'ஸிண்டர் கிளாஸ்' என்னும் டச்சு வார்த்தையின் அமெரிக்க வடிவமே 'சேண்டா கிளாஸ்’. அமெரிக்காவில் குடியேறிய மக்களிடமிருந்து இந்த கிறிஸ்துமஸ் தாத்தா வழக்கம் அமெரிக்காவிற்குள் குடியேறியிருக்க வேண்டும்.
பரிசுகள் வழங்குவதும், வாழ்த்து அட்டைகள் பரிமாறுவதும், பொம்மைகள் தயாரிப்பதும் என கிறிஸ்துமஸ் தாத்தாவும் பிரபலமடையத் தொடங்கினார்.
1822இல் வெளியான 'எ விசிட் ஃப்ரம் செயின்ட் நிக்கோலஸ்’ என்ற பாடல் (எ நைட் பிஃபோர் கிறிஸ்துமஸ்) கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பற்றி விளக்குகிறது. அவர் பைப் புகைத்தபடி வருவார். ஒரு பெரிய பையில் குழந்தைகளுக்காக பொம்மைகள் சுமந்து வருவார்.
மூக்கு செர்ரி பழம் போலவும், கன்னங்கள் ரோஜா போலவும் ஜொலிக்கும். வெண்தாடி மிருதுவான பனியைப் போல அலை பாயும். இப்படி விவரிக்கும் இந்தப் பாடல் உலகப்புகழ் பெற்றதாகி விட்டது. இதுவே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவத்தை ஒரு பொதுவான சித்தரிப்புக்கு இட்டுச் சென்றது.
நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகளில் கிறிஸ்துமஸ் தாத்தா வெள்ளைக் குதிரையில் வருகிறார். பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளில் கழுதை மேல் அமர்ந்து வருகிறார். நவீன யுகத்தில் சமீபத்தில் ஹெலிகாப்டரில் தாத்தா வந்திறங்கியது புதுமைச் செய்தி.
இத்தாலியில் பிஃபானா என்னும் கிறிஸ்துமஸ் பாட்டி இருந்திருக்கிறார். கிறிஸ்துமஸ் தாத்தாவைப் போலவே குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி மகிழ்ந்திருக்கிறார்.
தாத்தா இன்றைய கொண்டாட்ட விழாக்களில் ஒரு கோமாளியாகவோ, குழந்தைகளுக்குச் சிரிப்பூட்டும் ஒரு நபராகவோ இருக்கிறார். ஆனால் அவருடைய வாழ்வு, வாழ்வின் வெற்றிடங்களை மனிதநேயம் கொண்டு நிரப்புவதாகவே இருக்கிறது.
நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ பரிசுகள் வழங்குவது விழாவையோ, கிறிஸ்துமஸ் தாத்தாவின் நினைவையோ அர்த்தப்படுத்தாது. ஏழைகளையும், நிராகரிக்கப்பட்டவர்களையும் பரிசு கொடுத்து அரவணைப்பதே விழாவை அர்த்தப்படுத்தும்.இயேசுவே சொல்கிறார்...
‘உங்களை அன்பு செய்பவர்களையே நீங்களும் அன்பு செய்தால் அதனால் எந்த பயனும் இல்லை'‘எல்லோரிடமும் அன்பு செய்யுங்கள்’ என்ற தேவ குமாரரின் வேதவாக்கையே கிறிஸ்துமஸ் தாத்தா தனது செய்கையால் ஒரு பாடமாக்கியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக