சபை என்று சொன்னவுடன் நம் கண் முன் நினைவுக்கு வருவது நாம் ஆராதிக்கச் செல்லும் கட்டிடத்தில் உள்ள சபையே.
பரிசுத்த வேதாகமம் சரீரமாகிய கிறிஸ்துவே சபைக்கு தலையாய் இருக்கிறார் என்றும் நாம் ஒவ்வொருவரும் அந்தச் சரீரமாகிய சபையின் அவயங்களாய் இருக்கிறோம் என்றும் கூறுகிறது.
எனவே, இரட்சிக்கப்பட்டு தேவனுடைய சரீரத்தின் அவயமாய் இருக்கிற ஒருவன் தவறும் போது, சாத்தானுக்கு இடம் கொடுக்கும் போது அச்சரீரமாகிய சபையும் பாதிக்கப்படுகிறது அல்லவா?
தேவ பிள்ளைகளே ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும் என்னவெனில் இரட்சிக்கப்பட்ட நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் தேவனுடைய சித்ததுத்க்கு ஒப்புக் கொடுத்து தேவனுடைய விருப்பத்தின்படி ஓடினால் அவனுடைய வாழ்வில் தோல்வி என்பதே கிடையாது.
கர்த்தர் யோசேப்போடே இருந்தார் அவன் செய்கிற யாவையும் வாய்க்கப் பண்ணினார் என்று ஆதியாகம் 39:3 ல் வாசிக்கிறோம். இதிலே ஒரு இரகசியத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
கர்த்தர் யோசேப்பு செய்கிற யாவையும் வாய்க்கப் பண்ணினார். அதாவது கர்த்தர் எதை எல்லாம் விரும்பினாரோ அதையே யோசேப்பு செய்தார்.
அதினால் எல்லா காரியத்திலும் வெற்றி பெற்றார் என்பதை மறந்து விடக்கூடாது. பூமியில் உங்களை தேவன் வைத்திருப்பது அவருடைய சித்தத்தை நிறைவேற்றவே என்பதை உணர்ந்து அதன்படி நடந்தால் வாழக்கையில் எந்த காரியத்திலும் தோல்வியே கிடையாது.
அப்படியானால் கிறிஸ்தவ திருமணங்கள் ஏன் தோல்வியடைகிறது ஜோசப், ஜாண் என்ற பெயர் கொண்ட கிறிஸ்தவர்கள் கொலை குற்றத்தில் ஈடுபடுகிறார்களே? மேரி என்ற பெயரை வைத்துக் கொண்டு தற்கொலை செய்கிறார்களே?
கிறிஸ்தவ போதகர் பணமோசடி, பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றெல்லாம், பத்திரிகைகளில் வருகிறதே அது எப்படி? என்று கேட்கலாம்.
அதற்கு, பெயர் கிறிஸ்தவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் அல்ல என்ற ஒரே பதிலை தந்துவிடலாம். ஆனால் ஆவிக்குரிய சபையிலும் மணமுறிவு ஏற்படுகிறதே?
பெந்தேகொஸ்தே சபையின் போதகர்களும் பத்திரிகைகளுக்கு அனுதின இரையாகிக் கொண்டிருக்கிறார்களே அது ஏன்?
தேவன் ஒரு மனிதனை இரட்சிக்கும் போது ஆரம்பத்தில் எல்லா மனிதர்களும் தேவனுக்கு முன்பாக உண்மையாகவே இருக்கின்றனர்.
இனி என் வாழ்க்கையில் தேவனுக்கு சித்தமானதையே செய்வேன் என்று உறுதியும் எடுக்கிறார்கள்.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல தேவனுக்கு பயப்படுகிற பயம், தேவன் மீது கொண்ட அன்பு, தேவ சித்தத்தை செய்ய வேண்டும் என்ற தாகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும் போது, சத்துரு அதைப் பயன்படுததி ஏதோ ஒரு உலக காரியத்தின் மீது அளவில்லாத ஆசை கொள்ளச் செய்து தேவனுடைய சித்தத்தை விட்டு விலகச் செய்ய முயற்சிக்கிறான்.
இத்தருணத்தில் நம்முடைய அன்பு நிறைந்த தேவன் சாலமோனை எச்சரித்தது போல எச்சரிக்கிறார்.
அந்த மனிதன் செய்வது தவறு என்று சுடடிக்காட்டுகிறார். ஆனால், அவர்கள் கீழ்ப்படியாமல் அதே தவறை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதால் அவர்களை, தேவன் தம்முடைய கிருபையின் வாசஸ்தலத்தில் இருந்து விரட்டி விடுகிறார்.
இப்போது கிருபை தன்னை விட்டு விலகியதை அறிந்து கொண்ட அவர்கள் கிருபைக்காக, இரக்கத்திற்காக தேவ சமூகத்தில் கெஞ்சுவதை விட்டு விட்டு தேவனுடைய பிரசன்னமும் தேவனுடைய வழிநடத்தலும், தேவனுடைய வல்லமையும் தன்னிடம் இருப்பதாக நடிக்கத் தொடங்குகின்றார்கள்.
இந்த நாடகத்தை சந்தோஷத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிற பிசாசு அவர்களை பாவச் சேற்றில் சிக்கச் செய்து பரிதாபமாக பத்திரிகைக்கு இரையாக்கி இறை இயேசுவின் இன்ப நாமத்திற்கும் பகைஞனாய் மாற்றி விடுகிறான்.
அப்படியானால் வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வது மிகவும் கடினமா? என்று நீங்கள் கேட்கலாம்.
பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையோடு வெற்றியுள்ள வாழக்கை வாழ்வது, தேவனுடய சித்தத்தை நூறு சதவீதம் செய்வது என்பது எளிதே.
அதற்கு, ஒன்றே ஒன்றுதான் தேவை. அது தான் “கீழ்படிதல்”
நம்மில் வாசமாய் இருக்கிற ஆவியானவர் நம்மைக் குறித்து தேவன் வைத்திருக்கிற திட்டத்தை அறிவார்.
ஏனென்றால் ஆவியானவர் தேவனுடைய ஆழங்களை ஆராய்ந்திருக்கிறவர். எனவே பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையோடு தேவசமூகத்தில் காத்திருக்கும் போது தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்கிறோம்.
தேவனுடைய சித்தத்தை அறிந்து அதன்படி நடந்தால் ஏது தோல்வி? ஏது துக்கம்?
எனவே எந்த காரியத்தை செய்தாலும் முதலாவது தேவனுடைய விருப்பத்தை, அவருடைய சித்தத்தை அறிவதே உங்கள் பிரதான காரியமாக இருக்கட்டும்,
பிள்ளைகளின் படிப்பை நிர்ணயிப்பது உன்னுடைய பணம் என்றால், அங்கே தேவ சித்தம் நிறைவேறுவது எப்படி?
திருமண காரியத்தை படிப்பும் வேலையும் சம்பளமும் அழகும், அந்தஸ்தும், சாதியும் நிர்ணயம் செய்து விட்டு ,,,,,,, இந்த காரியம் கர்த்தரால் வந்தது என்று திருமண அழைப்பிதழில் அச்சிட்டால் எப்படி ?
கர்த்தரால் வந்த காரியம் கனவீனமடைந்து கணவனையும் மனைவியையும் பிரியச் செய்யுமோ?
அப்படியானால் “ தேவன் செய்கிற எதுவோ அது என்றென்றக்கும் நிலைக்கும்’ என்ற வேதவசனம் எங்கே? வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் என் வார்த்தைகள் ஒழிந்து போவதில்லை என்ற வசனத்தின் வல்லமை எங்கே?
தேவனால் வல்லமையாய் பயன்படுத்தப்பட்ட ஆஸ்வால்ட் ஜே. ஸ்மித் என்ற மனுஷன் தன்னுடைய இளம் வயதில் வேதாகமப் பள்ளியின் படிப்பை முடித்து எங்கு சென்று தேவ ஊழியத்தை செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, அவருக்கு மூன்று இடங்களில் இருந்து கர்த்தருடைய ஊழ்யத்தை செய்ய அழைப்பு வந்தது.
அதில் ஒன்று, தான் படித்த அதே சிகாகோவில் உள்ள ஒரு ஆலயத்தில் அவருடைய வாஞ்சையை பார்த்து மாதம் 1500 டாலருடன் கூடிய போதகருக்கான அழைப்பு.
இரண்டாவதாக மாதம் 1200 டாலருடன் கூடிய போதகராக அலாஸ்காவில் உள்ள ஒரு ஆலயத்தில் பணியாற்ற அழைப்பு.
மூன்றாவதாக டொரண்டோவில் உள்ள ஒரு ஆலயத்தில் போதகருக்கு உதவியாளராக பணியாற்ற மாதம் 600 டாலர் தருவதாக அழைப்பு.
மூன்று அழைப்புகளை பார்த்த ஆஸ்வால்ட் அவர்கள் எது அதிக பணம் வரும் பார்க்கவில்லை எது அதிக அந்தஸ்தை தரும் பெரிய சபை என்று சிந்திக்கவில்லை. எது தன்னுடைய சொந்த இடத்துக்கு அருகில் உள்ளது என்று பார்க்கவில்லை.
மாறாக தேவனுடைய சித்தத்தை அறிய விரும்பி காடுகளுக்கு சென்று உபவாசமிருந்து பொறுமையாய் தேவனுடைய வழிநடத்துதலுக்காக காத்திருந்தார்.
தேவன் டொரண்டோவில் ஒரு போதகருக்கு உதவியாளராகவே பணியாற்ற விரும்புகிறார் என்பதை அறிந்து சந்தோஷத்தோடு அந்த குறைந்த வருமானமுள்ள ஊழியத்தில் தன்னை முழு மனதோடு அர்ப்பணித்துக் கொண்டார்.
நடந்தது என்ன தெரியுமா? பின்னாட்களில் அதே டொரண்டோவில் மக்களின் சபை என்னும் பெரிய சபையை ஏற்படுத்தினதோடு அச்சபையில் இருந்து உலகம் முழுவதும் சென்று பணியாற்றும் நூற்றுக்கணக்கான மிஷனரிகளை அனுப்பி வைக்க தேவன் அவ்ஊழியருக்கு கிருபை அளித்தார்.
எனவே அன்பு சகோதரனே உன் திருமணத்தை நீயே காதலித்து முடிவு செய்வதைப் பார்க்கிலும், கர்த்தர் உனக்காக முடிவு செய்து வைத்திருக்கும் பெண், குணசாலியாக கடைசி வரை உன் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு உன்னையும் உன் குடும்பத்தையும் மனமகிழ்ச்சியாக வைத்திருப்பாள் அல்லவா,,,,, எனவே தேவ சித்தத்துக்கு ஒப்புக் கொடு.
அன்பு தகப்பனே உன் பிள்ளை குறைவான மதிப்பெண் எடுத்ததால் கேட்ட கல்லூரியில் இடம் கிடைக்கவில்லையே என்று எண்ணி மனம் பதறாதே,,,,,,,
கர்த்தருடைய சித்தத்துக்கு ஒப்புக் கொடுத்து கிடைக்கும் கல்லூரியில் மனநிறைவோடு உன் பிள்ளையை அனுப்பி வை நாளொன்று வரும் உன் பிள்ளையினால் அவன் படித்த கல்லூரிக்கே பெயரும் புகழ்ம் உண்டாகும்.
அன்புத் தங்கையே உன்னோடு கூட படித்தவர்கள் எல்லாரைப் பார்க்கிலும் குறைவான சம்பளத்துடன் கூடிய வேலையாச்சே என் நண்பர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று கிடைத்த வேலையை தள்ளிவிட நினைக்காதே.
தேவ சித்தத்துக்கு ஒப்புக்கொடு அடிமையான தானியேலை அதே ராஜ்யத்தின் பிரதானியாய் மாற்றினாரே. உன்னையும் ஏன் நம்முடைய தேவன் அப்படி நடத்த முடியாது? நிச்சயம் நடத்வார்.
ஊழியத்தின் பாதையில் முடிவெடுக்க நிற்கும் என் அருமையான பிள்ளைகளே தேவனுடைய சித்தத்துக்கு ஒப்புக் கொடுத்து அவருடைய ஆலோசனையின் படி நட,
அது அற்பாமாக தோன்றினாலும் அமைதியாய் செய். நாளொன்று வரும் கர்த்தர் உன்னை பயன்படுத்துவதைப் பார்த்து உலகமே வியக்கும்.
சரி சகோதரர்களே சாத்தானின் மூன்றாவது வெற்றிதான் என்ன? சொல்லுகிறேன். தேவ சித்தத்தில் இருந்து உன்னை வழி விலகச் செய்வதில் சாத்தான் வெற்றிப் பெற்று விட்டால், அதுவே சபையாகிய உன்னில் சாத்தானின் மூன்றாவது வெற்றி.
ஞாயிறு, 11 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக