2002-ல் தமிழக அரசு கொண்டுவந்த மதமாற்றத் தடுப்புச் சட்டம் இம்மாநிலத்திலும் நாடு முழுவதிலும், கிறிஸ்தவ வட்டாரங்களிலும் பிற சமுதாயத்தினரிடையேயும் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சபையின் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களது எதிரொலி பலவிதங்களில் உள்ளது. எதிர்ப்பதற்காக உண்ணாவிரதங்கள், அணிவகுப்புகள் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்கள் இழுத்து மூடப்படுதல் போன்றவை பெருவாரியாகப் பேசப்பட்டும் நடத்தப்பட்டும் வந்தன.
இந்தத் தடைச் சட்டத்திற்குத் தாங்கள் எவ்விதம் பிரதிபலிக்கவேண்டுமென்று எளிய மனதுடைய கிறிஸ்தவர்களுக்கு ஒரே குழப்பம்.
ஒரு திருவசனப் போதகன் மற்றும் முப்பதாண்டுகளுக்குமேல் மிஷனரிப் பணியில் தீவிர ஈடுபாடு கொண்டவன் என்ற முறையில் எனது கருத்தை இங்கு எழுதுகிறேன்.
"என்னிடத்திலும் கடவுளின் ஆவி உண்டு" என அறிந்திருக்கிறேன் (1 கொரி 7:40).
மதமாற்றத் தடுப்புச் சட்டங்கள் கிறிஸ்தவர்களுக்கு, அதுவும் இந்தியாவிலுள்ளவர்களுக்கு, அதிர்ச்சி தரக்கூடாது.
ஒரிசா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பல்லாண்டுகளாய் இவ்விதச் சட்டங்கள் அமுலில் உள்ளன.
சொல்லப்போனால், இவ்விதப் பகுதிகளில்தான் திருச்சபை தீவிரமாய்வளர்ந்து வருகிறது.
"சபை" என்ற சொல்லை இயேசு முதன்முறை உச்சரித்தவுடனே, "பாதாளத்தின் வாசல்கள் அதின்மேல் வெற்றிகொள்ளாது" என்று கூறிவிட்டார் (மத் 16:18).
திருச்சபை கட்டுதலும் சாத்தானோடு போரிடுதலும் இணைந்தே செல்லும் (நெகே 4:17).
பார்வோனும் அவனது அதிகாரிகளும் எகிப்தில் அன்று இறைமக்களை எப்படி நடத்தினார்களென்று நாமறிவோம்.
"அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ, அவ்வளவாய்ப் பெருகினார்கள்" (யாத் 1:12).
பழம்பெரும் அரசியல் தலைவர் ஊ. ராஜாஜி அவர்களுக்கு இதைப் புரிந்துகொள்ளும் அறிவு இருந்தது.
கிறிஸ்தவத்திற்கு எதிரிகளை அவர் பார்த்து, "கிறிஸ்தவர்களை நசுக்காதீர்கள்; அவர்கள் மூட்டைப்பூச்சி போன்றவர்கள்" என்றார்! சபைச் சரித்திரத்தில் நற்செய்தியறிவிப்புப்பணிக்கு எதிர்ப்பு இல்லாத காலம் இருந்ததேயில்லை.
"பலவந்தப்படுத்தியோ, நயங்காட்டியோ, ஏமாற்று வழிகளிலோ" யாரையும் ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாற்றக்கூடாது என்கிறது இச் சட்டம்.
பகுத்தறிவைவிட மூடநம்பிக்கைகளும் சொந்தப் பிரியமுமே தலைதூக்கியிருக்கும் இந்தியா போன்றதொரு நாட்டில் எவராவது பலவந்தப் படுத்தப்படுவதினால் தனது மதத்தை விட்டுவிடுவாரா?
ஓர் அரசியல் கட்சியிலிருந்து மக்கள் இன்னொரு கட்சிக்குத் தாவாமலிருக்க ஒரு தடுப்புச் சட்டம் கொண்டுவந்திருந்தால் அதில் அர்த்தமிருக்கும்!
பாமர மக்களுக்குப் பச்சைப் பொய்களையே சொல்லி, எதையெல்லாமோ வாக்குப்பண்ணி அதில் கால்வாசிகூட நிறைவேற்றாத அரசியல்வாதிகளுக்கல்லவோ இவ்விதச் சட்டம் தேவை?
இயேசுவானவர் மக்களுக்கு மனச் சமாதானம், மகிழ்ச்சி, மன்னிப்பு மற்றும் மங்கா வாழ்வை வாக்களித்தார். இதை "நயங்காட்டுதல்" என்றால்-மன்னிக்கவும்-இதை நிறுத்த முடியாது!
கிறிஸ்துவின் நற்செய்தியின் அருட்பேறுகளை உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் அறிவிக்கும்படி கிறிஸ்தவர்யாவரும் கிறிஸ்துவிடமிருந்து பேராணை பெற்றுள்ளனர்.
இவ்வித அறிவுப்புப்பணிக்கான அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்தது மன்னாதி மன்னன் இயேசுவே (மத் 28:18-20).
இந்த அதிகாரத்தையும் உரிமையையும் எந்த அரசும் அவர்களிடமிருந்து பறிக்கமுடியாது. கிறிஸ்தவரல்லாதவர்க்குக் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பறைசாற்றுவது கிறிஸ்தவர் மீது விழுந்த கடமையாகும்.
மிஷனரிப்பணியும் நற்செய்தியறிவிப்பும் திருச்சபையின் விருப்புவெறுப்பைப் பொறுத்ததல்ல.
மற்றவர்களைக் கிறிஸ்தவராக்காத கிறிஸ்தவன் கிறிஸ்தவனே அல்ல. இயேசுவின் வழிநடக்கும் எவரும் மனிதரை அவருக்காய்ப் பிடித்தே ஆகவேண்டும் (மத் 4:19).
மக்களை மதமாற்றம் செய்ய அல்ல, உதவியற்றுப் பாடுபடுபவர்களுக்குக் கருணை காட்டவே நாம் தானதர்மச் செயல்கள் புரிகிறோம்.
அன்னை தெரசா அவர்கள் குப்பைத் தொட்டிகளிலிருந்து சிசுக்களையும் தெருக்களில் செத்துக்கொண்டிருந்தோரையும் எடுத்துத் தனது இல்லத்தில் வைத்துப் பராமரித்தது ஏன்?
கிரஹாம் ஸ்டெயின்ஸ் தனது சொந்த நாட்டை விட்டுவந்து ஒரிசாவிலிருந்த தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை கொடுத்துவந்தது ஏன்?
"நல்லோர் மீதும் தீயோர் மீதும் தமது சூரியனைப் பிரகாசிக்கப்பண்ணி, நேர்மையுள்ளோர் மீதும் நேர்மையற்றோர் மீதும் மழையைப் பெய்யப் பண்ணும்" நமது விண்ணகத் தந்தையை நாம் பின்பற்றுகிறோம் (மத் 5:45).
கிறிஸ்தவத்திற்கு மக்கள் அதன் தன்னலமற்ற தியாகச் சேவைகளாலும், எளியோர், நசுக்கப்பட்டோர் மற்றும் தீண்டப்படாதவர்களுக்குக் காட்டும் பரிவினாலும் கவரப்படுவார்களானால் அது நயங்காட்டுதலா?
ஏழைகளுக்கும் ஒதுக்கப்பட்டோருக்கும் பல்லாண்டுகளாய்ப் பணியாற்றிக்கொண்டிருக்கும் நிவாரண நிறுவனங்கள் பல இச்சட்டத்தினால் பெரிதும்பாதிக்கப்படும்.
சொல்லப்போனால், கிறிஸ்துவின் நற்செய்திதான் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளுக்குப் பணத்தைக் கொட்டும் திருட்டு வியாபாரிகளிடமிருந்து படிப்பறியாதோரைக் காப்பாற்றி, அவர்களது கண்களைத் திறந்துவிடுகிறது.
விண்ணகத்தில் வீற்றிருக்கும் கடவுள் கிறிஸ்தவத்திற்கு எதிரான தலைவர்களைப் பார்த்துச்சிரிக்கிறார்.
ஏனெனில், அவர்கள் தோல்வியடைவதுதிண்ணம். பைபிளிலுள்ள திருப்பாடல்கள் நூலின் இரண்டாம் அத்தியாயத்தை வாசித்து அறிவடையும்படி நான் அவர்களை அழைக்கிறேன்.
தமிழ்த் திருச்சபை இதுவரை கண்டிராத ஆன்மீக மறுமலர்ச்சிக்கு இந்தத் தடைச்சட்டம் வழிவகுக்கும் என்று நான் முன்னறிவிக்கிறேன்.
இவ்விதமான தடுப்புச் சட்டத்தை நமது அரசு அமுலாக்க ஆண்டவர் அதை அனுமதித்த காரணம் தோல்வியடையாதிருக்க, எல்லாக் கிறிஸ்தவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய சில நடைமுறை ஆலோசனைகளை இங்கு தருகிறேன்.
1. மிஷனரிப்பணிக்காகவும் நற்செய்தியறிவிப் பிற்காகவும் ஜெபிப்பதே நமது பட்டியலில் முதலிடம்பெறட்டும்.
முதல் நூற்றாண்டுப் பிரசங்கிமார் பயமுறுத்தப்பட்டபோது, அவர்கள் செய்த முதல் காரியம் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவராகிய கடவுளுக்கு முன்னால் முழங்கால்களை மடக்கியதே (அப் 4:23-30).
இந்த ஜெபம் மனனம் செய்ய ஏற்றது. இந்த ஜெபத்தைக் கனப்படுத்திய தேவன் அந்த விசுவாசிகளைத் தூயாவியானவர் அருளும் தைரியத்தினால் நிரப்பினார் (வச 31).
நமது ஊழியரும் மக்களும் தலை வலிக்கும் வயிற்று வலிக்குமே ஜெபம்பண்ணிக் காலங்கடத்திவிட்டனர்.
நற்செய்திப் பிரகடனம் மற்றும் மக்களின் ஆன்மீக இரட்சிப்பு ஆகியவையே நமது ஜெபத்தில் முதலிடம் பெறட்டும் (1 தீமோ 2:1-7).
2. திருச்சபை முழுவதும் ஆத்தும ஆதாயப்பணியிலும் நற்செய்தியறிவிப்பிலும் ஈடுபாடுகொள்ளச் செய்யவேண்டும்.
மக்களை எவ்விதம் கிறிஸ்துவிடம் வழிநடத்தவேண்டுமென்று ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் கற்றுக்கொடுங்கள். பொதுக்கூட்டங்களைவிடத் தனித்தனியே மக்களைச் சந்திப்பதே கூடுதல் பயனளிக்கும்.
சுகமளிப்பு கூட்டங்களைவிட அதிகமாக மிஷனரிக் கன்வென்ஷன்களும் ஆத்துமாதாயப் பயிற்சி வகுப்புகளும் நடத்துங்கள்.
தமிழகத்தின் இறுதி அறுவடையில் கடைசி மணி நேரமாய் இது இருக்கலாமே!
மாதத்திற்கு ஒருமுறையாவது ஞாயிறு ஆராதனையின் பிரசங்கத்தை ஒரு முன்னணி மிஷனரி அல்லது மிஷனரி இயக்கத் தலைவருக்குக் கொடுங்கள்.
சபையின் உறுப்பினர் ஒவ்வொருவரும் மிஷனரித் தரிசனத்தைப் பெற்றுக்கொள்ளட்டும்.
3. பொதுக்கூட்டங்களிலும், வானொலியிலும், தொலைக்காட்சியிலும் கிறிஸ்தவர்களுக்கே பேசிக் கொண்டிராதீர்கள்.
நற்செய்திமயமாக்கப்பட்டவர்களையே நற்செய்திமயமாக்குவது, ஆறுதல்படுத்தப் பட்டவர்களையே ஆறுதல்படுத்துவது, ஆசீர்வதிக் கப்பட்டவர்களையே ஆசீர்வதிப்பது, ஆனால் கவனியாது விடப்பட்டோரை இன்னும் கவனியாமல் விடுவது என்பதே தமிழ்த் திருச்சபையின் பாவம்.
இந்து மார்க்கத்திலிருந்து மனந்திரும்பிவந்த பிரசங்கிமாராவது தங்கள் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் பெரும்பான்மையினரான இந்துக்களுக்குச் செய்தி தரவேண்டும்.
தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் ஆறு சதவீதம்தான். ஆனால் காணிக்கைகளில் 90 சதவீதத்திற்குமேல் இந்தச் சிறிய கூட்டத்திற்கென்றே செலவழிக்கப்படுகிறதென்று உங்களுக்குத் தெரியுமா? அநியாயத்திலும் அநியாயம்!
4. இளைஞர் நடுவில் ஊழியத்தைப் பெருக்குங்கள். கல்லூரி மாணவரும் மற்ற வாலிபர் நங்கையரும் பாலினப் பாவங்கள், போதை மருந்துகள் மற்றும் ஆபாசத் திரைப்படங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.
அரசியல்வாதிகளின் மாய்மாலங்களையும் திருட்டுத்தனங்களையும் பார்த்து அவர்கள் சலித்துவிட்டனர். இளைஞரின் பிரச்னைகளைக் குறித்துத் தெளிவாய்ப் பேசத் திருச்சபை தவறிவிட்டது.
மக்கட்தொகையில் 50 சதவீதத்திற்குமேல் 20 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள்தான் என்றிருக்கும்போது ஒவ்வொரு மாதமும் 4 அல்லது 5 ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்றை நமது சபைகளில் வாலிபர் ஞாயிறு என்று ஏன் ஆசரிக்கக்கூடாது?
ஏதோ ஞாயிறு ஆராதனை முடிந்ததும் வாலிபர் கூட்டம் என்று பெயரளவில் நடத்தும் பழக்கம்தான் இருக்கும்வரை நமது வாலிபரையும் நங்கையரையும் லூசிபருக்குப் பலிகொடுத்துக் கொண்டேதான் இருப்போம்.
வயது முதிர்ந்த யோவான்கூட தனது சிறிய நிருபத்தில் எத்தனை முறை வாலிபரைக் குறிப்பிட்டு எழுதினான் பாருங்கள் (உ-ம் 1 யோ 2:12-14).
கடவுளின் இறுதிக்கால அருள்மாரியில் முதல்வரிசையில் நிற்கவேண்டியது யார்?- "குமாரர்... குமாரத்திகள்... வாலிபர்" (அப் 2:17).
5. நற்செய்திப் பிரசங்கங்களில் தீவிரவாதிகளின் மொழிநடையை கற்றுங்கள். "கிறிஸ்துவுக்கு இந்தியா" என்று கத்தாதீர்கள்;
"இந்தியாவிற்குக்கிறிஸ்து" என்று கூறுங்கள். உலகைக் கிறிஸ்தவமயமாக்க அல்ல, நற்செய்திமயமாக்கவே கிறிஸ்து நம்மைப் பணித்துள்ளார்.
நற்செய்திக் கூட்டங்களுக்குப் "படை முயற்சி" போன்ற பதங்களையெல்லாம் பயன்படுத்தாதீர்கள். மற்ற மதங்களைத்தாக்காதீர்கள்.
இந்துக் கோவில்கள் மற்றும் மசூதிகளுக்கு முன்னர் நின்றுகொண்டு பிரசங்கியாதீர்கள். கிறிஸ்தவரல்லாதவரின் பண்டிகைகள், திருவிழாக்களில் நற்செய்திப் பிரசுரங்களை வினியோகிக்காதீர்கள்.
மற்றவர்களின் மனவுணர்வுகளை மதிக்கவேண்டும். இவ்வாண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவிலுள்ள பிரபலப் பிரசங்கியார் ஜெரி ஃபால்வெல் என்பவர் முகமது நபிக்கு விரோதமாகச் சில தூஷண வார்த்தைகளைச் சொல்லிவிட்டதால் மகாராஷ்டிர மாநிலத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டு ஒன்பதுபேர் கொல்லப்பட்டனர்.
பின்னர் அவர் பகிரங்கமாய் மன்னிப்புக் கோரி, இனி மற்ற மதங்கள், நம்பிக்கைகள், மற்றும் சபைப்பிரிவுகளை மதித்து நடப்பேன் என அறிக்கையிட்டுள்ளார்.
காடுகளைக் கொளுத்திவிடும் நெருப்பை மூட்டிவிடாதபடி, பிரசங்கிமாரே, கவனமாயிருங்கள்!
இயேசுவானவர் "தேவ கிருபையில்" மட்டுமல்ல, "மனிதர்தயவிலும்" வளர்ந்துவந்தார் (லூக் 2:52). ஆதித்திருச்சபை தினமும் தீவிரமாய் வளர்ந்து பெருகியதின் இரகசியமும் அதுவே (அப் 2:47).
சகிப்புத் தன்மை என்பது ஒரு கிறிஸ்தவப் பண்பாகும்; அது ஒத்துப்போதல் அல்ல. அரசன் சாலமோனின் ஞானத்தில் முக்கியமாய்க் கவனிக்கவேண்டியது என்னவெனில் அவன் 40 ஆண்டுகள் யுத்தமே இல்லாமல் அரசாண்டான்.
சவுலுக்கும் தாவீதுக்கும் இருந்த அதே எதிரிகள் அவனுக்கும் இருந்தார்கள்; அவனோ அவர்களோடு சமாதானமாய் நடந்து கொண்டான்.
அவர்கள் அவனை மதித்தார்கள், ஆதரித்தார்கள்; அது அவனது புகழுக்குக் காரணமாயிற்று. எனவேதான், தாவீதை அல்ல, சாலமோனையே கடவுள் தமக்கு ஆலயம் கட்டத் தெரிந்து கொண்டார் (1 நாளா 28:2,3,6).
6. கூடியமட்டும் வெளிநாட்டுப் பிரசங்கிமாரைப் பொதுக்கூட்டங்களில் பயன்படுத்தாதீர்கள். ஏற்கனவே இந்தியாவில் கிறிஸ்தவம் வெள்ளையரின் மதம் எனக் கருதப்படுகிறது.
கலாச்சாரக் கண்ணோட்டத்தோடு பிரசங்கிக்கக்கூடிய சுவிசேஷகர்கள் போதுமான பேர் இந்தியாவிலேயே இல்லையோ?
நேரடி நற்செய்தியறிவுப்புகளில் வெளி நாட்டினரை ஈடுபடுத்தாதிருப்பது நடைமுறை ஞானம். அவர்கள் நமது இறையியல் கல்லூரிகளிலும் கருத்தரங்குகளிலும் நமக்குப் பயிற்சியளித்து உதவலாம்.
இந்தியக் கிறிஸ்தவம், குறிப்பாக தமிழகத்தில், மேலை நாட்டுக் கலாச்சாரம் நிறைந்ததாயிருக்கிறது.
சுவிசேஷத்தை மூடியிருந்த யூத ஆடையை அப்போஸ்தலன் பவுல் கழற்றியெறிந்தான்.
அதை மூடியிருந்த லத்தீன் ஆடையை மார்ட்டின் லூத்தர் கழற்றியெறிந்தார்.
அதை மூடியிருக்கும் மேற்கத்திய ஆடையைக் கழற்றியெறிய வேண்டியது நமது பொறுப்பு.
தமிழ்க் கிறிஸ்தவர்கள் ஆங்கில வருடப் பிறப்பை அவ்வளவு குதூகலமாய்க் கொண்டாடிவிட்டு, ஏன் தமிழ் வருடப் பிறப்பைக் கண்டுகொள்வதேயில்லை என்று நான் அடிக்கடி வியப்பதுண்டு!
மட்டுமல்ல, தமிழ்க் கிறிஸ்தவர்களாகிய நாம் பேசும் தமிழ் கிறிஸ்தவரல்லாத தமிழர்களுக்குக் கிரேக்கு, லத்தீன்தான்!
புதிய ஏற்பாட்டைக் கடவுள் யூதரது மொழியாகிய எபிரெய மொழியிலல்ல, சந்தைவெளிகளில் பேசப்படும் கிரேக்க மொழியிலேயே ஏன் எழுதச் செய்தாரென்று நாம் இன்னும் உணரவில்லை.
கிறிஸ்தவரல்லாதவருக்குப் பிரசங்கிக்கும் அல்லது எழுதும்போதாவது புதிய, எளிய மொழியாக்கங்களைப் பயன்படுத்துங்கள்.
"நீங்கள் பேசும் வார்த்தைகள் தெளிவாயிராவிடில், நீங்கள் பேசியது என்னவென்று எவ்வாறு தெரிந்து கொள்ளமுடியும்? உங்கள் பேச்சு காற்றோடு காற்றாய்ப் போய்விடுகிறதே!" (1 கொரி 14:9).
7. தமிழகத் திருச்சபை பிரிந்து, உடைந்துபோய்க் கிடக்கிறது. தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கும் அரசாட்சி நிலைநிற்காது என்றார் இயேசு.
சாத்தான் பிரிந்திருக்கவில்லையே. அவனது ஊழியரும் பிரதிநிதிகளும் எவ்வளவு ஒற்றுமையாய்ச் செயல்படுகின்றனர்!
ஐயகோ, நமக்கு வெட்கம்! நம்மை விட்டே "ஜாதிப் பிசாசு" இன்னும் ஓடாமலிருக்கும்போது, உயர்குல இந்துக்களின் தீண்டாமையைக் கண்டனம் செய்ய நமக்கு என்ன அருகதை? (கொலோ 3:9-11).
மற்ற மந்தைகளிலிருந்து ஆடு திருடுவதை நிறுத்துங்கள். காரியமில்லாத காரியங்களுக்காய்ச் சண்டைபோடுவதற்கு முடிவுகட்டுங்கள். சபைகளின் நீதிமன்ற வழக்குகளை வாபஸ் பெறுங்கள் (1 கொரி 6:1-8).
மற்ற சபைகளையும் ஊழியர்களையும் வார்த்தையிலும் எழுத்திலும் தாக்காதீர்கள்.
"அலெக்சாண்டர் போன்ற மனிதரைக் குறித்துப் பவுல் வெளிப்படையாய் மக்களை எச்சரிக்கவில்லையா?" என்று நாம் வாதாடுகிறோம் (2 தீமோ 4:14).
இது ஒரு தனி நபருக்கு எழுதப்பட்ட தனிக் கடிதம். திருச்சபைகளுக்கு எழுதப்பட்ட நிருபங்கள்கூடத் தனிச் சுற்றுக்கு மட்டுமே அனுப்பப்பட்டன.
நமது பத்திரிகைகளோ இந்தியச் செய்தித்தாள்கள் பதிவாளரிடம் பதிவுபெற்று, அவைகளின் பிரதிகள் கிறிஸ்தவத்திற்கெதிரான பலருடைய கரங்களில் விழுகின்றன.
நமது பத்திரிகைகளிலேயே நமது உடன் பிரசங்கிமாரையும் ஊழியங்களையும் தாக்குவது என்னே மடமை! இதுதான் காட்டிக்கொடுத்தல் என்பது!
சவுல் பின்வாங்கிப்போனவன்தான். அவனது மரணத்தைக்கூட பிரகடனப்படுத்திப் பிறமார்க்கத் தாரை மகிழச்செய்யாதீர்கள் என்ற தாவீதல்லவோ ஆண்டவருடைய இருதயத்திற்கு ஏற்றவன்? (2 சாமு 1:17-20).
8. அரசு அலுவலகங்களில் உயர் பதவியில் அமர்த்துவதற்காகக் கடவுள் யோசேப்புகளையும் தானியேல்களையும் தேடிக்கொண்டிருக்கிறார்.
சில ஆண்டுகளுக்குமுன் தமிழக அரசின் தலைமைச் செயலகத்திலும், மாவட்ட ஆட்சியகங்களிலும் கிறிஸ்தவ ஐஹளு அதிகாரிகள் பலர் இருந்தனர்.
இப்பொழுதோ கிறிஸ்தவ ஐஹளு அதிகாரிகளைப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. கிறிஸ்தவ வாலிபருக்கு கம்ப்யூட்டரிலும் கடல்கடந்து செல்வதிலும் தான் பைத்தியம்.
வாலிபரே, நங்கையரே, கடினமாய் உழைத்து அரசின் நிர்வாகத்தில் உயர்நிலை அதிகாரிகளாய் வர முயற்சியுங்கள்.
நாம்தானே மண்ணுக்கு உப்பு? உலகிற்கு வெளிச்சம்? உப்பும் வெளிச்சமும் இல்லையேல் சமுதாயம் நாறி நாசமாய்ப்போகுமே! பெற்றோரும், போதகரும், பிரசங்கிமாரும் நமது வாலிபர் இச்சவாலைச் சந்திக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும்.
அரசு அலுவலகங்களில் கிறிஸ்தவ அதிகாரிகள் இருந்தால் தீர்மானங்கள் எடுக்கப்படும்போது நன்மையான பாதிப்பை ஏற்படுத்தலாம்.
திரு. ளு. ஞ. அம்புரோஸ், திரு. டேனியல் குணாநிதி, திரு. வில்பிரட் டேவிடார் மற்றும் திரு. ஜெகதீஷ் பாண்டியன் போன்ற தமிழ்க் கிறிஸ்தவ ஐஹளு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியகங்களிலும், இயக்குனரகங்களிலும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் ஏற்படுத்தியுள்ள நல்ல பாதிப்பை யார் மறக்க முடிகிறது?
9. நாம் நமது நற்செய்திப் பணி முயற்சிகளைப் பெருக்குவோம்; ஆனால் அதை ஞானமாய்ச் செய்ய வேண்டும். நற்செய்தியறிவிப்பை யாரும் தடை செய்யவில்லை.
அவ்விதம் ஒரு சட்டம் வருமானால், நாம் மனிதருக்கு அல்ல கடவுளுக்கே கீழ்ப்படிய வேண்டும் (அப் 4:19,20).
இப்பொழுது வந்துள்ள தடுப்புச் சட்டத்தின்படி, கிறிஸ்தவரல்லாதவருக்குத் திருமுழுக்கு கொடுக்குமுன் சட்டபூர்வமாகச் சில காரியங்கள் செய்யப்படவேண்டும். அவற்றைச் செய்துவிடலாமே.
போலி மதமாற்றங்களை நிறுத்துவதற்கென்றே கடவுள் நியமித்ததொன்றாய் இச்சட்டம் இருக்கலாமே, யாருக்குத் தெரியும்?
ஏற்கனவே திருச்சபையில் மறுபடியும் பிறந்தவர்களைவிடப் பெயர்க் கிறிஸ்தவர்களே அதிகம்.
அவசரப்பட்டு எதையும் செய்துவிட்டுப் பின்னர் எல்லாரையும் பிரச்னைக்குள்ளாக்கி விடாதிருக்கப் பிரசங்கிமாரை நான் கேட்டுக்கொள்ளுகிறேன். அறிவில்லாத ஆர்வம் ஆபத்து!
10. கடந்த முப்பதாண்டுகளில் மற்ற மாநிலக் கிறிஸ்தவர்களைவிட அதிகமாய் வட இந்தியாவிற்கு மிஷனரிகளை அனுப்பியதும், மிஷனரிப் பணிக்குப் பணத்தை வாரி வழங்கியதும் தமிழ்க் கிறிஸ்தவர்கள்தான்.
"கடவுள் பெயரால் நீங்கள் காட்டிய அன்பையும் உழைப்iயும் மறந்துவிடுவதற்கு அவர் நீதியற்றவர் அல்ல" (எபி 6:10).
ஆனாலும், சமீப காலத்தில் தமிழ்க் கிறிஸ்தவர்கள் புறப்பட்டுச் செல்வதற்குப் பதிலாக ஜெபிப்பதையும் கொடுப்பதையுமே தெரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர்.
சமாரியாவிற்கும் தொலைவிடங்களுக்கும் பரந்து செல்லாது ஆதிக் கிறிஸ்தவர்கள் எருசலேமையே வட்டமிட்டுக்கொண்டிருந்தபோது கடவுள் அவர்கள் நடுவில் கடுமையான உபத்திரவத்தை அனுப்பினார்.
விளைவு?-"அனைவரும் யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறமெங்கும் சிதறடிக்கப்பட்டுப் போயினர்... சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர்" (அப் 8:1,4).
சென்னைதான் இந்தியாவின் எருசலேம். தமிழ்க் கிறிஸ்தவர்களையும் பிரசங்கிமாரையும் வட இந்தியாவெங்கும் சிதறியடிக்கும்படியே கடவுள் தமிழக அரசை இத் தடுப்புச்சட்டம் கொண்டுவரத் தூண்டிவிட்டிருப்பாரானால், அது வரவேற்கப்படவேண்டியதே!
ஞாயிறு, 25 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக