கிறிஸ்தவம் என்பது ஒரு குருட்டு நம்பிக்கை அல்ல. இன்னும் சொல்லப் போனால் கிறிஸ்தவர்கள் எதையவது நம்பும்படிக்கு அல்ல எவராலும் மறுக்க முடியாத உண்மைகளை நம்புவதற்கே அழைக்கப்படுகின்றனர்.
கிறிஸ்தவ விசுவாசம் என்பது கும்மிருட்டில் குதிப்பதல்ல மாறாக அது வெளிச்சத்தை நோக்கி எடுத்துவைக்கும் ஒரு செயல் என்று ஒருவர் அழகாய் சொல்லியிருக்கிறார்.
கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள்? ஏன் அதை நம்புகிறார்கள் என்பது ஒவ்வொருவரும் உணரவேண்டிய உண்மை. தேவனைப் பற்றிய உண்மைகளில் சில உள்ளே.....
தேவன் பற்றிய ஏழு விவரங்கள்
(1. தனிச்சிறப்புமிக்க "தேவன் ஒருவரே" என்று நாங்கள் நம்புகிறோம். பைபிள் இப்படியாகச் சொல்கிறது (உபாகமம் 6:4): இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
2. இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்தவர் "தேவன்". தன்னுடைய வார்த்தையினால் இவைகள் அனைத்தையும் உருவாக்கினார்.
பைபிள் சொல்கிறது: (ஆதியாகமம் 1:3): தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. அவருடைய வார்த்தை மிகவும் சக்தி வாய்ந்தது.
3. தேவனால் படைக்கப்பட்டவர்களாகிய நாம் எப்படி தேவனை அறிந்துக்கொள்ள முடியும்?
மிகவும் சிறியவர்களும் அற்பமானவர்களாகிய நாம் எப்படி தேவனுடைய சிந்தனைகளை அறிந்துக்கொள்ள முடியும்?
நம்மால் முடியும் - தேவன் தன்னை வெளிப்படுத்த சித்தமானதால் தான் நம்மால் அவரை ஓரளவிற்கு அறியமுடிகிறது.
அவர் தன்னை வெளிப்படுத்தும் தேவனாக இருக்கிறார். (உபாகமம் 29:29) மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்;
வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.
தேவன் தன்னைப்பற்றி எவைகளை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்?
4. அவர் பரிசுத்தமானவர் - அவர் அப்பழுக்கற்றவர். அவரிடம் எந்த ஒரு குறையும் இல்லை. அவருக்கும் பாவத்திற்கும் அல்லது தீய சிந்தனைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
ஆபகூக் 1:13ம் வசனம் சொல்கிறது, "தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே;..."
5. அவர் நீதியுள்ளவர் -
இதன் பொருள் என்னவென்றால், தீமை செய்யும் எல்லாரும் தண்டிக்கப்படவேண்டும் என்பதாகும்.
இதைப் பற்றி மக்கள் சில நேரங்களில் குழம்பி விடுகின்றனர். நீதியும் இரக்கமும் ஒன்றல்ல, இவை இரண்டும் வெவ்வேறானவை ஆகும்.
நீதி என்றால், நீங்கள் சட்டத்தை மீறினால், கண்டிப்பாக நீங்கள் அபராதம் செலுத்தியே ஆகவேண்டும் என்பதாகும்.
தேவன் தன் இயற்கையான குணமான பரிசுத்தத்தை விட்டுக்கொடுக்கமாட்டார். தவறு செய்யும் எல்லாரையும் அவர் தண்டிப்பார்.
தேவன் நம்முடைய நல்ல செயல்களை எல்லாம் தராசின் ஒரு தட்டில் வைத்து, நம்முடைய எல்லா தீய செயல்களை அடுத்த தட்டில் வைத்து, எந்த பக்கம் அதிக கனம் உள்ளது என்று பார்ப்பார் என்று பொருள் அல்ல.
ஒரு எடுத்துக்காட்டுக்காக: நான் உங்கள் சகோதரனை கொலை செய்துவிட்டால், ஒரு நீதிபதி, "பரவாயில்லை, போகட்டும், நாம் இவனை விடுதலை செய்துவிடலாம்,
ஏனென்றால், இவன் தன் வாழ்நாட்களில் நிறைய நல்ல செயல்களை செய்துள்ளான்" என்று தீர்ப்பு வழங்குவாரா?
அப்படி சொல்வாரானால், அவர் ஒரு நீதியுள்ள நீதிபதியாக இருக்கமுடியுமா? மக்கள் செய்யும் தவறுகளை பார்க்காதவாறு தேவன் தன் கண்களை மூடிக்கொண்டு இருக்கமாட்டார். தேவன் தீமையை சகிப்பதில்லை.
ஆனால், நாம் அனைவரும் தூசுக்கு சமமானவர்கள் என்று தேவனுக்குத் தெரியாதா?
எப்படியென்றால், நாம் தவறுகள் செய்ய பலவீனமானவர்கள் என்று தேவனுக்குத் தெரியாதா?
பழுதே இல்லாத ஆணோ அல்லது பெண்ணோ யாரும் இல்லை. ஆம், இது நமக்குத் தெரியும்.
விஷயம் இப்படி இருக்கும் போது, நாம் செய்யும் தவறுகளை தேவன் கவனிக்காமல் விட்டுவிடுவார் என்று அர்த்தமா?
தேவன் பரிசுத்தமானவர் மற்றும் அவர் நீதியுள்ளவர், ஆகையால், நம் தவறுகளை அவர் நிச்சயமாக கவனிப்பார்.
இவைகளை நாம் புரிந்துக்கொண்டோமானால், நாம் எவ்வளவு மோசமான நிர்பந்தமான நிலையில் இருக்கிறோம் என்பதை உணரமுடியும்.
நாம் நேர்மையுள்ளவர்களாக இருந்தால், நாம் என்றுமே சுயநலமுடன் அல்லது தவறான சிந்தனையை உடையவர்களாக இல்லை என்றும், நாம் பொய்யே ஒரு முறை கூட சொல்லவில்லை என்றும் சொல்லமுடியுமா?
பரிசுத்தமான தேவனுக்கு முன்பாக நமக்கு சுத்த இதயம் உள்ளது என்று யார் சொல்லமுடியும்?
இனிமேல் நாம் தவறுகளே செய்யாமல் வாழ்வோம் என்று சொன்னாலும், கடந்த கால வாழ்க்கையில் நடந்த தவறுகளுக்கு நாம் சொல்லும் பதில் என்ன?
தேவனுக்கு நியாபக சக்தி குறைவாக இருக்குமா? நல்ல செயல்களைச் செய்வது, தீய செயல்களை துடைத்துவிடுமா? இல்லை என்பது தான் பதில்.
நம்மில் ஒவ்வொருவரும் தேவனின் நியாயத்தீர்ப்பிற்கும், நரக நெருப்பிற்கும் உள்ளாக வேண்டியவர்கள்.
இது ஒன்றும் "என்னை மன்னித்துவிடும், அடுத்த முறை நான் தவறுகள் செய்யாமல் இருக்க முயற்சி செய்கின்றேன்" என்று ஒரு சின்ன ஜெபம் செய்தால் தீர்ந்துவிடும் காரியம் அல்ல.
இப்படி செய்வதில் எந்த நியாயமும் இல்லை.
ஒரு எடுத்துக்காட்டு: ஒரு சாலையில் சிகப்பு விளக்கு எரிந்துக்கொண்டு இருக்கும் போது, நான் நிற்காமல் சென்றுக்கொண்டு இருந்தால், ஒரு அதிகாரி என்னை நிறுத்தினால், "அய்யா, நான் இனி என் வாழ்நாட்களில் எப்போதும் பச்சை வண்ண விளக்கு எரிந்த பின்பு செல்கின்றேன்" என்றுச் சொன்னால், இதனால் ஏதாவது நன்மை விளையுமா?
இப்படியாக நாம் சொல்வது ஒரு அதிகாரியிடம் வேலை செய்யாது அல்லது இதனால் பயன் இல்லை என்று இருக்கும் போது, பரிசுத்தமான மற்றும் நீதியான தேவனிடம் எவ்வளவு குறைவாக இது வேலை செய்யும்.
இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது, (ரோமர் 6:23) "பாவத்தின் சம்பளம் மரணம்".
நம் எல்லாருக்கும் ஒரு நற்செய்தி என்னவென்றால், கதை இதோடு முடியவில்லை.
6. தேவன் சர்வவல்லவர் - தேவன் எதை செய்யவிரும்புவாரோ அதை அவர் செய்ய வல்லவர்.
எரேமியா 32:17 வசனம் சொல்கிறது "ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையம் பூமியையும் உண்டாக்கினீர்;
உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை".
அவருக்கு எந்த எல்லையும் இல்லை, அவருடைய வல்லமைக்கும் எல்லையில்லை.
தேவன் தன் நிலையில் சரியாக உள்ளார். தேவன் முரண்படுவதில்லை. அவர் தன் பரிசுத்தம் மற்றும் நீதியான குணத்திற்கு எதிராக முரண்படுவதில்லை. அவர் தன் சட்டத்தை தானே மீறுவதில்லை.
நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கட்டும்: "நீங்கள் ஒருவரைப் பற்றி எப்படி அறிந்துக்கொள்கிறீர்கள்?"
மற்றவர்களை வெளிப்புறமாக நீங்கள் காணுவதினால் அவர்களைப் பற்றி ஓரளவிற்குச் சொல்ல வாய்ப்பு உள்ளது.
ஆனால், அவர்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்றும் அவர்கள் உள்ளங்களில் மறைந்திருப்பது என்ன என்பதும் உங்களால் சொல்லமுடியாது.
நாம் ஒருவரின் வார்த்தைகளை கேட்கவேண்டும். அவர்கள் இதயங்களில் என்ன மறைந்துள்ளது என்றும், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் அவர்களின் வார்த்தைகள் தான் நமக்கு சொல்லும்.
நான் என் விருப்பங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள வேண்டுமானால், அதற்கு பல வழிகள் உள்ளன.
என் சிந்தனைகளை எழுதி உங்களுக்கு ஒரு கடிதமாக அனுப்பலாம். அதை நீங்கள் படிக்கலாம்.
ஆனால், உங்களுக்கு சில கேள்விகள் எழலாம், அல்லது என் கடிதத்தில் உள்ளவைகளை நீங்கள் புரிந்துக்கொள்ளாமல் இருக்கலாம்.
இதற்கு ஒரு சரியான வழி என்னவென்றால், என்னை நன்றாக அறிந்த என் நண்பனிடம் அந்த கடிதத்தை கொடுத்து உங்களிடம் அனுப்புவது தான்.
என் நண்பன் அந்த கடிதத்தில் நான் என்ன சொல்லியுள்ளேனோ அதை உங்களுக்கு விவரமாக விளக்குவார். இதைவிட
ஒரு நல்ல வழிமுறை என்னவென்றால், நான் உங்களுக்கு தொலைபேசி மூலம் நேரடியாக தொடர்பு கொள்வது தான்.
இவைகள் எல்லாவற்றையும் விட சிறந்த முறை என்னவென்றால், நீங்கள் இருக்கும் இடத்திற்கு நான் வந்து, உங்களோடு நேரடியாக பேசுவது தான்.
தேவனுடைய வார்த்தையின் மூலமாகத் தான் இந்த உலகம் படைக்கப்பட்டுள்ளது. அவரது வார்த்தைகள் நாம் கற்பனை செய்யவும் புரிந்துக்கொள்ளவும் முடியாத அளவிற்கு வல்லமையுடையது.
நாம் அவரை அறியவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவர் தன் வார்த்தைகளை சட்டமாக நமக்கு கொடுத்துள்ளார்.
அவர் தன் வார்த்தைகளை விளக்குவதற்கும் சந்தேகங்களை தீர்ப்பதற்கும் தீர்க்கதரிசிகளை அனுப்பியுள்ளார்.
இப்படியாக எழுதப்பட்டுள்ளது: (எபிரேயர் 1:1) "பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,"
தேவன் மிகவும் வல்லமையுள்ளவர், அவரால் முடியாதது ஒன்றுமில்லை. தேவன் விரும்பினால், அவருடைய வார்த்தையை நம்மிடம் அனுப்பமுடியும்,
அந்த வார்த்தை நம் முகத்திற்கு நேராக வரமுடியும். அவரது வார்த்தை மனிதனாக வரமுடியும்.
7. தேவன் அன்பாக இருக்கிறார் -
தேவன் நம்மில் அன்பு கூறுகிறார் மற்றும் நாம் அவரை அறிந்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார், ஆகையால், அவரது வார்த்தையை மனிதனாக அனுப்பினார்.
இப்படியாக பைபிளில் எழுதப்பட்டுள்ளது: (யோவான் 1:1, 14) ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது...
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்;
அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
இயேசு தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார். அவர் பரிசுத்தமான தேவனுடைய வார்த்தையாக உள்ளார். ஆபிரகாமையும் அவரது மகனையும் நியாபகம் செய்துக்கொள்ளுங்கள் (ஆதியாகமம் 22: 1-14).
ஆபிரகாம் தேவனுக்கு கீழ்படியவேண்டும் என்றும் அவருக்கு தன்னை சமர்பிக்கவேண்டும் என்றும் விரும்பினார்.
அவர் தன் மகனை எடுத்து தேவனுக்கு பலியிட கூட தயங்கவில்லை, போகும் வழியில் அவரது மகன், "நெருப்பும் கட்டையும் உள்ளது, ஆனால், பலியிட ஆடு எங்கே?" என்று கேட்டார்.
அதற்கு ஆபிரகாம் பதில் அளித்தார், "தேவன் அவரே பலிக்கான ஆட்டை தருவார் என்றுச் சொன்னார்"
ஆபிரகாம் தன் மகனை பலிபீடத்தில் கிடத்தி, கத்தியால் பலியிட முயற்சித்த வேளையில், தேவன் அவரை அழைத்தார்,
"ஆபிரகாமே, உன் மகன் மீது உன் கையை வைக்காதே?" மற்றும் ஆபிரகாம், தலையை ஏறெடுத்து பார்க்கும் போது, தேவன் தயார்படுத்தி வைத்திருந்த ஒரு ஆட்டை கண்டார்,
அந்த ஆடு முட்களின் இடையில் மாட்டிக்கொண்டு இருந்தது, அதை எடுத்து ஆபிரகாம் தேவனுக்கு பலியிட்டார். அவரது மகன் தப்பிக்கப்பட்டார்.
"இயேசுவை தேவ ஆட்டுக்குட்டி" (யோவான் 1:16) என்று பைபிள் அழைக்கிறது.
தீர்க்கதரிசியான யோவான் "இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" என்று பறைசாற்றும் போது, இதன் பொருள், இயேசு நம்மை அடிமைத்தனத்திலிருந்து விலைசெலுத்தி விடுவித்துள்ளார் என்பதாகும்.
தேவனுடைய வார்த்தை(இயேசு) நம் மீது வைத்த அன்பினாலே, நமக்கு வரவேண்டிய தண்டனையை, நியாயத்தீர்ப்பை தன் மேல் ஏற்றுக்கொண்டார்.
ஆனால், மரித்தவர் அப்படியே இருந்துவிடவில்லை, அப்படி அவர் இருக்கவும் முடியாது, அவர் வெற்றியுள்ளவராக உயிரோடு எழுந்தார், மற்றும் மரணத்தை ஜெயித்தார்.
நாம் தேவனை அறிந்துக்கொள்வது எப்படி?
நாம் தேவனை அறிந்துக்கொள்வது எப்படி? இது சுலபம் அல்ல - இதற்கு நமக்கு தாழ்மை வேண்டும்.
நாம் தூசுக்கு சமம் என்றும், நமக்கு சுத்தமில்லாத இதயம் உண்டென்றும், மற்றும் நம்முடைய செயல்களினால் நமக்கு நரகம் தான் கிடைக்கும் என்றும் நாம் உணர்ந்து தாழ்மையுடன் ஒப்புக்கொள்ளவேண்டும்.
தேவன் நமக்காக என்ன செய்து இருக்கிறார் என்பதை உணர்ந்து நாம் அதை தாழ்மையோடு அங்கீகரிக்கவேண்டும்.
அவர் நம் அழுக்கு நீங்க நம்மை கழுவுவார், நம்மை பரிசுத்தவான்களாக மாற்றுவார்,
மற்றும் தன்னுடைய ஆவியை நமக்கு உதவி செய்யும்படி அனுப்பி, நாம் ஒரு கீழ்படிதல் உள்ள வாழ்க்கையை வாழ உதவிபுரிவார்.
தேவனை நாம் அறிந்துக்கொண்டால் நமக்குள் ஒரு விடுதலை மற்றும் எல்லையில்லா ஆனந்தம் உண்டாகும்.
தேவன் ஒருவரே, அவர் தான் உலகத்தைப் படைத்தவர், அவர் தன்னை மக்களுக்கு வெளிப்படுத்தியவர்,
அவரே பரிசுத்தர், நீதியுள்ள நியாயாதிபதி, அவர் சர்வவல்லவர் மற்றும் அன்பானவர்.
அவர் நம்மை தன் வேலைக்காரர்கள் என்று அழைப்பதில்லை, அதற்கு பதிலாக "பிள்ளைகள்" என்று நம்மை அழைக்கிறார்.
இயேசு சொல்கிறார் (யோவான் 15:15) "இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன்....".
இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது (யோவான் 1:12), அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
ஞாயிறு, 11 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக