ஞாயிறு, 25 ஜனவரி, 2009

தேவாலயத்தில் மோதல்

தேவாலய திறப்பு விழாவில் தலித் கிறிஸ்தவர்களை இழிவுபடுத்தியதாக உயர் ஜாதி கிறிஸ்தவர்கள் 22 பேரை, நேற்று(31.07.2006)போலீசார் கைது செய்தனர்.

மதுராந்தகம் அடுத்த தச்சூர் கிராமத்தில் 1842ம் ஆண்டு புனித ஆரோக்கிய மாதா தேவாலயம் கூரை கொட்டகையில் ஆரம்பிக்கப்பட்டது.

படிப்படியாக வளர்ந்து கடந்த 1922ம் ஆண்டு தேவாலயத்திற்கு சொந்த கட்டடம் கட்டப்பட்டது.

தச்சூரில் தெலுங்கு ரெட்டியார் சமூக கிறிஸ்தவர்கள் தெலுங்கிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலித் கிறிஸ்தவர்கள் தமிழிலும் வழிபாடு நடத்தி வந்தனர்.

தேவாலயத்தில் தெலுங்கில்தான் பிரசங்கம் செய்ய வேண்டுமென்று ரெட்டியார் சமூகத்தினர் கோரினர். தலித்துகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழில் தான் பிரசங்கம் நடக்க வேண்டுமென்றனர்.

இதனால், இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டு ஜாதி மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது.

இதை தடுக்க, தேவாலயத்தை வருவாய்த்துறை நிர்வாகம் கடந்த 95ம் ஆண்டு மூட உத்தரவிட்டது.

தேவாலயத்தை திறக்கக்கோரி ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த லாரன்ஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் தேவாலயத்தை திறந்து வழிபட கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டர் பிரதீப் யாதவ், போலீஸ் எஸ்.பி., அமல்ராஜ், மதுராந்தகம் ஆர்.டி.ஓ., லட்சுமி ஆகியோர் முன்னிலையில் தேவாலயம் நேற்று திறக்கப்பட்டது.

செங்கை மறை மாவட்ட பிஷப் நீதிநாதன் தலைமையில் தலித் கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது ரெட்டியார் சமூகத்தினர் அங்கு வந்து, தெலுங்கில்தான் வழிபட வேண்டும் என்று கோஷமிட்டனர்.

அதற்கு நீதிநாதன் தெலுங்கில் வழிபடுவது குறித்து சென்னை அலுவலகத்தில் கேட்டு தெரிவிக்கிறேன் என்றார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் தெலுங்கில்தான் வழிபடவேண்டுமென்று ஒரு பிரிவினர் கோஷமிட்டனர். இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

அப்போது சிலர், தலித் கிறிஸ்தவர்களை ஜாதி பெயர் சொல்லி திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் நந்தகுமார், செய்யூர் போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து 22 பேரை கைது செய்தனர்.

தேவாலயம் திறப்பு விழாவின் போது மோதல் ஏற்படாமலிருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தச்சூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை: