ஒரு குழந்தை பிறந்தபின், அதனுடைய ஆளுமையை உருவாக்குகிற தெய்வீக மானிடப் பணிதான் மனிதனுக்கு அளிக்கப்பட்டிருக்கிற எல்லாப் பணிகளிலும் மிக நுண்மையானதும், சிரத்தை மிகுந்ததும் ஆகும்.
குழந்தையின் மேல் படுகிற ஒவ்வொரு ஒலியும், ஒவ்வொரு காட்சியும் அதின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் பங்கெடுக்கிறது.
கடவுளின் கையிலிருந்து இக்குழந்தையைப் பெற்றுக்கொண்டு, கடவுளை அறியவும் அன்பு செய்யவும் அதற்குக் கற்றுக்கொடுப்பது உங்கள் கடமையாகும்.
கிறிஸ்தவ வாழ்வுக்குத் தேவையான தகவல்களையும், வழிமுறைகளையும் குழந்தைக்குக் கற்றுக்கொடுங்கள். "இளைஞன் வாலிப நாட்களில் கற்ற நெறியைத் தன் முதுமையிலும் விடான்" (நீதி 22:6).
உங்களைப் பார்த்துதான் பிரார்த்திக்கவும், வேதம் வாசிக்கவும் உங்கள் குழந்தைகள் கற்றுக் கொள்ளும்.
அன்பிலும், இசைவிலும் வாழ்ந்து, ஒவ்வொருவரும் பிறர் நலன் நாடி, கூடியிருப்பதில் மகிழ்ந்து கொண்டாடும் குடும்பம் வாழும் இடமே ஒரு கிறிஸ்தவ இல்லமாகும்.
வேதமும், ஜெபமும், கூடித் திட்டமிடுதலும் இல்லாமல் இப்படியொரு இல்லத்தை எழுப்பவியலாது.
ஆகவே, குழந்தைகள் கிறிஸ்துவின் அன்பைக் கற்றுக் கொள்ளுமுன், தங்கள் குடும்பத்தில் அன்பைக்கண்டு பழகவேண்டும்.
விபரம் அறியும் வயதில், தங்கள் சுயாதீன மனதில். கிறிஸ்துவைத் தன் மீட்பராய் ஏற்றுக்கொண்டு, அவருக்குக் கீழ்ப்படியவும், அவரது உடலாகிய திருச்சபையின் உறுப்பினராய் அன்பின் சேவையில் ஈடுபடத் தீர்மானிக்க வேண்டுமாயின், அவர்கள் குழந்தைகளாய் இருக்கும்போதே அவர்கள் கிறிஸ்துவை அறியவும், அன்பு செய்யவும் தேவையான முயற்சி எடுத்து அதற்கென நாம் மன்றாடவும் வேண்டும்.
குழந்தைகள் தங்கள் வாழ்வில் மிகமுக்கியமான முதற்கட்டத்தில் அற்புதமான இறையுணர்வைக் கிரகிக்க முடியவில்லையென்றால், அவர்கள் வளர்ந்தபிறகு இறையுணர்வு மிகவும் மங்கியதாகவே காணப்படும்.
உங்கள் குழந்தைகளின் முன் கிறிஸ்தவ வாழ்வின் நற்சான்றாய் நீங்கள் நிற்கவேண்டும்.
தீமோத்தேயுவின் மங்கா விசுவாசம் பாராட்டப்பட்டதற்குக் காரணமே அவனது பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும், அவனது தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் அந்த விசுவாசம் நிலைத்திருந்ததுதான் (2 தீமோ 1:5).
வேதத்தையும், சிலுவையிலறையப்பட்ட வாழ்க்கையையும் பற்றிக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்த பின்னர், அவ்வெளிச்சத்துக்கு மாறாய் அவர்கள் நடப்பதற்கு நாமே காரணமாயிருந்தால், அவர்களை மனந்திரும்பவியலா கடினப் பாவிகளாய் மாற்றிய பழி நம் மேலேயே விழும்.
"ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விக்கிறான்; மதிகெட்ட மகனோ தன் தாய்க்குத் துன்பம் வருவிக்கிறான்" (நீதி 10:1).
"இன்று நான் உனக்குக் கற்பிக்கிற இந்த வார்த்தைகள் உன் இதயத்திலே பதியட்டும். நீ அவைகளை உன் புதல்வர்களுக்கு விவரித்துச் சொல்லவும், நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கும்போதும், வழியில் நடந்து போகும் போதும், தூங்கும் வேளையிலும், விழித்தெழுந்திருக்கையிலும் அவைகளைத் தியானிக்கவும் வேண்டும்" (உபா 6:6,7).
கிறிஸ்தவ இல்லமானது அன்பு ஆள்கிற, ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுகிற ஓர் இடமாகும். "பிரம்பால் அடிக்கத் தயங்குகிறவன் தன் பிள்ளையைப் பகைக்கிறான். அவனை நேசிக்கிறவனோ அவனைத் தண்டிக்கிறான்" (நீதி 13:24).
உங்கள் குழந்தைகள் கடவுளை நெருக்கமாய் அறிய மிகச் சிறந்த இடம் உங்கள் இல்லமே. கற்றுக் கொள்ளவும் மிகவும் தகுதியான இடமும் உங்கள் இல்லமே.
கிறிஸ்தவக் குடும்பத்தின் அடித்தளமே வேதப் புத்தகம்தான். வேதப்புத்தகத்திற்கு அந்த இடத்தை நாம் கொடுக்கவேண்டுமானால், அதனைச் சரியாய்க் கற்றுப் புரிந்திருக்க வேண்டும்.
நமது தினசரி வாழ்வும் அதனைச் சுற்றியே படரவேண்டும்.
ஒரு பிள்ளையின் ஆன்மீக வளர்ச்சியில் அது கடவுளை மூன்று விதமாய்க் கண்டுகொள்கிறது:
முதலில், வாழ்வின் ஆதாரமாய் விளங்கும் படைப்பாளராக. அடுத்து, அன்பும் ஐக்கியமும் நிறைந்த விண்ணகத் தந்தையாய்; மூன்றாவதாக, சரியான நடத்தையை அங்கீகரித்து, தவறான நடத்தையைக் கண்டிக்கிற நீதிபரராக.
குழந்தைகளுக்குக் கடவுளைப்பற்றிக் கற்பிப்பதில் திருச்சபையும் ஒரு முக்கியமான காரணிதான்.
சபை நிகழ்ச்சிகளிலே கிரமமாய்க் கலந்துகொண்டு, வீட்டிலும் ஆன்மீகப் பயிற்சிகளில் வளர்கிற பிள்ளைகள் வாழ்வின் எல்லாப் பிரச்னைகளையும் உறுதியோடு எதிர்கொள்ள முடியும்.
ஒரு குழந்தைக்கு ஆன்மாவை வடிவமைக்கும் உறுதியான விசுவாசத்தை வளர்க்கும் நல்ல ஆன்மீகப் பின்னணியைத் தருபவை இல்லமும் சபையுமே.
இல்லமானது ஒவ்வொருவரும் மற்றவர்களுக்காகவும், அனைவரும் கடவுளுக்காகவும் வாழும் இடமாகும். குடும்ப உரையாடல்கள் பெற்றோராகிய நமது இயல்புகளையும், நோக்கங்களையும், பார்வைகளையும் வெளிக்காட்டும்.
சிலவற்றை மறைக்க நாம் முயற்சி செய்யலாம். ஆனாலும், கவனக் குறைவான தருணங்களில், வாயின் வார்த்தைகள் காட்டிக்கொடுத்துவிடும்.
குழந்தைகள் உன்னிப்பாய்க் கவனிக்கிறவர்கள். ஆகவே, குடும்ப உரையாடல்கள் ஏற்றம் பெற பெற்றோராகிய நாம் இதயத்திலும், சிந்தையிலும் பரிசுத்தமாய் இருக்கவேண்டும்.
சரியான உரையாடல்களை விளைவிக்கும் நல்ல இதயங்களையும், சரியான மனப்பான்மையையும், நல்ல ஆளுமையையும் நம்மில் பெறுவதற்கு இயேசு கிறிஸ்து நமது வாழ்வில் தலைவராகவேண்டும்.
இக்குணாதிசயங்களே நமது குழந்தைகளில் நிலைத்திருக்கும் ஆளுமையை உருவாக்க முடியும்.
நல்லொழுக்கத்தின் முக்கியத்துவத்தைக் குழந்தைகளுக்கு விளக்கிச் சொல்லுங்கள். நல்லொழுக்கத்தின் ஓர் அம்சம் நேர்மையாகும்
"மனிதர் அனைவர் முன்னிலையிலும் நன்மதிப்பை இழக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்" (ரோ 12:17).
கண்ணியமான வாரிசு என்பது ஏதோ ஒரு தற்செயல் நிகழ்வல்ல. அக்கறையுள்ள பெற்றோரின் கரிசனை, முயற்சி, நல்ல நடைமுறை வாழ்க்கை இவற்றின் விளைவேயாகும்.
குழந்தை வளர்ப்பின் இறுதிப் பரீட்சை என்பது குழந்தைகளின் நன்னடத்தை எப்படி அமைய நாம் உதவுகிறோம் என்பதில்தான் உள்ளது.
நன்னடத்தை என்பது "சுயக்கட்டுப்பாடு, சுயசித்தம், பழக்கவழக்கங்களை நெறிப்படுத்துதல் இவைகளினால் வரும் ஒரு தார்மீக வலிமையே."
நன்னடத்தை ஒரு பரிசல்ல; அது ஒரு சாதனை. வாலிபத்தோடு வந்து விழும் பரிசல்ல; அது மெல்ல மெல்ல வளரும் ஒன்று.
உண்மையில், அது குழந்தைப் பருவத்தில்தான் உருவாகத் தொடங்குகிறது. தனது இளம் வயதின் நாட்களில் குழந்தை அனுபவிக்கும் வாழ்க்கைத் தரத்தை ஒட்டியே அதின் பிற்கால நடத்தை அமையும்.
பெற்றோராகிய நமது உள்ளான சில பலவீனங்கள்-பொய்கூறுதல், சமரசம் செய்து கொள்ளல், விருப்புவெறுப்புகள், கோழைத்தனம், மடமை போன்றவை-நமது பிள்ளைகளின் எதிரிகளாகக் கூடும்.
நன்னடத்தை என்னும் சிறப்பான மாளிகையொன்றைக் கட்டக் குழந்தைகளுக்கு நாம் உதவவேண்டும்.
காணக்கூடியவை, காணக்கூடாதவை எல்லாவற்றையும் கடவுள் காண்கிறார். ஆகவே குழந்தைகள் இம்மாளிகையைக் கட்ட சரியான பொருட்களையும், வடிவமைப்புகளையும் கொடுக்கவேண்டும்.
குழந்தைகளுக்கான நன்னடத்தையை நாம் வளர்த்துக் கொள்ள முடியாதுதான்; ஆனாலும், அது வளரும் திசையை நிர்ணயிப்பதில் நாம் பெரும்பங்கு வகிக்கமுடியும்.
மனச்சாட்சி குழந்தையின் இளவயதில் உருவாகிவிடுகிறது. இந்த வயதிலேயே இம்மனச்சாட்சியைப் பின்தொடரக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
நன்னடத்தை என்பது கற்றுக்கொள்வதனால் மட்டுமல்ல, காண்பதினாலும் வரும். நல்லது கெட்டது எனத் தெரிந்துகொள்ளும் அறிவு நண்பரிடமிருந்து வருவதைவிடப் பெற்றோரிடமிருந்துதான் குழந்தைகளுக்கு அதிகமாய் வந்தடைகின்றது.
குழந்தைகள் இயற்கையாகவே கவனித்துப் பின்பற்றுகிறவர்கள். மற்றவரின் வாழ்வில் காண்பவற்றையே அவர்களும் செய்ய ஆரம்பிக்கின்றனர்.
உறுதியான நன்னடத்தைப் பண்புகளை நம் குழந்தைகள் வளர்த்துக் கொள்ள உதவுவது ஒரு பொறுப்புமிக்க பணி.
வாழ்வெனும் ஓட்டத்தில் குழந்தைகளே மிகவும் இனிமையான பங்கெடுக்கின்றனர்; கடவுளின் கரத்திலிருந்து வருபவைகளிலேயே மிகவும் தூய பொருள் அவர்கள்தாம்.
எந்தவொரு கள்ளங்கபடுமின்றி வெளிப்படையாகவும், திறந்த மனதோடும் வாழ்கிற பருவம் குழந்தைப்பருவம்தான். மன்னித்து மறக்கும் பருவம் அதுதான்.
நம்புகிற, நேசிக்கிற, கற்றுக்கொள்கிற வயது அதுதான். இயேசு இந்தப் பருவத்தை மதித்தார்; சிறு குழந்தை போல் ஆகாவிடின், விண்ணரசில் நுழைய முடியாது என்றுரைத்தார்.
குழந்தைகளை நமக்குக் கடனாகவே கடவுள் தந்துள்ளார். எதிர்கால வாழ்வின் நாற்றங்காலாகவே குழந்தைப் பருவத்தைக் கடவுள் கருதுகிறார்.
நமது கைவேலையின் மகிமை எத்தகையது எனக்காட்டும் அளவுகோல் நமது குழந்தைகளின் வாழ்க்கைத் தரமே.
ஒழுக்கமே பெரியவர்களை மதிக்கவும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறது. சிலநூறு பெரியவர்களை ஆராய்ந்ததில், "மகிழ்வான குழந்தைப் பருவத்தை அனுபவித்தவர்கள்தான் பிற்காலத்தில் ஒழுக்கமுடையவர்களாய் வளர்கிறார்கள்" என்று கண்டுகொண்டனர்.
கீழ்ப்படிதல் இயல்பாய் வந்துவிடும் குணமல்ல. அதுகற்றுக்கொள்வதால்தான்-அனேகமாய், கீழ்ப்படியாமையின் பலனாய் வரும் பாடுகளிலிருந்து கற்றுக் கொள்வதால்தான்-நம்மில் வரும், வளரும்.
கிறிஸ்துவும் பாடுகளில்தான் கீழ்ப்படியக் கற்றார். சாரமுள்ள ஒழுங்குமுறை கீழ்ப்படிதலைக் கற்றுக்கொடுக்கிறது. கீழ்ப்படிதல் மகிழ்ச்சியை உருவாக்குகிறது.
இப்போதோ, பிறகோ, மேலான அதிகாரங்களுக்குப் பணிந்து செல்லக் கற்றுக்கொண்டேயாக வேண்டும். சுய ஒழுங்கையும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்;
பெற்றோரின் நெறிப்படுத்துதலில்தான் அவர்கள் கற்றுக்கொள்வர். இல்லத்தில் ஒழுங்கு என்பது நியாய உணர்விலும், திறந்த மனதிலும், உறுதியிலும், அன்பிலும் கற்றுக்கொடுக்கப்படவேண்டும்.
பெற்றோரின் தரத்தைக் குழந்தைகள் பின்பற்ற வேண்டுமானால், அதனைப் பெற்றோரின் வாழ்விலும் வார்த்தைகளிலும் குழந்தைகள் பார்க்கவேண்டும்.
"உறுதியாய்க் கைப்பற்றும் தவறான கருத்துக்கள், உறுதியில்லாது கைப்பற்றும் சரியான கருத்துக்களையும் அமுக்கிவிடும் வல்லமை பெற்றுவிடுகின்றன" என்பது கடல் கடந்து பரவியுள்ள உண்மை.
நாம் சரியான கருத்தை உடையவர்களாயிருந்தால், காலங்கள் கரைக்க முடியாத கிறிஸ்தவத் தரிசனமும், கடவுளின் மகிமையும் இவ்வுலகை நிறைக்கும்வரையிலும், அக்கருத்தை உறுதியாய் நம்பி விசுவாசத்தோடும், வீரியத்தோடும், வேகத்தோடும் அறிக்கை செய்வோம்.
வேதத்தைத் தினமும் வாசிக்கக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள் (சங் 119:9). ஆன்மீகக் காரியங்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கற்றுக்கொடுங்கள் (1 தீமோ 4:8).
வயதில் மூத்தவர்க்கு மரியாதை செலுத்த வலியுறுத்துங்கள் (1 பேது 5:5). குழந்தைகளுக்கு முன்னர் பரிசுத்தத்தை இலட்சியமாய் உயர்த்தி வாழுங்கள் (1 தீமோ 5:22).
அரசுச் சட்டங்களுக்குக் கீழ்ப்படியக் கற்றுக்கொடுங்கள் (ரோ 13:1).
வழக்கமாய், "ஒழுங்கு" (னளைஉiயீடiநே) என்ற வார்த்தையைச் சிறியவர்கள் பெரியவர்களிடம் நடந்து கொள்ளும் முறையைச் சீர்படுத்தும் ஒரு செயல் என்று தான் அர்த்தம் கொள்கிறோம்.
ஆனால், உண்மையில், "ஒழுங்கு" என்பது "குழந்தையின் தவறான செயல் பாடுகளைக் கட்டுப்படுத்தி, சரியான செயல் பாடுகளுக்குள் வழிநடத்தி, சமுதாயத்தில் சாரமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான பயிற்சியளிப்பதுதான்." "ஒழுங்கு" என்பதனை "வாழ்வின் சட்டங்களின்படி வாழக் கற்றுக் கொள்வதற்கான பயிற்சி" எனவும் பொருள் கொள்ளலாம்.
"ஒழுங்கு என்பது குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கெடுத்துவிடாதா?" என நீங்கள் கேட்டால், உடனடிப் பதில், "இல்லை" என்பதுதான்.
ஒழுங்குள்ள குழந்தையே மகிழ்வுள்ள குழந்தை. ஆனால், அன்பும் புரிந்துகொள்ளுதலும் இணைந்த ஒழுங்கையே இங்கு குறிப்பிடுகிறோம்.
தன்னைப் புரிந்துகொள்ளும் பெற்றோரின் இடைவிடாத அன்புப் பெருக்கின் பிரதிபலிப்பாகவே குழந்தையின் உள்ளத்தில் அன்பு வளருகிறது.
குழந்தையின் முதல் வயதிலேயே அதனது பிற்கால உணர்வுப் பெருக்கங்களுக்கான விதை ஊன்றப் பட்டுவிடுவதாக அநேக உளவியலர் கருதுகின்றனர்.
அன்பும் ஞானமும் உடைய பெற்றோர்கள், தங்களது குழந்தைகள் ஆசைப்படுவதையெல்லாம்-அவைகளில் சில ஆபத்தானவைகளாய் இருக்க நேர்வதால்- அனுமதித்துவிடமாட்டார்கள்.
ஆனால், பெற்றோரின் விருப்பத்திற்கேற்றவற்றைப் பிள்ளைகள் கேட்கும்போது அவைகளைத் தடையின்றி பெற்றுக்கொள்கின்றனர்.
என்னென்ன ஆசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைப் பெற்றோரின் அன்பே தீர்மானிக்கிறது.
இயேசு "எனக்காக அழாதீர், உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்" என்றார் (லூக் 23:28). நாம் வாழ்கின்ற இக்காலத்தில், தொலைந்துபோனோர்க்காக அழுது மன்றாடுவது என்பது ஏறக்குறைய இல்லாமலே போய்விட்டது.
ஆனால் இரட்சிக்கப்படாதவர்களுக்காய் இயேசு கொண்டிருந்த பாரம் தாங்கமுடியாத தாயிருந்தது. கெத்சமனே தோட்டத்தில் இயேசு சுமந்த பாரமும், பாடுகளும் வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன (மத் 26:36,37).
எரேமியாவும் அவனது மக்களின் தேவைகளைத் தரிசித்தவனாய், "என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமாய் இருக்கக் கூடாதா? கொலையுண்ட என் மக்களுக்காய் அல்லும் பகலும் புலம்பி அழுவேனே!" (எரே 9:1) என ஆற்றாது அழுகின்றான்.
நாம் எடைபோடப்படும் நாளில் குறையுள்ளோராய்க் குன்றி நிற்காமல், நம் குழந்தைகளுக் கான மன்றாட்டுக்களிலும், ஜெபத்திலும் நிலைத்திருந்து ஆண்டவருக்காய்க் காத்திருப்போம்.
நம் குழந்தைகளை வளர்த்த விதம் குறித்து கடவுளுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள் ளோம் என நம்புகிறேன்.
கடவுள் நம்மை நேருக்கு நேர் சந்திப்பாரானால் "என்னைப் பற்றியும், என் வார்த்தைகளைப் பற்றியும் உன் பிள்ளைகளுக்குப் போதித்தாயா" எனக் கேட்பார் என நினைக்கிறேன்.
கடவுளைக் கற்றுக்கொள்ளும் வழி குழந்தைகளுக்கு அது ஒன்றுதான். பெற்றோர்களின் வாழ்க்கை முறையை வைத்துத்தான், சரி-தவறு, நன்மை-தீமை மற்றும் கடவுளின் நிலைப்பாட்டையும் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள்.
நமது வாழ்வில் நாம் செய்வதும், செய்யாமல் விட்டுவிடுவதுமே அவர்கள் கற்றுக்கொள்ள உதவும் படக்காட்சிக் கல்வியாகும்.
இது உங்கள் குழந்தை; ஒரு தனி நபர்; ஏதோ உங்கள்கையில் வளைந்து கொடுக்கும் பொம்மையல்ல. உங்கள் பிள்ளைகளைப் புரிந்துகொண்டு, அவர்கள் எப்படியிருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக்கொண்டு நேசியுங்கள்.
கடனாய் நம் கையில் அவர்களைக் கடவுள் சில காலம் விட்டு வைத்துள்ளார். அவர்களை ஏமாற்றிவிடாதிருப்போம்!
ஞாயிறு, 25 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக