நிகழட்டும் என்னும் கன்னி மரியின் இசைவு (லூக் 1:38 ),

அவரது காணிக்கை மனமாய் கனிந்தது.விசுவாசத்தால்; கடவுளின் மேல் வைத்த நம்பிக்கையால், மரியாள் தன் மகனை தனக்கெனப் போற்றவில்லை. அவரை உலகிற்கு அளித்தார். ஊரார் தவிப்பில் உடனிருந்து உதவவும் இயேசுவுக்கு தூண்டுகோலாய் இருந்தார். (யோவான் 2:3 ).

இன்றும் எம் ரசம் தீர்ந்து விட்டது என சிலுவையின் அடியில் நாம் நிற்கும் போதெல்லாம், தாழ்சிசியும் சாந்தமும் ந்ன்மையும் கருணையுமான ரசம் வேண்டும் என ஜெபிக்கும் போதெல்லாம். மரியாளின் குரல் "அவர் (இயேசு) உங்களுக்கு சொன்னதையெல்லாம் செய்யுங்கள் என்பதாகவே இருக்கும்.

சிலுவையின் அடியில் மரியாளின் வாழ்வு நமக்கு விடும் அழைப்பு இது.சிலுவையின் நிழலில் நின்று, இன்று நாம் சொல்வோமா? "இயேசுவே! நீர் எங்களுக்கு சொல்வதை யெல்லாம் நாங்கள் ஒன்று விடாமல் செய்வோம்"

இதோ உன் தாய்; இதோ உம் மகன்: இப்படி பணியிலும், பணிவிலும் பரம தந்தையின் சித்தத்துக்கு பணிந்து நடந்த தாய், சிலுவையடியில் இயேசுவால் தம் அன்புச் சீடரிடம் தாயாகவே ஒப்புவிக்கப்படுகிறார்.

சீடரோடு இருந்த தாய்மரியும் உரிமையோடு மேட்டிமையாய் உலா வரவில்லை. சீடரோடு சீடராய் ஒரே மனதோடு ஐக்கியமாகி, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். ( அப். நட 1:14 )

தூய ஆவியின் பொழிவைத் தன் மேல் உணர்ந்த மரியாள் (லூக் 1:35 ), இயேசுவின் அன்புச் சீடர்களும் அதே தூய ஆவியைப் பெற ஒரு மனதோடு ஒரு தாயின் ஆதங்கத்தோடு வேண்டிக் கொண்டிருந்தார். மரியாளின் வாழ்க்கை அவரைப் போலவே நம்மையும் எல்லாவற்றையும் மனதிலிருத்தி ( லூக் 3:51 ),இதயத்தின் மவுனத்தில் ஜெபிப்பதற்கு அழைப்பு விடுக்கிறது.

நம்மையே தாழ்த்தி, அவமானத்தையும் , சாவையும் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு மனுக்குலமனைத்துக்கும் பணி செய்யும் அழைப்பையும் சிலுவையின் நிழலில் நிற்கும் மரியாளும், சிலுவையில் தொங்கும் இயேசுவும் நமக்கு இன்று தருகின்றனர்.ஆம்! ஜெபமே சேவையின் துவக்கம்! சேவையே ஜெபத்தின் நிறைவு!!

கருத்துகள் இல்லை: