கடந்த மார்ச் 25 நாலுமாவடியில் நாடைபெற்ற பிராத்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ சில கருத்துகளை கூறியுள்ளார் அதை படித்தவுடன் எனக்கு தோன்றிய வரி
"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மணமுண்டு"
கிறிஸ்துவ நம்பிக்கை மேல் நல்ல மதிப்பு வைத்திருக்கும் திரு.வைகோ அவர்கள் கோவில்பட்டியில் உள்ள தமது திரையரங்கை சபை நடத்துவதற்காக கொடுத்துள்ளார்
மட்டுமல்ல அமெரிக்காவில் உள்ள அவரின் இளைய மகள் மற்றும் மருமகன் இருவரும் கிறிஸ்துவ நம்பிக்கை உடையவர்கள்.
திரு.வைகோ அவர்கள் கிறிஸ்துக்குள்ளாக மேலும் வளரவும், அவரின் இரட்சிப்புகாகவும் ஜெபியுங்கள். அனைத்து அரசியல் தலைவர்களுக்காகவும் நடைபெற இருக்கின்ற தேர்தலுக்காகவும் ஜெபிப்பது நல்லது.
வைகோ உரையில் சில பகுதிகள்....
கிறிஸ்தவ வேதாகமத்தில் உள்ளபடி "ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் இருந்தால் உயர்த்தப் படுவோம்''
நாலுமாவடியில் நடந்த கூட்டத்தில் வைகோ பேச்சு
"கிறிஸ்தவ வேதாகமப்படி ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் இருந்தால் உயர்த்தப்படுவோம்" என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
இயேசு விடுவிக்கிறார்
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில் உள்ள நாலுமாவடியில் சகோதரர் மோகன் சி.லாசரசின் இயேசு விடுவிக்கிறார் ஜெபக்கூடம் உள்ளது.
இங்கு ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை பிரார்த்தனை நடத்தப்படுகிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து கலந்துகொள்கிறார்கள்.
நேற்று நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் மோகன் சி.லாசரஸ், சிங்கப்பூர் பாஸ்டர் பிரான்சிஸ், பாஸ்டர் ராஜன்எட்வர்டு ஆகியோர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்கள். இன்னிசை பாடல்கள் பாடப்பட்டன.
வைகோ பங்கேற்பு
இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று காலை 11.05 மணிக்கு நாலுமாவடிக்கு வந்தார். அவரை அங்கு ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரை, மாவட்ட பொறுப்பாளர் ஜோயல் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் வைகோ மேடைக்கு சென்று அங்கு விரித்து இருந்த பெட்சீட்டில் அமர்ந்து இருந்து பிரார்த்தனையில் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் வைகோ பேசியதாவது:-
பெருமை
இயேசுவின் போதனைகளை அறிவித்து வரும் சகோதரர் மோகன் சி.லாசரசஸ் நடத்தும் இந்த கூட்டத்திற்கு வெள்ளம்போல மக்கள் கூட்டம் திரண்டு இருப்பதை கண்டும், இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதையும் நான் பெருமையாகவே நினைக்கிறேன்.
இந்த பிரார்த்தனையை நடத்துகிற மோகன்சி.லாரன்ஸ், 25 ஆண்டுகளுக்கு முன்பு கஷ்டப்பட்டு சோர்ந்து இருந்தபோது கடவுள் இவரை மனிதகுல மீட்புக்காக ஊழியம் செய்ய சொன்னார்.
ஆனால் அதற்கு அவர் நான் சக்திஅற்றவன் எனக்கு ஜெபிக்ககூட தெரியாதே என்னால் எப்படி முடியும் என்று கூறினாராம். அவருக்கு ஆண்டவர் அருள் வழங்கினார். அவர் ஏசாயா 41 -ம் அதிகாரம் 8-வது வசனத்தை ஆதாரமாக கொண்டு செயல்பட்டார்.
பலப்படுத்துவேன்
"நீ பயப்படாதே நான் உன்னோடே இருக்கிறேன் உன்னை பலப்படுத்துவேன்" என்ற வார்த்தைக்கு இணங்க அவர் உயர்த்தப்பட்டு உள்ளார். வேதாகமத்தில் மோசேயை போல உயர்த்தி உள்ளார்.
இயேசுவின் வாழ்க்கை எல்லோருக்கும் தெரியும். அவர் மனிதனுக்காகவே உயிர்நீத்து மீண்டும் உயிர்பெற்று மக்களுக்கு நல்ல போதனைகளை செய்து வந்தார்.
மலைபிரசங்கம்
எனக்கு இயேசுநாதரின் மலைபிரசங்கம் அதிகம் பிடிக்கும். நான் திருவாசகம் நூல் வெளியிட்டு விழாவில் இயேசுகிறிஸ்துவின் போதனைகளையும், கிறிஸ்தவ பாதரிமார்கள் நமது நாட்டிற்கு செய்த சேவைகளையும் பற்றி கூறினேன்.
கிறிஸ்தவ பாதிரியார்கள் தமிழுக்கு அரும்பணியாற்றினார்கள். குறிப்பாக கால்டுவெல் சிறந்த பணியாற்றினார்.
ஆதியில் ஒரு வார்த்தை இருந்தது. அது தேவனாக இருந்தது. என்று கூறப்படுகிறது.
அந்த வார்த்தைகளால் பேசமுடியாது என்று இருந்த மோகன் சி.லாசரஸ் ஆண்டவரின் அற்புதங்களை பற்றி இந்த நாலுமாவடியில் இருந்து தொடங்கிய பேச்சு இன்று நாடு முழுவதும் உலகம் முழுவதும் ஒலிக்கிறது. டி.வியில் பேசுகிறார். அப்படி இவர் பேசுவது நமக்கு பெருமை அளிக்கிறது.
மார்ச் 25
இன்றையதினம் மார்ச் 25-ம் நாள் மிகவும் மகிழ்ச்சியான நாள். அற்புதமான நாள். மங்களகரமான நாளாகும்.
ஏன்என்றால் 1852-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆவியின் நாளான மார்ச் 25-ந் தேதியைத்தான் வருடத்தின் முதல் நாளாக கொண்டாடி வந்தனர். எனவேதான் இந்த நாளை மங்களகரமான நாளாக நினைத்து வருகிறோம்.
1852-ம் ஆண்டுதான் போப் ஆண்டவர் காலத்தில் ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு நாளாக மாற்றப்பட்டது. எனவே மார்ச் 25-ந் தேதி நான் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதில் பெருமை அடைகிறேன்.
இன்று மோகன்சி.லாசரஸ் போட்ட காலண்டரில் "மகிழ்ந்து இரு, கர்த்தர் மிக பெரிய காரியத்தை செய்வார்" என்று அந்த வாசகத்தில் கூறப்பட்டு உள்ளது.
அதேபோல நாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டால் நிச்சயம் வெற்றியை அடைய முடியும்.
இயேசு பல துன்பங்களை அனுபவித்து சிலுவையில் அறையப்பட்டு தனது உடலை அப்பமாகவும், ரத்தத்தை திராட்சை ரசமாகவும் தந்தார். அதை நான் நினைத்து பார்க்கிறேன்
துவண்டுவிடக்கூடாது
மனிதகுலத்தை ரட்சிக்க வந்த இயேசுபிரான் சிலுவையின் பாடுகளால் மரித்து உயிர்த்தெழுந்தார். வாழ்க்கையில் துன்பங்களும், இன்பங்களும் மாறிமாறி வரும் இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். துன்பம் வரும்போது துவண்டுவிடக்கூடாது.
எனவேதான் வேதாகமத்தில் "வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள் உங்களுக்கு இளைபாறுதல் தருகிறேன்" என்று கூறப்பட்டு உள்ளது.
அது போல இங்கு வருபவர்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கிறது. எல்லோரும் மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்பதை வேதவாக்கியம் கூறுகிறது.
பகுத்தறிவாளன்
நான் ஒரு பகுத்தறிவாளன். ஆனால் நான் எந்த ஒரு மதத்தையும் இழிவாகவோ, பழித்தோ பேசுவது கிடையாது. எல்லா மதத்தையும் நான் ஏற்றுக்கொள்ளகூடியவன்.
எனவேதான் நான் எல்லோரிடமும் சாதியின் பெயராலோ மதத்தின் பெயராலோ மோதல்கள் வேண்டாம் எல்லாம் மதங்களும் மனிதர்கள் விரோதம் பார்க்காமல் அன்புடன் மனித நேசத்துடன் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதைதான் உணர்த்துகிறது.
கிறிஸ்தவ மத கோட்பாடு அன்பாய் இருங்கள் என்பதைதான் கூறுகிறது. இந்த கோட்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
யோசேப்பு
இந்த நேரத்தில் எனக்கு வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள யோசேப்பின் வாழ்க்கை வரலாறு நினைவுக்கு வருகிறது.
யோசேப்பு வயலில் வேலை பார்க்கும் போது தனது சகோதரர்களிடம் எனது கட்டு உயர்ந்து இருக்கிறது உங்கள் கட்டுகள் தாழ்ந்து கிடப்பதாக நான் சொப்பனம் கண்டேன் என்றான்.
உடனே அவனுடைய சகோதர்கள் யோசேப்பு தங்களை அடிமையாக்க நினைக்கிறான் என்று கருதி அவனை கொலை செய்ய முடிவு செய்தனர்.
அந்த சகோதரர்களில் ரூபன் என்பவன் அவனை கொலை செய்ய வேண்டாம் என்று கூறினார். உடனே யோசேப்பை 20 காசுக்கு விற்றார்கள்.
அவனை வாங்கி சென்றவர்கள் அவனை ஒரு வானசாஸ்திரகாரனிடம் விற்றார்கள். அவன் இவன் மீது அதிக அன்பு வைத்து இருந்தான்.
ஆனால் அவனுடைய மனைவியோ இவன் மீது மோகம் கொண்டு அவனை தவறான வழிக்கு அழைத்தாள்.
ஆனால் யோசேப்போ தனது எஜமானுக்கு துரோகம் செய்யமாட்டேன் என்று கூறிவிட்டான். உடனே அவள் அவன் தன்னை மானபங்கம் செய்ய வந்ததாக பொய் சொன்னாள். அவனை ஜெயிலில் அடைத்தனர்.
அந்த ஜெயிலில் இவனுடைய அறைக்கு அருகே வானசாஸ்திரகாரன் ஒருவன் தவறு செய்ததற்காக அடைக்கப்பட்டான். அவன் ஒரு கனவு கண்டு இவனிடம் விளக்கம் கேட்டான்.
அதற்கு யோசேப்பு நீ 2 நாளில் விடுதலை செய்யப்பட்டு அரசனுக்கு அடுத்த பதவிக்கு செல்வாய் என்றான். அதன்படி அவனும் விடுதலை பெற்று அந்த பதவிக்கு சென்றான்.
செழிப்பு
இந்த நிலையில் அரசன் கனவு கண்டான். அதற்கு விளக்கம் தெரியாமல் வானசாஸ்திரகாரனிடம் கேட்டான். வானசாஸ்திரகாரனும் அரசனும் ஜெயிலில் இருக்கும் யோசேப்பிடம் கேட்டனர்.
அந்த கனவுக்கு யோசேப்பு விளக்கம் கூறினான். உங்கள் நாட்டில் 7 வருடம் நல்ல செழிப்பு இருக்கும், அதற்கு அடுத்த 7 வருடம் பஞ்சம் இருக்கும். இதை சமாளிக்க நல்ல நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று யோசேப்பு கூறினான்.
இதனை ஏற்று யோசேப்புவையே அரசன் தலைமை அதிகாரியாக நியமித்தார். அதன்படி செழிப்பு வந்தது.
செழிப்பு காலத்தில் தானியங்களை சேமித்து வைத்தனர். இதனால் அடுத்து வந்த பஞ்ச காலங்களில் மக்களுக்கு தானியம் வழங்க முடிந்தது.
யோசேப்பு இருந்த எகிப்து தேசத்தில்தான் தானியங்கள் இருந்தன. மற்ற நாடுகளில் தானியம் கிடையாது.
யோசேப்பை கொலை செய்ய வேண்டும் என்று எண்ணிய அவனுடைய சகோதரர்களும் வந்தனர்.
அவர்களுக்கும் தானியங்களை வழங்கி நாட்டு மக்களையும், தன்னை கொடுமைப்படுத்தி யவர்களையும் பாதுகாத்தான் யோசேப்பு.
உயர்வு
அதேபோல ஒழுக்கமாகவும், துன்பம் வரும்போது நேர்மையாகவும் சிறையில் இருந்தபோது புத்திசாலித்தனமாகவும் இருந்தால் நாமும் உயர்த்தப்படுவோம். வேதவாக்கின்படி நாம் வாழ வேண்டும்.
"நீ கொஞ்சத்தில் உண்மையாக இருந்தால் உன்னை அனேக தேசத்துக்கு அதிபதியாக்குவேன்" என்று வேதாகமத்தில் உள்ளது. அதன்படி உண்மையாகவும், ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும். கிறிஸ்தவ மார்க்கம் அன்பை போதிக்கிறது.
இந்தியாவில் வாழும் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அதற்கு சாதி, மத வேற்றுமையை துறந்து எல்லோரும் மனிதர்கள் என்ற மனிதாபிமானத்துடன் வாழ வேண்டும்.
நாட்டில் அமைதி நிலவ வேண்டும். சாதி, மத பூசல் ஏற்படாமல் இருக்க இயேசுவின் போதனைகள் வழிவகுக்கிறது.
இவ்வாறு வைகோ கூறினார்.
மோகன் சி. லாசரஸ்
கூட்டத்தில் சகோதரர் மோகன் சி. லாசரஸ் பேசியதாவது:-
இங்கு யோசேப்பின் வாழ்க்கை வரலாற்றை வைகோ கூறினார். யோசேப்பு ஜெயிலில் இருந்து துன்பங்களை அனுபவித்தார்.
அப்படி இருந்தும் ஒழுக்கம் தவறாமல் வாழ்ந்து வந்ததால் அவர் பிற்காலத்தில் உயர்த்தப்பட்டார். அவரைபோல வைகோவும் நியாயத்துக்காக பல சோதனைகளை சந்தித்தார்.
அவரை யோசேப்பை உயர்த்தியது போல ஆண்டவர் உயர்த்துவார். அவருக்காகவும், அவருடைய உடல் நலத்துக்காகவும் நாம் அனைவரும் ஜெபிக்க வேண்டும்.
இங்கு கூடி உள்ள மக்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய பிரச்சினைகளுக்காக வந்து உள்ளனர்.
அவர்களுடைய பிரச்சினைகளுக்காகவும், நோய்களை தீர்க்கவும், படிப்பில் முன்னேற்றம் அடையவும் நாம் அனைவரும் ஜெபிக்க வேண்டும்.
நமது ஜெபத்தை ஆண்டவர் கேட்கிறார். இங்கு எந்த நோக்கத்துக்காக ஒவ்வொரும் வந்து உள்ளார்களோ அவர்களுடைய நோக்கத்தை ஆண்டவர் நிறைவேற்றுவார்.
இவ்வாறு மோகன் சி. லாசரஸ் கூறினார்.
நன்றி -தினதந்தி
ஞாயிறு, 25 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக