ஞாயிறு, 11 ஜனவரி, 2009

பிதாவே, இவர்களுக்கு மன்னியும்

இந்த அதிகாலை நேரத்தில் இதைக் குறித்து எழுத ஏவப்பட்டதால் எழுதுகிறேன்.

தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்கிற அனைவருக்கும் இது பரீட்சையமான ஒரு வசனம்.

கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் கிறிஸ்தவர்கள். அப்படியென்றால் நாமும் கிறிஸ்துவைப் பின்பற்றி நம் எதிரிகளுக்காக இதையே கூறியிருக்க வேண்டும்.

ஆனால்....

என்ன நடக்கிறது? நான் எனது எதிரிகளை மன்கிக்கிறேனா? யார் நமது எதிரிகள் என்பதையே கிறிஸ்தவர்களாகிய நாம் அறியாமல் போகிறோம்.

இயேசு உலக மக்களுக்கு நற்செய்தி கூற வந்தார். அவரது நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத தமது ஜனங்கள் அவரைத் தீர்த்துக்கட்ட நினைத்தார்கள்.

தமது உயிரையே வாங்க நினைத்த எதிரிகளுக்காக தமது பிதாவினிடத்தில் இப்படி மன்றாடுகிறார்!

இதில் 3 தரப்பு சம்பந்தப்பட்டுள்ளது. முதல் தரப்பு எதிரிகளிடத்தில் இருந்து சொல்லொன்னா வேதனையை அனுபவித்த இயேசு.

மற்றொன்று மனிதர்களின் செயல்களை நியாயந் தீர்த்து தண்டனை வழங்கும் அதிகாரம் பெற்ற பிதா.

மற்றொன்று இயேசுவின் உயிரை குடிக்க நினைக்கும் அவரின் சொந்த ஜனங்கள்.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு நான் ஒரு குழு நேர்முகச் சந்திப்புக்குச் சென்றிருந்தேன். அச்சந்திப்பை நடத்திய அதிகாரி அனைவருக்கும் ஒரு பொதுவான கேள்வியை முன்வைத்தார்.

தன் மனைவியை அடித்துத் துன்பப்படுத்தும் கணவன்மார்களின் பிரச்சினைகளை எப்படிக் கையாள்வது என்பதுதான் அது.

கிறிஸ்துவை அறியாத பல பெண்கள் மிகவும் சத்தமாகப் பதில் சொன்னார்கள். அப்படிப்பட்ட கணவன்மாரைப் பதிலுக்கு அடித்துத் துன்பப்படுத்த வேண்டும் என்று....

மனித சிந்தனைக்கு இப்படிப்பட்ட தீர்ப்புதான் எட்டும் என்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. கிறிஸ்துவை அறியாதவர்கள் இப்படித்தான் சிந்திப்பார்கள்.

ஆனால், கிறிஸ்துவைப் பின்பற்றுகிறோம் என்று கூறிக்கொள்கிறவர்களும் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமா?

உடனே பல வாதங்கள் வரும்.

1. இயேசு தெய்வத் தன்மை நிறைந்தவர். அதனால் அவர் அப்படிச் சொன்னார். நாமோ மனிதர்கள், எப்படி அவ்வாறு செய்ய முடியும்?

2. அது எல்லாம் அந்தக் காலம், இப்போது இதெல்லாம் பொறுந்தாது.

3. அடிக்கு அடி, உதைக்கு உதை, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், உயிருக்கு உயிர், இரத்தத்திற்கு இரத்தம்.... இதுதான் நியாயமான தீர்ப்பு.

உங்கள் கணவன்மார் உங்களை அடித்துத் துன்பப்படுத்துகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். கிறிஸ்தவர்களாகிய நீங்கள் என்ன செய்வீர்கள்? திரும்ப அடித்துச் சண்டை செய்வீர்களா?

உங்கள் அண்ணன், தம்பி, அப்பாவிடம் சொல்லி இந்தக் கொடுமைக்கு நியாயம் கேட்பீர்களா? பஞ்சாயத்தைக் கூட்டுவீர்களா?

காவல் துறைக்குப் புகார் செய்வீர்களா? நீதிமன்றம் செல்வீர்களா? சமைத்துப் போடாமல் புறக்கணிப்பீர்களா?

கணவனின் இரவுப் பசியைத் தீர்க்காமல் காயப்போடுவீர்களா? கடுஞ்சொற்களால் திட்டித் தீர்ப்பீர்களா? அல்லது வேறு என்ன செய்வீர்கள்?

கிறிஸ்துவைப் உண்மையாகப் பின்பற்றுகிறவர்களாக இருந்தால், பிதாவினிடத்தில் அவருக்காக மன்றாடுவோம்.

உலகத்தைப் பின்பற்றுகிறவர்களாக இருந்தால், மேற்குறிப்பிட்ட பட்டியலில் ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ செய்வோம்.

நம்முடைய தேர்வே நாம் யார் என்று நியாயந் தீர்க்கிறது. அந்தத் துன்பமான நேரத்திலும் தன் கணவனுக்காக மன்றாடி அன்பு செலுத்துகிறவளே உண்மையான கிறிஸ்தவ ஸ்திரி.

மற்றவர்களெல்லோரும் உலக சிந்தையை இன்னும் விட்டுவிடாமல் வாழும் போலிக் கிறிஸ்தவர்கள்.

பல வருடங்களுக்கு முன்பு காந்தியின் சரித்திரத்தைப் படம் பிடித்துத் திறையில் அரங்கேற்றினார்கள்.

அதில் எனது மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்த காட்சி ஒன்று இருக்கிறது.

இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மதக் கலவரம் நடக்கிறது. ஒருவரை ஒருவர் மாறி மாறித் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை நிறுத்த காந்திகள் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அப்போது மனந்திருந்திய இஸ்லாமிய தீவிரவாதி ஒருவன் காந்தியின் முன் மண்டியிடுகிறான்.

பலி வாங்குவதற்காகத் தான் ஓர் இந்துவின் வீட்டில் நுழைந்து அங்கே தூங்கிக்கொண்டிருந்த ஒரு சிசுவின் கால்களைப் பிடித்துத் தூக்கி எடுத்து அதன் தலையைச் சுவரில் அடித்துக் கொன்றுவிட்டதாகக் கூறி அழுகிறான்.

தனக்கு விமோசனமே இல்லை என்கிறான்.

அவனுக்குக் காந்தி இவ்வாறு ஆறுதல் கூறுகிறார்.

உயிர்போகும் தருவாயில் இருக்கிற ஓர் இந்துக் குழந்தையை எடுத்து உன்னால் முடிந்த வசதிகளைச் செய்து கொடுத்து வளர்த்து விடு.

அக்குழந்தையை ஓர் இந்துவாகவே வளர்த்து விடு. இந்து சமயப் போதனைகளைக் கற்றுக் கொடு.

இந்து முறைப்படி வழிபாடு செய்யவிடு. இப்படி ஆறுதல் கூறுகிறார். அந்த உபதேசத்தைப் பெற்றுக் கொண்டு அந்தத் தீவிரவாதி புரப்பட்டுச் செல்கிறான்.

இயேசுவின் உபதேசத்தையே ஓர் இந்துவாகிய காந்தி, ஒரு தீவிரவாதியான முஸ்லிம் குடிமகனுக்கு எடுத்துக் கூறியிருக்கிறார்!

கிறிஸ்துவின் ஆடைகளைத் தரித்திருக்கிற நாமோ அவரின் உபதேசத்தைப் பின்பற்றத் தயாராய் இல்லை.

உடனே ஓர் எதிர் கேள்வியைக் கிறிஸ்தவப் பெண்கள் கேட்கக் கூடும்.

பெண்கள் அதேபோல் கணவனைத் துன்பப்படுத்தினால், அந்தக் கணவன் பிதாவினிடத்தில் இயேசுவைப் போல் மன்றாடுவானா? நியாயமான கேள்விதான்.

இதற்கும் ஒரே பதில்.... இப்படிப்பட்ட மனைவியிடம் சிக்கிக் கொண்டால் அந்தக் கணவன் அப்பெண்ணுக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபடாமல், பிதாவினிடத்தில் அவளுக்காக மன்றாடுகிறவனாகவே வாழ வேண்டும்.

நாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்டால் இதைத்தான் செய்ய வேண்டும்.

மனைவியைத் திரும்ப கைநீட்டி அடிப்பதோ, அவளின் தேவைகளைக் கவனியாமல் விடுவதோ, தன் தாய் தங்கையிடம் கூறி நியாயங் கேட்பதோ, நீதிமன்றம் செல்வதோ அல்லது வேறு எந்த எதிரான நடவடிக்கை எடுப்பதோ நமது கிறிஸ்தவ வாழ்க்கையைப் பிரதிபலிக்காது.

கணவன் மனைவி உறவில் தோன்றும் விரிசல்கள் மட்டும் கணக்கல்ல.

நமது அண்டை வீட்டாருக்காகவும், சக பணியிட ஊழியர்களுக்காகவும், முதலாளிக்காகவும், பணியாளர்களுக்காகவும், நம்மை வஞ்சிக்கும் பெருங்குடியினருக்காகவும் இப்படியே மன்றாட வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான எதிரிகள் நம்மைச் சந்திக்கிறார்கள். அவர்கள் நம்மை எப்படி எப்படியோ துன்பப்படுத்துகிறார்கள்.

உயிர் ஊசலாடுகிற இயேசுவே, எதிரிகளுக்காக மன்றாடும்போது, எறும்புக் கடியைப் போல் எதிரிகளின் வினைகளைச் சந்திக்கிற நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

அவர்களுக்காக மன்றாடவே கர்த்தர் நம்மை அழைக்கிறார்.

கருத்துகள் இல்லை: