குடும்பத்தின் பிள்ளைகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இருப்பதில்லை. ஆனாலும் பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாயிருக்க வேண்டுமென்பது தானே ஒவ்வொரு பெற்றோரின் கனவாயிருக்கும்.
இரண்டு பிள்ளைகள் என்பது இரண்டு கண்கள் போலத்தானே! அதில் எந்த கண்ணை வெறுத்து எந்த கண்ணை நேசிக்க முடியும்? சுண்ணாம்பும் வெண்ணெயும் பார்க்க ஒரே போல் இருந்தாலும் ஒரு கண்ணில் வெண்ணெயையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கிற பெற்றோர்களைப் பார்ப்பது மிக மிக அரிது. பிள்ளைகள் நம் அன்பிற்குரியவர்களாயிற்றே!
ஒரு மகன் ஊதாரியாக இருந்தாலும் அவனை வெறுத்து விடுகிற தகப்பனையோ தாயையோ பார்ப்பது மிகவும் அரிது! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே!
அப்படியாக லூக்கா எழுதிய நற்செய்தி நூலில் 15ம் அத்தியாயம் 28 முதல் 32 வரையுள்ள வசனங்களில் ஒரு மூத்த குமாரனைப்பற்றி நாம் வாசிக்கிறோம்.
திரும்பி வந்த இளைய மகனை ஏற்றுக் கொண்டான் தகப்பன். அதைக்குறித்து இதற்கு முந்தைய செய்தியாகிய "திருந்தி வந்த இளைய மகன்" இல் வாசிக்கிறோம்.
அதைக் கண்ட மூத்த மகனோ கோபமடைகின்றான். தகப்பனுக்கு தன் இளைய மகனுடைய வரவில் சந்தோசப்படவா? இல்லை இவ்வளவு நாளும் தன்னோடிருந்த மூத்த மகனுடைய மூர்க்கத்தை மூடவா? என்று என்ன செய்வதென்றே அறியாமல் திகைத்தான்.
மூத்தமகனை உள்ளே வருமாறு தகப்பன் வருந்தி அழைக்கிறான். மூத்த மகனோ வரவில்லை. அப்பொழுது தகப்பன் மனம் எப்படி துடித்திருக்கும்? கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.
தன் இளைய மகன் தன்னை விட்டுப் போன போது அவனைப் பிரிந்த ஏக்கத்தில் இருந்த தகப்பனுக்கு மூத்த மகன் ஆறுதல் அளித்து, உற்ற துணையாக இருந்தது உண்மை தான். அப்படி தகப்பன் மன வேதனைப்பட்ட போது அவனுக்கு ஆறுதல் சொன்னவன், இப்பொழுது தகப்பன் சந்தோசப்படும் போது தள்ளி நிற்பது ஏன்?
"மகனே நீ என்னோடு எப்போதும் இருக்கிறாய். ஆனால் உன் தம்பியோ காணாமல் போனவன் திரும்பி வந்து விட்டான்" என்று தகப்பன் சொல்லக் கேட்டவன் தன் தம்பி திரும்ப வந்ததற்காக சந்தோசப்பட்டிருக்க வேண்டியதிருக்க துக்கப்படுவது ஏன்?
"நாம் சந்தோசமாயிருக்க வேண்டுமே" என்று கூறிய தகப்பனின் தொனியில் ஒரு உண்மை தெரிகிறது. அப்படி சந்தோசப்படுவது நியாயம் தானே என்று சொல்லுகிற தகப்பனின் சந்தோசத்தை நிறைவேற்றாமல் தகப்பனுடைய சந்தோசத்தைக் கண்டு மனம் வெதும்புவது எப்படி சரியாகும்? என்பது தான் அந்த உண்மை.
"என்னுடையதெல்லாம் உனக்குரியது" என்று வாக்குரைத்த தகப்பனின் வாக்கை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தவன் இந்த மூத்த மகன். நமக்கென்று நம் தகப்பன் எதை வைத்திருக்கிறானோ, அதை நம்மைத் தவிர யாரும் எடுத்துக் கொள்ள முடியாது.
திரும்பி வந்த தம்பிக்கு தகப்பன் தன் சொத்தைக் கொடுத்து விடுவானோ என்று சந்தேகப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த சந்தேகத்தையும் தெளிவாக்கும் விதத்தில் அமைந்தது தகப்பனுடைய வாக்குறுதி.
தன் தம்பியை மீண்டும் வீட்டில் சேர்த்தது தகப்பன் செய்தது தவறு என்று நினைப்பதன் மூலம் நல்லது செய்கிற தகப்பனுடைய சுதந்திரத்தையும் இரண்டு குமாரர்களையும் ஒன்று போல நேசிக்கிற தகப்பனுடைய அன்பையும் தன் சுய நன்மைக்காக எதிர்பார்ப்பது போல் இருக்கிறதல்லவா!
தவறே செய்யாத பரிசுத்தவான்கள் யாரும் இந்த உலகில் இல்லை. நாம் செய்த எத்தனையோ தவறுகளை உணர்ந்து திருந்தி வருகிறவேளையில் நம் தகப்பன் நமக்கு மன்னித்தாரல்லவா!
தவறு செய்த யாராக இருந்தாலும் அவர்களை மன்னிப்பது தானே மகான்களுடைய குணாதிசயம்! அப்படிப்பட்ட தகப்பனுடைய குணத்தை நானும் பெறாமல் போனதென்னவென்று எண்ணாமல் இருப்பது எப்படி சரியாகும்?
பிறருடைய தவறுகளை நாம் திருத்துவது என்பதும் அதை விமரிசிப்பது என்பதும் வெவ்வேறு வித்தியாசமான காரியங்கள். திருத்துவதும் அவர்கள் திருந்த உதவுவதும் நல்லது. அதை விட்டு விட்டு விமரிசிப்பதற்க்கு காரணம் சுயநீதி என்ற சுயநலமே!
போதனை : தங்களுடைய வாழ்க்கையில் அநேகக் காரியங்களில் மக்கள் சுயநலவாதிகளாயிருப்பதோடு மாத்திரமல்ல சுயநீதிக்காரர்களாயும் மாறி விடுகிறார்கள். சுய நீதி என்பது நம்மாலன்றி வேறு யாராலும் குணப்படுத்த முடியாத ஒரு வியாதி.
மற்றவர்கள் எல்லோரும் தவறு செய்கிறவர்கள் என்றும், தாங்கள் செய்வது எல்லாமே சரியென்றும் நினைப்பது எந்தவிதத்திலும் நமக்கு உதவாது. பிறர் நம்மை திருத்தவோ, பிறர் திருந்தவோ நாம் உதவுவோம்; விமரிசிக்க வேண்டாம்.
இயேசு கிறிஸ்து தன்னுடைய பாவங்களுக்காக மரிக்காமல் தன் நீதியே மேல் என்று எண்ணாமல் உலகின் மக்கள் அனைவருடைய பாவங்களையும் தன் மேல் ஏற்றுக் கொண்டு பிறருக்காக மரித்தார். அந்த சுயநலமற்ற தியாகத்தை நாம் பின்பற்றுவோமாக!
ஜெபம் : அன்பின் பரலோகப்பிதாவே, என் நீதியெல்லாம் அழுக்கான கந்தை துணியைப்போல் இருக்கிறது என்று ஒத்துக் கொள்ளுகிறேன். தேவ நீதியை நிறைவேற்ற விரும்புகிறேன். நான் பிறருடைய தவறை விமரிசிக்காமல், அவர்கள் திருந்தும்போது சந்தோசப்பட எனக்கு உதவிச் செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
வியாழன், 2 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக