வியாழன், 2 ஜூலை, 2009

தவறை மன்னிக்கும் தேவன்!

நம்மால் நமக்கே உதவி செய்ய முடியாத நிலை என்ற சூழ்நிலை நம்முடைய வாழ்வில் ஏற்படுவதுண்டு. அதுவரைக்கும் தன்னால் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்ற தன்னம்பிக்கை சில மனிதர்களுடைய எண்ணத்தில் இருப்பதுண்டு.

ஆனால் அந்த தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்கு எப்போதும் உதவுவதில்லை. தன்னை வணங்கவும் தொழுது கொள்ளவும் வேண்டுமென்று இறைவன் விரும்புவது ஒரு புறமிருக்க‌, தன்னைத் தேடுகிறவர்களையும், வணங்குகிறவர்களையும் தொழுது கொள்ளுகிறவர்களையும் இறைவன் உயர்வான நிலைமைக்கு ஆசீர்வதித்ததை நாம் பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கிறோம்.

உடனே இறைவன் தன்னைத் தேடுகிறவர்களுக்கு ஒரு நியாயமும் தேடாதவர்களுக்கு ஒரு நியாயமும் வைத்திருக்கிறாரோ என்று எண்ணத்தோன்றும் இல்லையா? அப்படியில்லை; இறைவன், தம்மை எப்பொழுதும் தேடுகிறவர்களுக்கு எப்போதுமே பலனளிக்கிறார் என்றும் இதுவரை அவரைத் தேடாதவர்கள் எப்பொழுது அவரைத் தேடுகிறார்களோ அப்பொழுது பலனளிப்பார் என்பதும்தான் உண்மை.

பரிசுத்த வேதாகமத்தில் தேவனைத் தேடிக் கண்டு கொண்ட அநேகருடைய வாழ்க்கை வரலாறுகளை நாம் வாசிக்கிறோம். ஆதியாகமம் 16ம் அதிகாரத்தை வாசிக்கும் போது ஒரு எகிப்திய பெண்மணியைக் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.

அவளுடைய பெயர், ஆகார்; அவள் கர்ப்பவதியாயிருந்தாள். ஆகார் தேவனை தேடாமல் குழந்தையில்லாதத் தன் எஜமாட்டியை ஏளனமாகப் பேசிக்கொண்டிருந்தாள். எஜமாட்டியுடைய மனது எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்? கர்ப்பவதியாக இருந்த ஆகாருக்கு உதவி செய்ய வேறு யாருமே இல்லை.

அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்த எஜமானனுடைய மனைவியும் அவளுக்கு உதவி செய்ய முடியவில்லை. எஜமாட்டியுடைய கணவனும் உதவி செய்யவில்லை; எனவே பாலைவனத்தை நோக்கி ஓடினாள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தனக்கு உதவி செய்ய யாருமே இல்லை என்ற எண்ணத்தோடு என்ன செய்வதென்றே தெரியாமல் திகைக்கிறாள். அவள் மனதில் தனக்கு உதவி செய்ய்ய யாருமே இல்லையே என்று ஏங்கின அந்த ஏக்கத்தை தேவன் கண்டு தன்னுடைய தூதனை அவளிடத்தில் அனுப்பினார்.

அப்பொழுது இறைவனுடைய தூதன் ஆகாருக்கு தோன்றி " ஆகாரே எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?" என்று கேட்டார். அதற்கு பதிலாக அவள் " என் எஜமாட்டியை விட்டு ஓடிப்போகிறேன்" என்றாள்.

அப்பொழுது தூதனானவர் " நீ உன் எஜமாட்டியிடம் திரும்பிப் போய், அவளிடம் அடங்கியிரு. உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன், அது பெருகி எண்ணிமுடியாத தாயிருக்கும்" என்றார்.

அப்பொழுது ஆகார் : இந்த இடத்தில் என் ஆண்டவரைக் கண்டேன் என்று சொல்லி என்னைக் காண்கிற தேவன் என்று அந்த இடத்திற்குப் பெயரிட்டாள்.

அவள் அப்படியே கீழ்ப்படிந்து தன் எஜமாட்டியின் வீட்டிற்கு திரும்பிப்போய் தன் எஜமாட்டிக்கு அடங்கி இருந்தாள். தேவதூதனுடைய வார்த்தையின்படியே அவளுக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது. அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிட்டார்கள்.

தேவனை எப்பொழுதும் தேடுகிறவர்களுக்கு தேவன் எப்போதுமே பதில் அளிக்கிறார் என்றும், கஷ்டத்தின் மத்தியில் தன் தவறை உணர்ந்து தேவனைத் தேடிய வேளையில் ஆகாருக்கு தேவன் உதவி செய்தார் என்றும் இதன் மூலம் அறிந்து கொள்ளுகிறோம்.

அதே சமயம் ஆகார் தன் தவறை உணர்ந்து தேவனுடைய அறிவுரையைக் கேட்டு திரும்பி வந்ததால் அவளுடைய எஜமாட்டியும் அவளை ஏற்றுக் கொண்டு அவளை நல்லமுறையில் நடத்தினாள்.

இப்பொழுதும் உங்களில் யாராவது அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பீர்களானால் உங்கள் தவறுகளை உணர்ந்து இறைவனைத் தேடும் போது அவர் உங்களை ஆறுதல் படுத்தி உங்கள் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட வாழ்க்கை நீங்கள் வாழவேண்டும் என்று அவருடைய தூதர்களாகிய இறைப்பணியாளர்கள் மூலம் பேசுவார்.

போதனை : நமக்கு நாமே உதவி செய்து கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையானது அதிகமானால் கர்வத்தையும் அகங்காரத்தையும் உண்டு பண்ணிவிடும். அப்படியானால் நம்முடைய தேவையின் மத்தியில் நமக்கு உதவி செய்ய யாருமே வரமாட்டார்கள்.

அப்படி நம்மை அறியாமல் நாம் தவறு செய்தால் நாம் இறைவனைத் தேட வேண்டும். அப்பொழுது நம்முடைய இறைவன் தவறுகளுக்குத் தக்கதாக நம்மைத் தண்டிக்காமல் நமக்கு உதவிச் செய்ய யாரும் இல்லையே என்று ஏங்குகிற நம்முடைய கஷ்டங்களை அறிந்து நம்முடைய தவறுகளை நமக்கு மன்னித்து புதிய வாழ்வையும் புதிய ஆசீர்வாதத்தையும் தருவார். அவரை நாம் எப்போதும் தேடவேண்டும்.

ஜெபம் : அன்பின் பரலோகப்பிதாவே, என் தவறுகளை எனக்கு மன்னியும். நான் பிறருக்கு தவறு செய்யாமல் என்னைக் காத்துக் கொள்ளும். இயேசுவின் நாமத்தில் ஆமென்.

கருத்துகள் இல்லை: