கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற காலம் மலையேறிப் போய்விட்டது.
முன்பு விவாகரத்து நடைபெறுவதுதான் மிகவும் அரிதானதும் கடினமானதாகவும் இருந்தது. இன்று நிலைமை தலைகீழ்.
விவாகம் நடைபெறுவது கடினமானதாகி விவாக ரத்து நடைபெறுவது எளிதானதாகவும் அடிக்கடி நடைபெறுகிறதாகவும் ஆகிவிட்டது.
இது ஏன்? தவிர்க்கப் பட என்ன செய்ய வேண்டும்?
இன்றைய நாளில் குடும்பங்களில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளையும் பெரியதாக்கி கடைசியில் விவாகரத்து என்ற நிலைக்கு போய் விடும் குடும்பங்கள் ஏராளமாய் உள்ளது.
முந்தைய நாட்களில் புருஷன் கொடுமை படுத்தினாலும் அடித்து துன்பப்படுத்தினாலும் சித்ரவதை செய்தாலும் குடும்பத்தை நினைத்து பிள்ளைகளை நினைத்து அப்படியே கண்ணீரோடு எப்படியோ குடும்பத்தை கரைசேர்க்கும் பெண்களை குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் அதையும் மீறி இக்காரணங்களுக்காக ஒரு பெண் கோர்ட்டிற்கு வந்து விட்டால், கணவன் எவ்வளவு கொடுமை படுததியிருந்தால் இப்பெண் இப்படி வீட்டை விட்டு துணிந்து கோர்ட்டிற்கு வந்திருப்பாள் என்று பரிதாபப்படுவார்களள்.
ஆனால் இன்றைய நிலை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இன்றைய விவாகரத்திற்கான காரணங்களை ஆராய்து ஒரு அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “
இந்நாட்களில் விவாகரத்து செய்வோரில் பெரும்பாண்மையோர் தங்களுடைய விருப்பு வெறுப்பு சார்ந்த, உணர்ச்சிகள் சார்ந்த விஷயத்திற்காகவே விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு வருகின்றனர”
நம்முடைய நாட்டில் 1960ம் ஆண்டுகளில் விவாகரத்து கோரி வரும் வழக்குகளின் எண்ணிக்கை சுமார் ஒன்று அல்லது இரண்டாகவே இருந்தது
ஆனால் 1980ம் ஆண்டுகளில் அவ்வெண்ணிக்கை 100 முதல் 200 ஆக உயர்ந்து 1990ல் 1000ம் வழக்குகளாக உயர்ந்து இன்று சராசரியாக சுமார் 9000 முதல் 10000 வழக்குகள் வரை பதிவாகி வருகிறது.
சரி உலகத்தை விடுங்கள் கிறிஸ்தவர்களிடையும் விவாகரத்து அதிகரித்துள்ளதே என்று கேட்டால் அதுவும் உண்மைதான் என்று சில புள்ளி விவரங்கள் கூறுகிறது.
அமெரிக்காவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தில் மறுபடியும் பிறந்த அனுபவம் பெற்ற கிறிஸ்தவர்களிடையே (born again chrisitan) சுமார் 35 சதவீதம் திருமணம் விவகாரத்தில் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றவர்களும் சிறு சிறு காரணங்களுக்காக விவாகரத்து கோருவது மிகவும் வருந்தத்தக்கது.
தேவபிள்ளைகள் திருமணத்தைப் பற்றி சில காரியங்களை அறிந்து கொள்வது அவசியமாக இருக்கிறது
திருமணம் என்பது ஒரு உடன்படிக்கை அதில் கணவனும் மனைவியும் மட்டுமல்ல தேவனும் ஒரு அங்கத்தினர் என்பதை மறந்து போகக் கூடாது.
மனைவியை மனமடிவடைய செய்பவன், கனவீனப்படுத்துகிறவன், மனைவிக்குத் துரோகம் செய்கிறவன, மனைவிக்கு மட்டுமல்ல
அதையே தேவனுக்கும் செய்கிறான் என்பதை மறந்து போகக் கூடாது. அதைப்போலவே கணவனுக்கு செய்கிறவள் தேவனுக்கு விரோதமாகவே செய்கிறாள்.
எனவே திருமணத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்காக திருமண உறவையே முறிப்பது என்பது தன் பிள்ளை சிறு தவறு செய்து விட்டான் என்பதற்காக அவனையே கொன்று பின்னாளில் கண்ணீர் விட்ட மதிகெட்ட தகப்பனின் செயல் போன்றது.
புது மோட்டார் பைக் வாங்கினாலே அது குறைந்தது 2000 கிலோ மீட்டர் வரையாவது ஓடினால்தான் இன்ஜீன் செட்டாகி நல்ல மைலேஜ் தரும் என்று சொல்லும் போது வேறு வேறு இடத்தில் சூழ்நிலையில் பழக்க வழக்கத்தில் பல ஆண்டுகளாக பழகிய இருவர் திருமணத்தின் மூலம் கணவன் மனைவியாக இணைந்து குடும்பமாய் வாழும் போது ஆரம்பத்தில் புரிந்து கொள்ளுதலில் சில பிரச்சனைகள் வருவது இயற்கையே.
அதை முதலாவது ஏற்றுக் கொண்டு ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து குடும்ப வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வது அவசியமாக இருக்கிறது.
இதில் நான் என் நிலையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று இருவரும் இறுமாப்பாய் இருக்கும் போது அது பிரச்சனையை கொண்டு வரும்.
எனவே குடும்பம் என்பது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போட்டிக்களம் என எண்ணாமல் அது இருவரும் சேர்ந்து உலகை மேற்கொள்ளும் ஒரு பாதுகாப்பு பெட்டகம் என எண்ணி இருவரும் இணைந்து செயல்பட வேண்டும்
எப்படி வேதாகமம் கணவனும் மனைவியும் ஒரே சரிரம் என்று சொல்கிறதோ அப்படியே கணவனும் மனைவியும் ஒரே ஆவியையும் உடையவராக இருக்க வேண்டும்.
தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் முழுஉலகத்தின் சபையிலும் ஒரு மனதை கொண்டு வர போதுமானவராயிருக்கும் போது ஏன் கணவன் மனைவிக்குள் ஒரு மனதை கொண்டு வர முடியாது.
கண்டிப்பாக முடியும் எப்போது என்றால் நீங்கள் இருவரும் முழு மனதோடு தேவ ஆலோசனைக்கு கீழ்படிய தயாராக இருக்கும் போது.
நான் ஏற்கனவே சொன்னது போல திருமணத்தில் கணவன் மனைவி மட்டும் அல்ல தேவனும் ஒரு அங்கத்தினர்
ஆம் வேதம் சொல்வது போல முப்புரி நூல் அராது அல்லவா. கணவன் மனைவிக்கு ஒரு காரியத்தில் கருத்து வேற்றுமை என்று வைத்துக் கொள்வோம்
ஒருவர் கருத்தை ஒருவர் ஏற்க மறுக்கும் போது ஏன் அந்த காரியத்தை தேவனுடைய சமுகத்திற்கு கொண்டுவரக்கூடாது.
இதை நடைமுறைப்படுத்தி பழகினால் குடும்பத்தில் சண்டை ஓய்வதோடு நல்ல வழிநடத்துதலும் தேவனிடத்திலிருந்து கிடைக்கும்.
இப்படி ஒப்புக் கொடுத்தால் ஆவியானவர் உடனே எங்களோடு பேசுவாரா என்று கேட்கலாம். நம்முடைய தேவன் பேசுகிற தேவன் தானே
மற்றவர்கள் மூலம் பேசலாம், வேதவசனத்தின் மூலம் பேசலாம், இன்று எந்த டிவியிலும் கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் மூலம் பேசலாம்.
இம்முறையில் நீங்கள் பழகினால் முதலாவது உங்களுக்கு கிடைக்கும் நன்மையென்ன வென்றால் நீங்கள் பிரச்சனையை உங்கள் இருவரிடமிருந்து மூன்றாவது ஒருவரிடம் ஒப்புக் கொடுப்பதால் உங்களுக்குள் தற்காலிகமாக பிரச்சனை முடிவடைகிறது.
நீங்கள் ஒப்படைப்பவர் சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதால் உங்களுக்கு கிடைக்கும் தீர்வு ஒரு நிரந்தர தீர்வாக அமையும்.
ஆனால் தேவஆலோசனையை பாதக சாகததை எண்ணாமல், தங்கள் விருப்பு வெறுப்பை எண்ணாமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கடைசியாக உங்கள் குறைகளை ஏற்றுக் கொண்டு எதிர்பாலரின் குறைகளைமன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
தூங்கச் செல்வதற்கு முன் ஒப்புரவாகிச் செல்ல வேண்டும் என்ற கொள்கையை கடைபிடிப்பீர்கள் என்றால் எந்தப் பிரச்சனை வந்தாலும் பிரச்சனையில்லை உங்களுக்கு
சனி, 10 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக