வியாழன், 12 பிப்ரவரி, 2009

ஆட்சி கவிழ்ப்பு

ஆட்சி கவிழ்ப்பு; கூட்டணி உடைப்பு; இதெல்லாம் முற்றிலும் உண்மையான விசயங்கள். நம்ம வீட்டிலே, இத்தனை பிரச்சனைகளை வைத்துக் கொண்டு, நம்மலாலே மத்தவங்க பிரச்சனையை எப்படி தீர்த்துவைக்க முடியும்?

இன்றைக்கு இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண முயலும்போது, தமிழகத்தில் திமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும்; தமிழக கட்சிகள், மத்தியில் ஆளும் காங்கிரஸுக்கு அளித்துவரும் ஆதரவை நீக்கிக்கொண்டு விட்டால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும் பல்வேறு கோணங்களில், பிரச்சனையை ஆய்வு செய்து பார்த்து செயல்பட வேண்டியதாக இருக்கிறது.

இதெல்லாம், மிகவும் உண்மையான விசயங்கள். வெளிநாட்டிலிருந்து பார்ப்பவர்களுக்கு, இது ஒரு 'இடியாப்பச் சிக்கல்' போல் தோன்றும். இலங்கை பிரச்சனைக்கு எதுக்கு இங்கே ஆட்சி கவிழ்ப்பு நடக்கணும் என்று கேள்வி மேல் கேள்வி எழும்பும். வெளி ஆட்களுக்கு புரியவே புரியாது.

நம்ம வீட்டிலேயே இப்படி 'இடியாப்பச் சிக்கலை' வைத்துக் கொண்டு, நம்மலாலே எப்படி அடுத்தவங்க பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும். ஆதலால்தான், பிரச்சனையில் மேலும் மேலும் குழப்பம் உண்டாகிக்கொண்டு இருக்கின்றது.

'இடியாப்பச் சிக்கலில்' தற்பொழுது ஒரு சிக்கல் தீர்ந்து கொண்டு வருகிறது. அதாவது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு; அது காலத்தின் தீர்வு; தற்பொழுது, காங்கிரஸ் ஆட்சிகாலம் முடிவடைவதால், ஒரு சிக்கல் விலகிவருகின்றது. இனியும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு என்று பயப்படத்தேவையில்லை.

அதே சமயத்தில், புதிய சிக்கல் ஒன்று உருவாகி வருகிறது. அது என்னவென்றால், வரும் பாராளுமன்றத் தேர்தல், அதற்கேற்ற கூட்டணி, தேர்தல் பிரச்சாரம்.

ஆக, நம்ம வீட்டிலே இத்தனை பிரச்சனைகளை வைத்துக் கொண்டு, நாம போய், இலங்கை பிரச்சனையை எப்படி தீர்த்துவைக்க முடியும். அவங்க விதி அவ்வளவுதான்.

இந்த 'ஆட்சி கலைப்பு' அது உள்நாட்டு விவகாரம். அது உண்மையான விவகாரம்கூட. இதையாவது சரி செய்யலாம் அல்லவா? அதையும் சரி செய்யாமல் இருந்தால் எப்படி?

இப்படியே விட்டு வைத்தால், நாளைய அரசாங்கமும், எப்பவும் 'ஆட்சி கலைப்பு' என்ற பயத்தோடேயே, எப்படி தெளிவாக சிந்திக்க முடியும்; அப்புறம் எப்படி செயலாற்ற முடியும்.

'ஆட்சி கலைப்பு' இல்லாமல், ஆட்சியில் இருப்பவர்கள் செயலாற்ற வேண்டுமானால், ஆளுநரை, மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு என்ன தயக்கம்?

அப்படி, மக்கள் நேரடியாக மாநிலத்தை நிர்வாகிக்கும் தலைவரை தேர்ந்தெடுத்தால், அரசியல் கட்சிகள் அழிந்துவிடும். யாரும், சட்டமன்ற சீட்டு கேட்டு, கட்சி வாசலில்வந்து காத்திருக்கப் போவதில்லை. ஆட்களே வராவிட்டால், கட்சி காணாமல் போய்விடும்.

தலைவரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதை, சில கட்சி தலைவர்கள் ஆதரித்து வரவேற்கிறார்கள்; சிலர் அப்படி ஏதுவும் வந்துவிடக்கூடாதே என்று, அஞ்சுகிறார்கள்.

தலைமைப்பண்பு உடைய தலைவர்கள், தன்னம்பிக்கையுள்ள தலைவர்கள், இந்த மாற்றத்தை வரவேற்கிறார்கள். தன்னம்பிக்கையில்லாதவர்கள்தான், புதிய மாற்றங்களை தவிர்க்கின்றார்கள்.

கட்சியின் அடிப்படையில் பார்க்கும்போதுதான், சீனியர் கட்சி, ஜுனியர் கட்சி, சின்ன கட்சி, பெரிய கட்சி, மாநில கட்சி, தேசிய கட்சி என்ற பாகுபாடு தோன்றும். தலைமைப் பண்பின் அடிப்படையில் பார்க்கும்போது, அனைத்து தலைவரும் சமம் என்ற எண்ணம் உருவாகும்.

சாதரண உண்மைங்க: இந்தியாவில், அனைத்து மக்களுக்கும், எழுதப்படிக்கத் தெரியும் என்ற நிலை வந்து விட்டது. ஆதலால், இனி தேர்தல் சின்னம் தேவையில்லை; மக்கள் வேட்பாளரின் பெயரை படித்து ஓட்டுப் போடுவார்கள் என்றாகி விட்டால், கட்சி அலுவலகத்துக்கு, சீட்டு கேட்டு யாரும் வந்து நிற்கப்போவதில்லை. அந்த ஒரு சாதரண மாற்றத்திலேயே, கட்சிகள் அழிந்து போய்விடும். ஆக, மாறிவரும் மாற்றங்களை உணர்ந்து, புதிய வழியில் சிந்தியுங்கள்.

கடல் என்று இருந்தால், புயல் வரத்தான் செய்யும். புயல் வருமுன் காப்பவனே அறிவாளி; வந்தபின் தவிப்பவன் ஏமாளி.

ஆக, அரசு நிர்வாகத்துக்கு ஸ்திரத்தன்மை வேண்டும். அதுதான் முக்கியமான இன்றைய தேவை. அந்த தேவையை, மக்கள் நேரடியாக தேர்ந்தெடுத்துத்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாற்றாக வேறு ஏதாவது வழியிருந்தாலும், அதனை செயல்படுத்துங்கள்.

மாற்றாக, சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, ஒரு முறை மாநில முதல்வரை தேர்வு செய்து விட்டால், பதவிப் பிரமாணம் எடுத்து விட்டால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, அவர்தான் மாநில முதல்வர்; அந்த முதல்வரை, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, பதவியை பறிக்க இயலாது என்று கொண்டு வாருங்கள்.

அப்படி செய்தால், கட்சிகளும் காப்பாற்படும். அரசு நிர்வாகமும் ஸ்திரத்தன்மையை அடையும். 'ஆட்சி கலைப்பு' என்ற பயமில்லாமல், தெளிவாக சிந்தித்து, முடிவெடுத்து, செயலாற்ற முடியும்.

மக்கள் நம்பிக்கைவைத்து ஓட்டுப்போட்டு சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பிவைக்கின்றனர். அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைவைத்து, மாநில முதல்வரை ஒருமுறை, ஒரே ஒரு முறை மட்டுமே, தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவுதான். அதற்குபிறகு, நம்பிக்கையில்லா தீர்மானம் தேவையேயில்லை; அதை முற்றிலுமாக நீக்கிவிடலாம்.

ஆக, ஏதாவது உருப்படியாக செய்யுங்க; புலம்புதை விட்டுட்டு; இலங்கை குடுமக்களை, அவுங்க அரசாங்கமே அழிப்பதை, உங்களாலே ஒன்னும் செய்ய முடியாது; எல்லோரும்போல, நீங்களும் சேர்ந்து தொலைக்காட்சியில், இண்டர்நெட்டில் வேடிக்கையை மட்டுமே பார்க்க முடியும்.

ஆனால், 'ஆட்சி கலைப்பு', உள்நாட்டு விவகாரம். அதையாவது சரி செய்யலாமே.

கருத்துகள் இல்லை: