"இயேசுகிறிஸ்துவை நோக்கிப் பார்த்தால் நாம் எப்படிப்பட்ட பாவம் செய்திருந்தாலும் அந்த பாவத்தின் மூலம் வந்த எந்த தண்டனையிலிருந்தும் விடுதலை கிடைக்கும்படி தேவன் வழி செய்தார்"
உலகத்தில் பாவம் பெருகினபோது பாவத்திற்குரிய தண்டனையை பாவம் செய்த மக்களுக்கு அளிக்காமல் மனிதர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக விலங்குகளையும் பறவை களையும் மக்கள் பலி செலுத்தி வந்தனர்.
அதன் காரணமாக அப்பாவி விலங்குகள், பறவைகள் உயிரை விட்டன. இந்த நிலைமை மாறி மனிதனைப் பாவ வழியை விட்டுத் திருத்தும்படிக்கு பல தேவ மனிதர்களையும் இறைப்பணியாளர்களையும், தீர்க்கதரிசிகளையும் இறைவன் உலகிற்கு அனுப்பினார்.
மனிதர்களோ இறைப்பணியாளர்களுடைய ஆலோசனையை ஏற்றுக் கொள்ளாமலும் தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தைகளை நிராகரித்தும் ஜீவித்து வந்தனர். தொன்று தொட்டு பலியிடப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கையும் குறையவில்லை.
பாவம் செய்கிற மனிதர்களுக்காக ஏன் ஒரு விலங்கு மரிக்க வேண்டும்? தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டிய இடத்தில் அப்பாவி விலங்குகள் தண்டிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? பாவம் செய்த மனிதன் தண்டிக்கப்படுவது தானே உலக நீதி!.
தேவனோ அன்பின் வடிவானவர்; அன்பே உருவானவர். அவர் பாவம் செய்கிற மனிதர்களையோ, அவர்களுடைய பாவங்களுக்காக அப்பாவி விலங்குகளையோ தண்டிக்க விரும்பாமல் பாவிகளை மன்னித்து, அவர்களுடைய பாவங்களை நீக்கி, பாவம் செய்வதற்கு காரணமாயிருக்கின்ற சாத்தானின் பிடியிலிருந்து விடுதலையாக்கவும் அவர்களுக்கு நன்மை செய்யவும் அவர்களுக்கென பலியிடப்படவும் ஒரு நிரந்தர பலியாக மரிக்கும்படி, தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார்.
தேவ மனிதர்களையும் இறைப்பணியாளர்களையும் மனிதர்கள் நம்பாமல் போனதால் இயேசு கிறிஸ்து தாமே அவர்களுக்காக மரிக்கும் முன்பு அவர்களுக்கு அறிவு புகட்டவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் அநேக ஞான உபதேசங்களையும், நல்வழிக்கதைகளையும், உவமை களையும் சொல்லி வந்தார்.
ஆனாலும் மனிதர்கள் பாவம் செய்வதையும், பிறருக்கு தீமை செய்வதையும் விட்டு விடவில்லை. ஏன் இயேசு கிறிஸ்துவையே அவர்கள் குற்றங்கண்டுபிடித்தார்கள். அவருக்கு விரோதமாக அவதூறான வார்த்தைகளைப் பேசி வந்தார்கள்.
அவரை தேவ குமாரன் என்று ஏற்றுக்கொள்ளாமல் அவரை விசுவாசிக்காமல் போனார்கள். அப்படியே மனிதர்கள் தங்களைப் படைத்த தேவனையே புறக்கணித்தார்கள். மனிதர்களை தண்டிக்காமல் மக்களுடைய பாவங்களுக்காக இயேசு கிறிஸ்துவே பலியாக மரிக்க வேண்டும் என்பது தேவனுடைய முடிவான தீர்மானமாயிற்று.
இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் வரும் ஆசீர்வாதங்கள்
மனுமக்களுக்காக இயேசு ஏன் மரிக்க வேண்டும் என்ற ஒரு கேள்வி உண்டாகலாம். இறைவன் நினைத்திருந்தால் பாவத்திற்குரிய தண்டனையை இல்லாமல் ஆக்கியிருக்கலாம். ஆனால் நீதி செய்கிற தேவன் அப்படி செய்வது அநீதியாக இருக்கும் அல்லவா!
எனவே பாவத்திற்குரிய தண்டனையை மக்களுக்குக் கொடுக்காமல், தேவன் தன் அன்பின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குக் கொடுத்தார். எனவே இயேசு மனுமக்களுக்காக மரித்தார். அதினாலே நாம் பாவத்திற்குரிய தண்டனையிலிருந்து விடுதலையாக்கப்படுகிறோம்.
அதோடு அநேக ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் நாம் பெற்றுக் கொள்ளுகிறோம். அவற்றில் சில முக்கியமான மூன்று ஆசீர்வாதங்களை நான் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
1. இயேசுவின் மூலம் பாவத்திலிருந்து விடுதலை
2. இயேசுவின் மூலம் வியாதியிலிருந்து விடுதலை
3. இயேசுவின் மூலம் சாபத்திலிருந்து விடுதலை
1. பாவத்திலிருந்து விடுதலை
வேதாகமத்தை வாசிக்கும் போது பழைய ஏற்பாட்டில் ஒரு பாம்பின் மூலம் ஏவாள் ஏமாற்றப்பட்டு தேவன் இட்ட கட்டளையை மீறி பாவம் செய்ததின் நிமித்தம் பாவம் மனுகுலத்தில் நுழைந்தது. (ஆதியாகமம் 3:1-13)
பின்பு தேவனுக்கு விரோதமாக பாவம் செய்த இஸ்ரவேல் மக்களை பாம்பு கடித்தது. மக்களுடைய பாவங்களிலிருந்து அவர்களுக்கு விடுதலை உண்டு பண்ணும்படிக்கு தேவன் ஒரு வழி உண்டு பண்ணினார்.
அதாவது தேவன் மோசேயை நோக்கி வெண்கலத்தினால் ஒரு பாம்பை உண்டு பண்ணி அதை ஒரு கோலின் மேல் ஒட்டவைத்து அதை எல்லோரும் பார்க்கும் படி உயர்த்து; அதை நோக்கிப் பார்த்தவர்கள் அனைவரும் பிழைப்பார்கள் என்று சொன்னார்.
அப்படியே பாம்பு உண்டு பண்ணப்பட்டது. மோசே (மோசஸ்) அதை ஒரு கோலின் மேல் முனையில் கட்டி வைத்தான். அதை நோக்கிப் பார்த்த அத்தனை பேரும் பாம்பு கடியிலிருந்து குணமடைந்தார்கள். (எண்ணாகமம் 21:7-9)
அதனால்தான் எல்லா மருந்து கடைகளிலும் ஒரு கோலில் பாம்பு சுற்றியிருப்பது போல ஒரு அடையாளம் (symbol) இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.
புதிய ஏற்பாட்டில் பாம்புக்கு பதிலாக இயேசுகிறிஸ்துவை நோக்கிப் பார்த்தால் நாம் எப்படிப்பட்ட பாவம் செய்திருந்தாலும் அந்த பாவத்தின் மூலம் வந்த எந்த தண்டனையிலிருந்தும் விடுதலை கிடைக்கும்படி தேவன் வழி செய்தார். (யோவான் 3:14- 15)
பாவம் எதுவும் செய்யாத இயேசு கிறிஸ்து உலகின் மக்களுடைய பாவத்திற்காக கோரச் சிலுவையில் தொங்கினார். எனவே நீங்கள் எந்த பாவம் செய்திருந்தாலும் அந்த பாவத்திலிருந்தும் அந்த பாவத்தின் தண்டனையிலிருந்தும் விடுதலையாக வேண்டுமென்றால் சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள்.
நிச்சயம் உங்களுக்கு சமாதானமும் மோட்சமும் கிடைக்கும். இது பலருடைய வாழ்வில் நடை பெற்றுக் கொண்டிருக்கிற ஒரு உண்மை சம்பவமாக இருக்கின்றது.
பாவம் செய்ததின் மூலம் வருகின்ற குற்ற உணர்வின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளப்போன எத்தனையோ பேர் சிலுவையில் தொங்கும் இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து என்னுடைய பாவங்களுக்காகத் தானே அவர் சிலுவையில் தொங்கி மரித்தார்;
இனி மேல் நான் அந்த பாவத்தின் குற்ற உணர்விலே வாழ வேண்டிய அவசியமில்லை என்று உணர்ந்து மனம் திரும்பியிருக்கின்றார்கள். அதன் மூலமாக சமாதானமும் ஆசீர்வாதமும் அடைந்திருக்கிறார்கள்.
2. வியாதியிலிருந்து விடுதலை
நம்முடைய சரீரத்திலே வியாதி வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இயற்கையின் மாறுபட்ட தட்பவெப்ப நிலைகள் நம் சரீரத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் வியாதிகள் வரலாம். வயதாகும்போது உடல் உறுப்புகளும் உடலின் உள்பகுதியில் செயல்படுகின்ற நாளங்களும் சுரப்பிகளும் மூட்டு எலும்புகளும் ஓய்வின்றி செயல்படுவதால் பழுதடைகின்றன.
சரியான உணவு பழக்க வழக்கங்களை நாம் கடைபிடிக்காமல் இருப்பதாலும் நாம் பலவீனப்படுகிறோம். இந்த வியாதிகளை சரியான உணவு பழக்க வழக்கங்கள் மூலமும் போதிய உடற்பயிற்சி மூலமும் ஓரளவு தற்காலிகமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும்.
ஆனால் முற்றிலுமான சுகம் கிடைக்க வேண்டுமானால் இயேசு கிறிஸ்துவின் அற்புத வல்லமையினால் மாத்திரமே முடியும். காரணம் அவர் சர்வ வல்லமையுடையவர். இயற்கையை அவராலே கட்டுப்படுத்த முடியும். புதிய உடல் அணுக்களையும் திசுக்களையும் அவராலே படைக்க முடியும்.
எனவே தான் பிறவியிலிருந்தே பிறக்கும் போதே கண்பார்வையில்லாதவர்களுக்கு கண் பார்வையளித்தார், நடக்கமுடியாதவர்களை நடக்கச்செய்தார், காது கேளாதோர் காது கேட்கச்செய்தார். அவரிடம் சுகம் பெறுவோம் என்ற விசுவாசத்தில் வந்த வியாதிஸ்தர்கள் எல்லாரையும் சுகப்படுத்தினார்.
ஏசாயா என்ற தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கு முன் (ஏசாயா 53:4-5) "மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடையத் துக்கங்களைச் சுமந்தார்;
நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" என்று தீர்க்கதரிசன மாகச் சொன்னார். அது இப்பொழுதும் நிறைவேறியிருக்கிறது.
புதிய ஏற்பாட்டிலும் " நாம் பாவங்களுக்குச் செத்து நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார். அவரு டைய தழும்புகளால் குணமானீர்கள் (1 பேதுரு 2:24) என்று வாசிக்க முடிகிறது.
தேவனுடைய கற்பனைகளுக்கு மீறி நாம் செய்த பாவங்களின் மூலம் வருகின்ற வியாதிகளின்றும், நம்முடைய ஒழுக்க நெறி தவறிச் செய்த பாவங்களின் மூலம் வருகின்ற வியாதிகளினின்றும் அல்லது கிரமங்களை மீறிச் செய்த பாவங்களின் மூலம் வருகின்ற வியாதிகளின்றும் நமக்கு சுகம் தரும்படிக்கு எந்த பாவமும் மீறுதலும் செய்யாத இயேசு மரித்தார்.
எனவே நம்முடைய பாவங்களின் காரணமாக சில வியாதிகள் நமக்கு ஏற்படுகின்றன. அந்த வியாதிகளை சுகப்படுத்த நாம் பாவ மன்னிப்பைப் பெறவேண்டும்.
நாம் பாவமன்னிப்பைப் பெறவேண்டுமானால் இயேசுகிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார் என்று உணர்ந்து அந்த பாவங்களை விட்டு விட்டு இயேசுவை பின்பற்ற வேண்டும்.
38 வருடங்களாக வியாதியாக இருந்த ஒரு மனுஷனை இயேசு குணப்படுத்திய பின் " நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே" (யோவான் 5:14) என்று சொன்னார்.
கால் நடக்க முடியாத ஒரு மனிதனிடம் "உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட" (மாற்கு 2: 9) என்று சொல்லி அவனை நடக்கச் செய்தார்.
சில வியாதிகள் பிசாசின் கிரியைகள் மூலம் நமக்கு வருகிறது. ஒரு சிறுபையன் வலிப்பு வியாதியினால் (epilepsy) அவதிப்பட்டான்.
அப்பொழுது சீடர்களால் அவனைச் சுகப்படுத்த முடியவில்லை. இயேசுவிடம் கொண்டு வந்த போது அவர் அந்த சிறுவனைப்பிடித்திருந்த பேயை அதட்டினார், உடனை அவனை விட்டு ஓடிப்போய் விட்டது. உடனே சிறுவன் சுகமானான். (மத்தேயு 17:18)
இதிலிருந்து அந்த சிறுவனைப் பாதித்த வலிப்பு வியாதிக்கு பிசாசின் வல்லமையும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.
இன்னொரு இடத்தில் ஊமையும் செவிடுமான ஒரு பையனை குணப்படுத்தும் போது " ஊமையும் செவிடுமான ஆவியே இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று கட்டளையிட்டு அந்த ஆவியை அதட்டினார். அப்போது அந்த ஆவி அவனை விட்டு ஓடிப்போனது அந்த சிறுவன் குணமடைந்தான். ( மாற்கு 9:25)
அந்த சிறுவன் பேசாமலும் காது கேளாமலும் இருக்கக்காரணம் ஒரு அசுத்த ஆவிதான் என்று அறிந்து கொள்ள முடிகிறது. சில சமயங்களில் மருத்துவர்கள் சொல்லுவார்கள், ஊமையும் செவிடும் என்பது குணப்படுத்த முடியாத ஒரு வியாதி. அது தானாக குணமடைய வேண்டும்.
இல்லையென்றால் கடவுள் தான் சுகம் கொடுக்க முடியும் என்று சொல்லுவார்கள். உண்மை தான். மருத்துவர்கள் எல்லா வியாதிகளையும் சுகப்படுத்த முடியுமென்றால் உலகில் யாருமே மரிக்க மாட்டார்களே!
சில சமயம் மருத்துவர்கள் நோயாளியைச் சோதித்துப்பார்த்து விட்டு, எங்களால் ஒரு குற்றத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை. எல்லாம் நன்றாக இருக்கிறது. வியாதிக்கு என்ன காரணம் என்ன மருந்து கொடுப்பது என்று தெரியாமல் இருக்கிறோம் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இயேசு சிலுவையில் மரித்ததின் மூலம் பிசாசின் தலையை நசுக்கி மரணத்தை ஜெயித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்று நாம் விசுவாசிப்போம்; அப்பொழுது பிசாசின் மூலம் வருகின்ற எல்லா வியாதிகளினின்றும் சுகம் கிடைக்கும்.
3. சாபத்தினிறு விடுதலை
நம் முன்னோர் செய்த தவறுகள் மூலம் வருகின்ற சாபங்கள் பின் சந்ததியினரைத் தொடர்ந்து வருகின்றன. அதன் விளைவாக வியாதிகள் ஏற்படுகின்றன. அந்த சாபங்கள் மூலம் வருகிற வியாதிகளைத்தான் மருத்துவர்கள் பரம்பரை வியாதி (hereditary) என்று கூறுகின்றனர்.
இப்படிப்பட்ட வியாதிகளைத் தொடர்ச்சியாக மருந்து எடுப்பதன் மூலம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியும் என்கின்றனர். நிரந்தரமாக குணப்படுத்த முடியும் என்று யாருமே சொல்லுவதில்லை.
இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் இப்படிப்பட்ட வியாதிகளிலிருந்து நிரந்தர சுகம்பெற முடியும். அதோடு சில வீடுகளில் தொடர்ச்சியான மரணங்கள், அடுத்தடுத்து நடைபெறும் சாலை விபத்துக்கள், குடும்பத்திலுள்ள பிள்ளைகளுக்கெல்லாம் குறிப்பிட்ட வியாதிகள், வரிசையாக எல்லா பிள்ளைகளுக்கும் குழந்தையில்லாத் தன்மை இவைகள் கூட சாபத்தினால் வரவாய்ப்பு உண்டு.
சபிக்கப்பட்டவனை சிலுவை மரத்தில் தொங்க வைக்க வேண்டும் என்ற சட்டம் பழைய ஏற்பாட்டில் இருந்தது. (உபாகமம் 21:23)
அப்படியே சாபம் எதுவும் இல்லாத இயேசு கிறிஸ்து நம்முடைய சாபங்களைத் தன் மேல் ஏற்றுக் கொண்டு சிலுவை மரத்தில் நம்முடைய சாபங்களுக்காக மரித்தார். நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் சாபத்திலிருந்து விடுதலை பெறுகிறோம். (கலாத்தியர் 3:13).
சாபத்தின் மூலம் அநேக ஆசீர்வாதங்களை நாம் இழந்து விடுகிறோம். இயேசு கிறிஸ்து நம்முடைய சாபங்களை தன் மீது ஏற்றுக் கொண்டு அவர் நமக்காக சாபமானார் என்று விசுவாசிக்கும் போது இழந்து போன ஆசீர்வாதங்களைத் திரும்ப பெற்றுக் கொள்ளுகிறோம்.
போதனை : ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்தார் என்று முற்றிலுமாக விசுவாசிக்கும் போது, பாவத்திலிருந்தும் வியாதியிலிருந்தும் சாபத்திலிருந்தும் விடுதலை பெற்று அவரால் கிடைக்கும் நிரந்தர சுகத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஜெபம் : அன்பின் பரலோகப்பிதாவே, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். அவர் மூலம் எனக்கு பாவத்திலிருந்து மீட்பும் நோயிலிருந்து சுகமும் சாபத்திலிருந்து விடுதலையும் தர கெஞ்சி மன்றாடுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்!
வியாழன், 2 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக