விசுவாசிகள் ஒருவரையொருவர் அறிவுறுத்தவும், அனலூட்டவும், கடிந்துரைக்கவும், கறையகற்றவும்- அல்லது, உருவகமாகச் சொல்லப்போனால்-ஒருவர் மற்றவரின் காலடிகளைக் கழுவப் பணிக்கப்பட்டிருக்கிறோம்.
பரிசுத்தவான்களின் கால்களைக் கழுவுதல் என்பதற்கு ஆன்மீக மொழியில், உடன் கிறிஸ்தவரின் தின வாழ்வில் படியும் ஒழுங்கீனங்களைக் களைய அவர்க்குதவுதல் என்றும், இன்னும் வெளிப்படையாய், தாழ்மையோடு மற்றவர்க்குப் பணியாற்றுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.
இந்தப் பொறுப்பில் நாம் அவசியமாய்க் கைக்கொள்ளவேண்டிய சில நடைமுறைப் படிகள் உண்டு.
உங்கள் சகோதரனின் கால்களில் கறையுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
ஒரு வேதபாடக் குழுவில் பேச அழைக்கப்பட்டிருந்த ஓர் இளம் பெண் தொழிலதிபர் அரைமணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தார்களாம்.
உடனடியாக, இவர்களை அழைத்திருந்த தோழி இவர்களைத் தனியே அழைத்துச் சென்று முதன்முதலாக இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் கிறிஸ்தவரல்லாதோரை இப்படிக் காக்க வைக்கலமா எனக் கடிந்துகொண்டார்.
அப்போது அந்தப் பெண்மணி விவரித்தார்கள்: "ஒரு குடிகார வாகன ஓட்டி என் காரில் மோதிவிட்டான். காவல் துறையினர் வரும் வரையில் அங்கேயே நிற்க வேண்டியதாயிற்று.
பின்னர் சேதமடைந்த என் காரைக் கொண்டுசெல்ல வாகனம் ஏற்பாடு செய்தேன். நானும் மருத்துவமனை செல்லவேண்டியவள்தான்; அத்தனைவலி என் உடல் முழுதும்.
ஆனாலும் நான் மறுத்துவிட்டு வாடகைக்கார் பிடித்து இங்கு வந்தேன்."
உண்மை நிலை என்னவென உறுதி செய்யுமுன்னரே கால்களைக் கழுவ ஆயத்தம் செய்துவிடவேண்டாம். கடிந்துகொள்வதற்கு முன்பதாகக் கறைப்பட்டது உண்மையா என உறுதி செய்துகொள்ளுங்கள்.
பிறர் காயங்கள் கழுவ முனையும் உங்கள் கைகள் சுத்தமாயிருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில், திருமணத்திற்கு முந்திய நாள், புது மாப்பிள்ளையின் நண்பர்கள் அவரைப் பிடித்துத் தனியான இடத்துக்குத் தூக்கிச்சென்று அவரது காலணி மற்றும் காலுறைகளைக்கழற்றிப் பாதம் கழுவுவது போலப் பாவனை செய்வார்களாம்.
ஆனால், அதற்கு முன் அவர்களனைவரும் தங்கள் கைகளில் கரி தடவிக்கொள்வாராம். என்ன ஆகும்? மணமகனின் கால்கள் முன்னைவிட இன்னும் அழுக்காய்ப்போகும்.
இந்தப் பாரம்பரியத்தின் தாற்பரியம் என்னவென நாமறியோம். ஆனால், கழுவப்படாத கரங்கள் கழுவும் பணியில் ஈடுபட்டால் காரியம் இன்னும் கெட்டுவிடும்.
இயேசுவின் போதனையைச் சற்று வடிவம் மாற்றி வாசித்துப் பாருங்கள்: "முதலில் உங்கள் கரங்களைக் கழுவுங்கள்; அப்போது, கழுவுவதற்கு வசதியாக உங்கள் சகோதரனின் பாதங்களின் அழுக்கு தெளிவாய்த் தெரியும்."
ஒரு குறிப்பிட்ட பகுதியில் குடியிருப்போர் 53 பேர், தங்கள் பகுதியில் தாறுமாறாக வாகனங்கள் ஓட்டு வதைக் கண்டித்து மனுவொன்றில் கையொப்பமிட்டு அதிகாரிகளுக்கு அளித்தனராம்.
காவல் துறையினர் கண்காணிக்கத் தொடங்கினர். ஒருசில இரவுகளுக்குப் பின்னர் இக்குற்றத்திற்காக ஐந்து பேர் பிடிபட்டனர்.
அந்த ஐவருமே மனுவில் கையொப்பமிட்டிருந்தவர்கள்தாம்.
குற்றத்தில் அகப்பட்ட சகோதரனைச் சீர்செய்ய முனைபவர்கள் "ஆவிக்குரியவர்களாய்" இருக்கவேண்டும் (கலா 6:1).
தக்க தருணம், இடம் பார்த்துக் கழுவ முனையுங்கள்.
"நான் இன்னாரது கால்களைக் கழுவப் போகிறேன்" எனத் தம்பட்டம் அடித்துக்கொண்டு கால்களைக் கழுவச் செல்லக்கூடாது.
தோல்விகளையும், கறைகளையும் வெளியரங்கமாக்கி வெட்கப்படுத்தும் வேலையல்ல இது.
ஒரு கிறிஸ்தவக் கல்லூரியின் புத்தெழுச்சிக் கூட்டங்கள் வெளியே சொன்னால் வெட்கக் கேடாகிப்போகும் ரகசியப் பாவங்களையெல்லாம் வெளிப்படை அறிக்கை செய்ய வலியுறுத்தும் நிலைக்குச் சென்றுவிட்ட தருணத்தில், அக்கல்லூரித் தலைவர் சமயோசிதமாக அக்கூட்டத்தையே முடித்துவிட்டாராம்.
பாதம் கழுவவே அழைக்கப்பட்டோமேயன்றி, அவதூறுச் சேறிறைத்துச் சுயகவுரவத்தைச் சூறையாடுவதற்கல்ல!
கழுவும் தண்ணீரைச் சரியான வெதுவெதுப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.
கழுவும் நீர் கொதிக்கவும் கூடாது; குளிர்ந்திடவும் கூடாது.
சிதைத்துவிடும் சில்மிஷத் தொனியிலோ, ‘கண்டுபிடித்துவிட்ட’ களிப்போடோ, ஒருவரது குறைகளை அவருக்கறிவித்தல், கழுவும் நீரைக் கொதிக்கவோ உறையவோ விட்டுவிட்டதற்குச் சமானம்.
உணர்த்தும் மொழிகள் உஷ்ணப்படுத்தவும் கூடாது; உறைந்திடச்செய்யவும் கூடாது!
குனிந்து கழுவுங்கள்.
தம் சீடர்களின் கால்களைக் கழுவிய இயேசுவைப் போலவே, நீங்களும் முழங்கால் முடக்கியே கழுவமுனைதல் வேண்டும்.
கால்களைக் கழுவும் சமயம், ஏதோ ட்ரில் மாஸ்டரைப் போல வீராப்புடன் மயில்நடை போடக்கூடாது.
`நானும் சறுக்குவதற்கு ஏதுவானவனே’ என்கிற தன்னுணர்வுத் தாழ்மையோடுதான் சீர்திருத்தும் பணி நடத்தப்பெறவேண்டும்.
மிருதுவாய்க் கையாளுங்கள்.
பிறர் தொடின் கூசும் மிக மென்மையான உடற்பகுதியைத் தொடுகிறீர்கள் என்கிற எச்சரிப்புணர்வுடன்பிறரின் கால்களைக் கழுவத் தொடங்குங்கள்.
ஆகவேதான், "நீங்கள் சாந்தமான உள்ளத்தோடு... திருத்துங்கள்" (கலா 6:1) எனப் பவுல் அறிவுறுத்துகிறார்.
ஜான் வெஸ்லியும், நாகரீகம் தெரியாத அவரது நண்பரொருவரும் ஒரு வீட்டிற்கு விருந்தினராய் அழைக்கப்பட்டனர்.
விருந்தளித்தவரின் மிக அழகான மகளும் வெஸ்லியின் பிரசங்கத்தால் கவரப்பட்டிருந்தாள்.
விருந்தின் சிறு இடைவெளியில், வெஸ்லியின் நண்பர் அப்பெண்ணின் கரத்தைப் பிடித்து அதில் மின்னும் மோதிரங்களை வெஸ்லியிடம் காட்டி, "ஒரு மெதடிஸ்டின் கரங்கள் இப்படி மின்னலாமா? உங்கள் கருத்தென்ன?" எனக் கேட்டார்.
அப்பெண்ணின் முகம் சிறுத்துப்போனது. நகையணிவதை வெறுக்கும் வெஸ்லிக்கும் தர்மசங்கடமாகிவிட்டது.
ஆனாலும், சுதாரித்து, சிறு முறுவலோடு சொன்னாராம்: "மோதிரமில்லாவிடினும் இந்தக் கரம் மினுங்கத்தான் செய்யும்; அத்தனை அழகான கரம்!"
இந்த வார்த்தைகள் நண்பர் ஊற்றிய வெந்நீரின் வெம்மைத் தணித்தது மட்டுமல்ல, அப்பெண்ணின் கால்களையும் மென்மையாய்க் கழுவிவிட்டது.
அன்றைய மாலைக் கூட்டத்திலேயே, அப்பெண் உரம் மிக்க கிறிஸ்தவளாக மாறிவிட்டாள். "உண்மையெனும் பாறாங்கற்களை மக்கள்மேல் குவிக்குமுன்னர், அவர்களுக்கு அன்பெனும் கவசம் அணிவிக்க மறந்துவிடாதீர்" என யாரோ கூறியுள்ளார்.
கழுவியபின் துடைத்திடுங்கள்.
நமது ஆண்டவர் தம் சீடரின் பாதங்களைக் கழுவிய பின்னர் துடைக்கவும் செய்தார். சரியாத் துடைக்காது விடப்பட்ட பாதங்கள் தூசியில் படும்போது முன்னைவிட அதிகமாய் அழுக்கு ஒட்டிக்கொள்ளும் அபாயம் உண்டு.
தவறிய சகோதரனைச் சீர்ப்படுத்தும் பணியில், கால்களைத் துடைத்து மீண்டும் நீதியின் பாதைகளில் நடக்கச் செய்வதும் அடங்கும்-மன்னிக்க மட்டுமல்ல, மறக்கவும் வேண்டும்.
டுடிஎந வடி வாந ருவவநசஅடிளவ என்ற தம் புத்தகத்தில் மேற்கண்ட சில ஒப்புமைகளைக் கூறிய கு. க்ஷ. மேயர் சொல்கிறார்:
"போதுமான அளவு நாம் ஒருவர் பாதங்களை மற்றவர் கழுவுவதில்லை. நம்மைச் சுற்றியுள்ளோரின் குறைகளை உணர்கிறோம்;
அவற்றைக் கூர்ந்து கவனிப்பதிலும் குறைகூறுவதிலுமேயே திருப்தியடைந்துவிடுகிறோம்.
அவைகளைக் களைய நாம் துணியாததற்குக் காரணம் நம்மில் கிறிஸ்துவின் அன்பின் நிறைவின்மையும், வளைந்து குனிவதற்கு விருப்பமின்மையுமே.
தன்னைப் பாவிகளில் முதல்வனாகவும், புனிதர்களில் கடையனாகவும் கருதாத எவரொருவரும், தவறிழைத்த இன்னொருவரைச் சீர்ப்படுத்தவியலார்.
நமக்கு இணக்கத்தின் ஆவியும், இரக்கத்தின் ஆவியும் இன்னும் தேவை."
ஞாயிறு, 25 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக