சனி, 27 டிசம்பர், 2008

தேவ குமாரரின் அழைப்பு!

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” என்று தன்னை நாடி வந்த மக்களுக்கு கர்த்தராகிய ஏசு கிறிஸ்து உறுதியளித்தார்.மானுட இனத்தை மட்டுமின்றி, மரம், செடி, கொடிகள் உட்பட தான் இப்புவியில் படைத்த ஜீவன்கள் அனைத்தையும் நொடிப்பொழுதும் கைவிடாமல் காத்துவரும் இறைவன், எவருடைய வேண்டுதலையும் மறுப்பதில்லை என்பதை மானுடத்திற்கு உணர்த்தவே தேவ குமாரராகிய ஏசு கிறிஸ்து இவ்வாறு கூறினார் (மத். அதி. 7.7).அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், நமக்கு ஏற்படும் துன்பங்கள், துயரங்கள், எல்லாம் பெற்றிருந்தும் எதுவுமே இல்லாதது போன்ற வரண்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை நன்கு அமைந்திருந்தும் சமூக வாழ்வில் அடிக்கடி சந்திக்கும் உரசல்கள், வாழ்வை கேள்விக்குறியதாக்கும் மோதல்கள் என்று மனிதன் அமைதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் ஏங்கித் தவிக்கும் போது, அவனது நெஞ்சத்தில் பிறக்கும் கேள்விகள், தேடல்கள். அந்த நிலையில் மானுடன் தனது கேள்விகளுக்கான பதிலை எதிர்பார்த்து இறைவனை நோக்கி திரும்புகிறான். அறிவு கொண்டு சிந்தித்து உரிய பதில் கிட்டாமல், மேற்கொண்டு செல்ல பாதை தெரியாமல், திக்கற்ற நிலையில் அவனுடைய மனதிலிருந்து எழுந்த கேள்விக்குத்தான் ஆண்டவர் அளித்த பதில், “கேளுங்கள் கொடுக்கப்படும்... தட்டுங்கள் திறக்கப்படும்” என்பது.
webdunia photo
WDதேவ குமாரர் அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மேலும் கூறுகிறார் : “ஏனென்றால் கேட்பவன் எவனும் பெற்றுக் கொள்கின்றான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுக்கிறவனுக்கு திறக்கப்படும்” என்று உறுதி கூறியதோடு நிற்காமல், நீங்கள் கேட்பவற்றையே இறைவன் வழங்குவார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்: “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்கு கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பானா?” என்று கேட்டுவிட்டு கூறுகிறார்: “ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (மத்தேயு அதி.7. 9,10,11).நமது வாழ்க்கையில் நாம் கடைபிடிக்கும் சுய நல போக்குகளும், தான்தோன்றித்தனமாக செயல்களுமே நமது துன்பங்களுக்கு காரணம் என்பதையுணர்த்தி, அதனைத் தவிர்க்க ஏசு பெருமான் கூறுகிறார், “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள், இதுவே நியாயப் பிரமாணமும் தீர்க்க தரிசனங்களாகும்” என்று வழிகாட்டியுள்ளார்.வாழ்க்கை நடைமுறைகளில் நாம் கடைபிடிக்கவேண்டிய அணுகுமுறையையும், கொள்ளவேண்டிய மனப்பான்மையையும் இவ்வாறு தெளிவாக கூறியுள்ள ஏசு கிறிஸ்து, ஆன்மீகப் பாதையையும் அற்புதமாய்க் காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: